ஆந்திர மாநிலத்தின் சித்தூர் பகுதியில், செம்மரக்கட்டைகளை கடத்தினார்கள் என திட்டமிட்டு பொய் குற்றஞ்சாட்டி, தமிழகத்தை சேர்ந்த 20 அப்பாவி கூலித்தொழிலாளர்களை சித்திரவதை செய்து சுட்டு படுகொலை செய்த ஆந்திர காவல் துறையை கண்டித்து, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி, தமிழர் நீதிப்பேரணி தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு தலைமையில் பெருந்திரளாக அமைந்திருந்தது. அதிமுக திமுகவிற்கு அதிர்ச்சி தரும் வகையில் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
தமிழர் நீதிப்பேரணியானது கிண்டி ரேஸ்கோஸ் கிளப் அருகிலிருந்து தொடங்கி தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றது. பேரணி தொடங்கிய சிறுது நேரத்தில் காவல்துறையினர் வாகனத்தை குறுக்கே நிறுத்தியும் தடுப்புகளை அமைத்தும் பேரணியை மறித்தனர். எனவே அங்கிருந்து வைகோ, திருமா, வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை மனுவோடு வாகனங்களில் புறப்பட்டு சென்று ஆளுனர் மாளிகையில் மனுவை கையளித்தனர். இந்நிலையில்தான் அனைத்து கட்சி தொண்டர்களும் காவல்துறையின் தடுப்பு அரணுக்குள்ளே அடைத்துவைக்கப்பட்டனர். தொண்டர்களை போகவிட்டால் கவர்னர் மாளிகை நோக்கி தலைவர்களை பின்தொடர்வார்கள் என்ற அச்சத்தில் காவல்துறை அறிவிக்கப்படாத திறந்தவெளி சிறைச்சாலையை மூடினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தொண்டர்கள் காவல் துறையின் தடுப்புகளை தாண்டித்தான் தங்கள் வாகனங்களை அடைய முடியும் என்ற அபாயகரமான சூழலை தமிழக காவல்துறை உருவாக்கியது. காவல் துறையின் தடுப்பருகே ஏற்பட்ட இட நெருக்கடியால் மூச்சுத்திணறிய வயதானவர்களும், பெண்களும், நிலைகுலைந்து போயினர். இந்த கூட்ட நெரிசலில் தங்களை காப்பாற்றிக்கொள்ள சிலர் இடதுபுறமிருந்த கிண்டி இரயில் நிலையம் பக்கமாக ஏறிக்குதித்தனர்.
இந்த நேரத்தில்தான் தமிழகத்தை உலுக்கிய இந்த கோரச்சம்பவம் அரங்கேறியது.
மக்கள் ரயில் நிலையத்தை கடந்துகொண்டிருக்கும் போதுதான் ஒரு வெடிச்சத்தம் போல பெரிய சத்தம் கேட்டது. கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க, தமிழக வாழ்வுரிமை கட்சியின் அருமை சகோதரர் சிதம்பரத்தை சேர்ந்த "வினோத்" ரயில் தண்டவாள வழியை கடக்க முயன்றார். அப்போது கையில் வைத்திருந்த உயரமான இரும்பு கொடி கம்பியானது, மின்சார புகைவண்டி இயங்க மின்சாரமளிக்கும் உயர் அழுத்த மின்சார கம்பியில் உரச, கரிக்கட்டையாய் தூக்கிவீசப்பட்டார் வினோத். வயிற்றுப்பகுதி எரிந்துகொண்டே இருந்தது. மரண வேதனையால் வினோத்தின் கைகள் துடித்தது. 90% உடல் கருகிப்போன வினோத்தை காவல் துறை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு எடுத்து சென்றது. வினோத்திற்கு ஏற்ப்பட்ட விபரீதம் தொண்டர்கள் மத்தியில் பரவினால் ஆபத்து என்பதை உணர்ந்த காவல் துறை, அவசரம் அவசரமாக தடுப்புகளை அகற்றி அங்கே இருந்து தொண்டர்களை வெளியேற்றியது.
தமிழக காவல்துறையின் தவறான அடக்குமுறையால் இந்த கோர சம்பவம் நடந்தேறியது. தடுப்பு அமைக்காமல் இருந்திருந்தால் வினோத்தின் மரணத்தை கண்டிப்பாக தடுத்திருக்கலாம்.
இந்த செய்தியானது, 20 தமிழரின் நீதிக்காக மனுவை கையளிக்க ஆளுநர் மாளிகைக்கு சென்ற தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பின்னர் மருத்துவமனைக்கு சென்ற தலைவர்கள் உயிருக்கு ஊசலாடிகொண்டிருந்த சகோதரரை பார்க்க, தலைவர்களின் நெஞ்சங்கள் உருகி போனது.
இன்று மதிய வேளையில் சகோதரர் வினோத் நம்மை விட்டு பிரிந்து தியாக சுடர் ஆனார்.
தமிழீழ தமிழருக்கு நீதி வேண்டி சகோதரர் முத்து குமார் தியாக சுடர் ஆனார்,
3 தமிழரின் தூக்கு கயிரை அறுக்க, அவர்களின் நீதிக்காக சகோதரி செங்கொடி தியாக சுடர் ஆனார்.
சகோதரர் வினோத் அவர்களும் அதன் வரிசையில், ஆந்திர காவல் துறையால் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் நீதிக்காக தியாக சுடர் ஆனார்.
தமிழர்கள் உயிர் கொடையளிக்க நீதிகள் நிலைநாட்டப்பட வேண்டுமென்பதே அனைவரது ஆதங்கமாக இருக்கிறது.
வினோத்தின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போரின் இதயங்களை உறைய வைத்தது. பின்னர் தலைவர்கள் வைகோ, திருமா, வேல்முருகன், பிற அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் சகோதரர் வினோத்திற்கு மலர் வைத்து இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாகவும் சகோதரர் வினோத் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment