பேரறிஞர் அண்ணா அவர்களின் இயக்கத்தில் இளமைப் பருவத்தில் தன்னை ஒப்படைத்துக்கொண்ட நாகூர் அனீபா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அரும்பாடுபட்டார். இயற்கையின் அருட்கொடையாக அவருக்குக் கிடைத்த கம்பீரமும், காந்தமும் நிறைந்த கானக் குரலை, இறைப்பணிக்கும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தினார்.
‘அழைக்கின்றார் அண்ணா’ என ஓங்கி ஒலித்த பாடல், கோடான கோடி தமிழர்களின் இதயங்களில் அண்ணாவைச் செதுக்கியது.
‘ஓடி வருகிறான் உதயசூரியன்’ என்ற பாடல் கழகத்தின் அனைத்து மேடைகளிலும், மாநாடுகளிலும் ஒலித்தது, கழகத்தை வளர்த்தது. இயக்கத்திற்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது,
“தமிழ் மணக்கும் திசை எல்லாம் தேடினேன் உன்னை
சான்றோர் தம் அவையெல்லாம் அலையவிட்டேன் கண்ணை
எங்கே சென்றாய்?எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்?”
என அவர் பாடியதைக் கேட்கும்போது கண்கள் குளமாகும்.
அவரது இசுலாமியப் பாடல்கள், உலகெங்கிலும் வாழும் இசுலாமிய மார்க்கத்தைச் சேர்ந்த தமிழர்களது இல்லங்களில் நாள்தோறும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.
அவரது அழைப்பின் பேரில் நாகூரில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி, அவரது இல்லத்தில் அன்னாரின் விருந்தோம்பலில் திளைத்த மகிழ்ச்சி என் மனதைவிட்டு என்றும் நீங்காது.
மேலப்பாளையத்தில் இiசு முரசு அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் என் உரையில் அவர் மனம் நெகிழ்ந்தார். திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகளில் நான் உரையாற்றிய பின்னர், என் கன்னத்தைப் பிடித்துப் பாராட்டிய பாங்கு மறக்க முடியாதது.
ஈழத்தில் இருந்து நான் திரும்பி வந்தபோது, என்னை உச்சி மோந்து கரங்களைப் பற்றியதை எப்படி மறப்பேன்?
‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற அவரது பாடலையும், ‘கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே’ என்ற அவரது பாடலையும் அதிகாலை வேளைகளில் அவ்வப்போது கேட்பேன். எனது கார்ப் பயணங்களிலும் அவரது பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கும்.
2004 இல் நதிகள் இணைப்புக்காக நான் நடைபயணம் சென்றபோது நாகூரில் எனக்கு வரவேற்புக் கொடுத்து, அரபு நாட்டில் அவருக்கு வழங்கப்பட்ட வெண்பட்டு ஆடையை அணிவித்து மகிழ்ந்தார்.
இசை முரசு அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது கானக்குரலும், பாடல்களும் என்றைக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்; காலத்தை வென்று நிற்கும்.
அவரை இழந்து துயரத்தில் தவிக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment