மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு வைகோ வாழ்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வைகோ வாழ்த்து செய்தி அனுப்பினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதிப்பிற்குரிய சீத்தாராம் யெச்சூரி அவர்கள், ஆந்திர மாநிலத்தில் கோதாவரிக் கரையில் யெச்சூரி கிராமத்தில் செல்வாக்கு மிக்க புகழ்வாய்ந்த குடும்பத்தில் பிறந்தவர். இவரது பாட்டனாரும், தந்தையாரும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகித்தவர்கள்.
மாணவப் பருவத்திலேயே பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தில் அகில இந்திய அளவில் பொறுப்பு வகித்தவர். பொருளாதாரம், தத்துவம் இவற்றில் உயர்கல்வி பெற்றவர். பண்டைய இதிகாசங்கள், இலக்கியங்கள், சமகால இலக்கியங்கள் வரை கற்றுத்தேர்ந்த ஞானம் உடையவர். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்களான சுந்தரய்யா, பசவபுன்னையா, நம்பூதிரிபாட், ரணதிவே, கர்கிசன்சிங் சுர்ஜித் ஆகியோரின் அளவற்ற அன்பையும், மதிப்பையும் பெற்றவர்.
நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஆணித்தரமாக வாதங்களை முன் வைப்பதில் வல்லவர். தலைசிறந்த முற்போக்கு சிந்தனையாளரும், செயல் வீரருமான சீத்தாராம் யெச்சூரி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த பணியில் அவர் மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளரான ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டதற்கும் வைகோ அலைபேசியில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment