பவானி ஆறு தடுப்பணை தடுப்புக் குழு நடத்தும் அறப்போராட்டத்தில் மதிமுக பங்கேற்கும்.
தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான ஏரி, குளம், கண்மாய்களில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து, அங்கு பெருகும் தண்ணீரை அடியோடு உறிஞ்சுவதோடு, தண்ணீரின் கொள்ளளவையும் குறைத்துவிடுகின்றன. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் 2015 இல் நான் தொடுத்த ரிட் மனுவின் மீது தீர்ப்பளித்த நீதியரசர் செல்வம், நீதியரசர் கலையரசன் ஆகியோர் தமிழ்நாடெங்கும் அனைத்து இடங்களிலும் குறிப்பாக நீர்நிலைகள், நீர்வரத்துக் கால்வாய்களில் சீமைக் கருவேல மரங்களை முற்றாக அகற்ற ஆணை பிறப்பித்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க வழிகாட்டினர்.
ஆனால், பொதுப்பணித்துறை கண்மாய்கள் பலவற்றில் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. வேலிகாத்தான் எனப்படும் தமிழகத்தை நாசமாக்கும் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற தமிழக அரசு முன்வருவதோடு, நீதியரசர்கள் தங்கள் ஆணையில் தெரிவித்தவாறு சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்றுவதோடு, அதற்குத் தேவையான நிதியை தாராளமாக ஒதுக்க வேண்டும்.
ஏரி, கண்மாய், குளங்களில் பல நூறு ஆண்டுகளாக படியும் வண்டல் மண்ணையும், கரம்பை மண்ணையும் விவசாயிகள் தங்கள் மாட்டு வண்டிகளில் குவித்துக் கொண்டுபோய் குப்பைக் குழிகளிலும், தங்கள் நிலத்திலும் பரப்பினர். நான் பள்ளி மாணவனாக இருந்தபோது, எங்கள் கிராமத்தில் நானே அந்த வேலையில் ஈடுபட்டேன். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஏரி, குளங்களில் விவசாயிகள், ஆயக்கட்டுதாரர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்கு மண் எடுப்பதற்குக் கூட அரசு அனுமதிப்பது இல்லை. கட்டணம் வசூலிப்பது, பாஸ் கொடுப்பது என்ற தவறான முறைகேடுகள் நடக்கின்றன. எனவே, தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்களில் விவசாயிகளும், ஆயக்கட்டுதாரர்களும் கரம்பை மண் எடுப்பதற்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன்.
காவிரி நடுவர்மன்றத் தீர்ப்புக்கு எதிராக பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு 6 இடங்களில் தடுப்பணைகள் கட்ட முயற்சித்தது. இதில் தேக்குவட்டை எனும் இடத்தில் தடுப்பணையைக் கட்டி முடித்துவிட்டது.
கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பவானி ஆறு தடுப்பணை தடுப்புக் குழு மேற்கொள்ள இருக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு கேட்டு, அதன் தலைவர் காசியண்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் ஈரோடு பொன்னையன், பேராசிரியர் கணகுறிஞ்சி, பொறியாளர் இராமசாமி ஆகியோர் என்னை நேற்று 21.03.2017 இல் தாயகத்தில் சந்தித்து, போராட்டத்திற்கு ஆதரவு கேட்டனர்.
அதன் அடிப்படையில் பவானி ஆறு தடுப்பணை தடுப்புக் குழு நடத்தும் அனைத்து அறப்போராட்டங்களிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையாகப் பங்கேற்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்றைய 22-03-2017 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment