தமிழ்நாட்டில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் தொழில், பால் உற்பத்தி ஆகும். தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, மொத்தம் 11 ஆயிரத்து 503 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதோடு மகளிருக்கென 1793 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் இருக்கின்றன.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இணைந்துள்ள 2 இலட்சத்து 11 ஆயிரத்து 742 பால் உற்பத்தியாளர்கள்,பால் உற்பத்தி செய்து ஆவின் நிறுவனத்துக்கு விற்பனை செய்கின்றனர். ஆவின் நிறுவனத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 28 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் பால் தேவை நாளொன்றுக்கு 1.50 கோடி லிட்டர் ஆகும். இதில் தனியார் நிறுவனங்கள் மூலம் 1 கோடியே 25 இலட்சம் லிட்டரும், ஆவின் நிறுவனம் மூலம் 25 இலட்சம் லிட்டர் பாலும் விற்பனை செய்யப்பட்டு, மக்களின் பால் தேவை பூர்த்திசெய்யப்படுகிறது.
தமிழக அரசு கடந்த 2014 அக்டோபர் மாத்தில் பால் கொள்முதலில், பசும்பால் விலையை ஒரு லிட்டர் ரூ.5 ம், எருமைப்பால் ஒரு லிட்டர் ரூ. 4ம் உயர்த்தி, முறையே ரூ. 28 மற்றும் ரூ.35 என பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வந்தது. தமிழ்நாடு முழுவதும் தற்போது பால் கூட்டுறவு மையங்களில் பால் கொள்முதல் செய்யும் போது பாலின் தரம், அடர்த்தி நிலையைக் காரணம் காட்டி, அரசு நிர்ணயித்துள்ள விலையில் இரண்டு ரூபாய் குறைத்து வழங்கப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் புகார் கூறியுள்ளனர். கூட்டுறவு மையங்களில் பால் கொள்முதலை 10 விழுக்காடு அளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி அறிந்து ஓ.பன்னீர்செல்வம் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
தொடர்ச்சியாக வேளாண்மைத் தொழிலில் ஏற்பட்டு வரும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், சிமெண்ட் விலை உயர்வு, மணல் விலை உயர்வு போன்ற காரணத்தால் வேலையின்றி தவிக்கும் கட்டுமானப் பணியாளர்களுக்கும், கால்நடை செல்வங்கள்தான் ஆதாரமாக இருக்கின்றன. பால் உற்பத்தி தொழில்தான் ஏழை எளிய மக்களை வாழ வைத்து வருகின்றது. இச்சூழலில் அரசு நிர்ணயித்த பால் கொள்முதல் விலையைக் குறைத்து வழங்குவதும், பால் கொள்முதல் அளவை குறைப்பதற்கு உத்திரவிட்டுள்ளதும் வன்மையான கண்டனத்துக்கு உரியது.
அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளால் மக்கள் தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்வதற்கு கட்டாயமாக தள்ளப்பட்டுள்ளனர். இதனைச் சாதகமாகக் கருதுகின்ற தனியார் பால் நிறுவனங்கள் விவசாயிகளிடம் பால் கொள்முதல் விலையில் மூன்று ரூபாய் குறைத்துவிட்டன.
கால்நடைகளுக்கு தீவனங்கள் அளித்து பராமரிக்க முடியாமல் கிராமப்புற மக்கள் திணறிக்கொண்டு இருக்கின்றனர். அ.தி.மு.க. அரசு அறிவித்தபடி கால்நடை தீவனங்கள், பசுந்தாள் தீவனம் மற்றும் உலர் தீவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் உருப்படியாக செயல்படவில்லை. விவசாயிகள் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் கால்நடைகளைப் பராமரித்து பால் உற்பத்தி செய்தால், அரசு சார்பில் இயங்கும் பால் கூட்டுறவு மையங்கள் அதை முழுமையாகக் கொள்முதல் செய்ய மறுப்பதும், கொள்முதல் விலையைக் குறைத்துத் தருவதும் முறையற்ற செயல் ஆகும்.
இலட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களை பாதிக்கும் இந்நிலை தொடர்வதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். தனியார் பால் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்துவதுடன், தனியார் பால் நிறுவனங்கள், பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் மற்றும் பால் விற்பனை செய்யவும், விலை நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment