உலகத்தின் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்ட தமிழர்கள், உழவுத் தொழிலைப் போற்றி, எருதுகள், கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கின்ற வகையில், அறுவடைத் திருநாளைத் தைப்பொங்கல் திருவிழாவாக நெடுங்காலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இஞ்சி, மஞ்சள், கரும்புடன், புதுப்பானையில் புத்தரிசி இட்டுச் சர்க்கரைப் பொங்கல் படைத்துப் பெற்றோரோடும் இல்லத்து அரசியோடும், மக்கள் செல்வங்களோடும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று குதூகலத்தோடு குலவையிட்டு மகிழ்கின்ற நாள்தான் தைத்திருநாள் ஆகும்.
‘உலகத்தாருக்கே அச்சாணி’ என வள்ளுவப் பெருந்தகையால் வருணிக்கப்பட்ட உழவர்களின் வாழ்வில் எண்ணற்ற இன்னல்கள் சூழ்ந்து விட்டன. அரசாங்கமே ஊக்குவித்த ஆக்கிரமிப்புகளால் நீர்நிலைகள், ஏரி குளங்கள் காணாமல் போய்விட்டன. நீர் வரத்து பாதிக்கப்பட்டு விட்டது. இந்தத் துயரத்தில் இருந்து விவசாயிகள் விடுபட வேண்டும். காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தின் அடையாளமாக நடைபெற்று வந்த பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குத் தடை நீடிப்பது, தமிழர்களின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அறைகூவல்களை எல்லாம் எதிர்கொள்கின்ற வகையில், ஊழல் இல்லாத, மதுவை ஒழிக்கின்ற நேர்மையான ஓர் அரசு, மக்கள் நல அரசாக மலரத் தமிழக மக்கள் உறுதி ஏற்கும் நாளாக இந்தப் பொங்கல் அமையட்டும்.
தமிழ்நாட்டு அரசியலில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற நல்வாழ்வுப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கக்கூடிய அத்தனை ஜனநாயக சக்திகளும், புதிய விடியல் காணச் சூளுரை மேற்கொள்வோம். புறநானூற்றின் வழிவந்த புயங்களோடு சுழன்று பணியாற்றுவோம்; மலரட்டும் உழைக்கும் மக்களின் நல்லாட்சி!
உலகம் முழுமையும் பொங்கல் கொண்டாடி மகிழ்கின்ற தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என வைகோ தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment