“இந்த உலகத்தை இயக்குகின்ற மூலதனமான சக்திதான் தொழிலாளர்களின் உழைப்பாகும்” என்ற உண்மையை பாட்டாளி வர்க்கம் உதிரம் சிந்தி செய்த பிரகடனத்தைத்தான் மே நாளாக உலகம் கொண்டாடுகிறது.
1886 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி சிகாகோ நகரத்தில் தொழிலாளர்கள் நடத்திய உரிமைப் பேரணியில் காவல்துறை கொடிய அடக்குமுறையை ஏவியது. துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயமுற்றனர். நான்கு பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தொழிலாளர் தலைவர்கள் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1888 இல் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு மே முதல் நாளை தொழிலாளர்களின் உரிமை நாளாக அறிவித்தது. அதற்கு அடுத்த ஆண்டு 1889 ஜூலை 14 இல் பிரெஞ்சு புரட்சியின் 100 ஆவது ஆண்டு விழா, பொதுவுடமை தத்துவத்தின் இரண்டாவது அகில மாநாடாக பாரீஸ் பட்டணத்தில் கூடி, “மே முதல் நாள் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கை நாள்” என்று அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கடந்த 126 ஆண்டுகளாக மே முதல் நாள் பாட்டாளி வர்க்கத்தின் உரிமை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தொழிலாளர் வர்க்கம் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக மட்டும் போராடாமல், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், காலனி ஆதிக்கத்தை எதிர்த்தும், தேசிய இனங்களின் விடுதலைக்காகப் போராடியும், வரலாற்றை உலுக்கிய புரட்சிகளில் முக்கியப் பங்காற்றியது.
கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மீண்டும் அரங்கேற்றும் விதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஏழைத் தொழிலாளர்களை ஆந்திர அரசின் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி, சித்திரவதை செய்து, படுகொலை செய்துள்ளனர். இந்தக் கோரக் கொலைகளுக்குக் காரணமான குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றி தண்டிக்க உறுதி ஏற்போம்!
உழைக்கும் உத்தமர்களாம் தொழிலாளர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment