தேசிய மீனவர் பேரவை சார்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி, 13 கடலோர மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் நடத்த இருக்கின்ற பேரணிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கிறது. மூன்று மிக முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம் நடைபெறுகிறது.
மீனவர் நலனுக்கு எதிரான மீனாகுமாரி குழு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு ஆழ்கடலில் மீன் பிடிப்புக்கான புதிய உரிமங்கள் வழங்கக் கூடாது; இந்திய பாரம்பரிய மீனவ சமூகத்திற்கு ஆழ்கடல் மீன்பிடி உரிமம் வழங்குவதன் மூலம் மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் போன்ற நியாயமான கோரிக்கைகளை தேசிய மீனவர் பேரவை முன்வைத்துள்ளது.
பா.ஜ.க அரசு, பிரதமர் மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டத்தை செயற்படுத்த விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது. அதைப் போன்று இந்திய கடல்வளத்தை பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு வாசலை திறந்துவிட்டிருக்கின்றது. பிரதமர் பதவி ஏற்றவுடன் திரு நரேந்திர மோடி அவர்கள் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றுதான் மீன்வளத்தைப் பெருக்கி பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் ‘நீலப்புரட்சி’ என்று கூறப்பட்டது. இதனை செயற்ப்படுத்துவதற்கு மத்திய மீன்வளத்துறை இணை இயக்குநர் டாக்டர் மீனாகுமாரி தலைமையில் 7 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
இக்குழுவின் அறிக்கை கடந்த 2014, ஆகஸ்டு மாதம், மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. டாக்டர் மீனா குமாரி குழு அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தும் இந்திய பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதால் இந்திய மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மீனாகுமாரி குழு பரிந்துரைகளின்படி, கடல் பகுதியில் தனியானதொரு பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone - EEZ) அமைக்கப்படும். 12 கடல் மைல்கள் தொலைவுக்கு அப்பால் மீனவர்கள் செல்ல முடியாது. 200 முதல் 500 அடி ஆழம் உள்ள ஆழ்கடல் மீன் பிடிபகுதி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக (Buffer Zone) அறிவிக்கப்படும். இந்த ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமம், பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை இருக்கிறது. ஆனால் ஆழ்கடலில் பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்படும்.
இந்திய கடலோரப்பகுதி 8041 கி.மீ., நீளம் கொண்டது. இதில் 5 இலட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் மீன்வளம் நிறைந்து கிடக்கின்றது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடல் வளத்தை தாரை வார்க்கக் கூடாது என்று மீனவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை அலட்சியப்படுத்திய பா.ஜ.க அரசு, 270 பன்னாட்டு ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களுக்கு உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பம் பெறுவதற்கு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதனால் 9 மாநிலங்கள், 4 யூனியன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீன் வர்த்தகத் தொழிலை நம்பி உள்ள ஐந்து கோடி மக்களின் வாழ்வுரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, வறுமையின் கோரப்பிடியில் தள்ளிவிடும் மோடி அரசு கொண்டுவந்துள்ள பெரு நிறுவனங்களின் பகல் கொள்ளைக்கு வழிவகுக்கும் ‘நீலப்புரட்சி’க்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், மீனா குமாரி குழு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment