காஷ்மீர் மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீத் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.
1989 ஆம் ஆண்டு அமைந்த வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது அவரை நான் நன்கு அறிவேன். பழகுவதற்கு இனிய பண்பாளர். சிறந்த கல்வியாளர். முஃப்தி என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கருத்துகளைக் கூர்ந்து கவனித்துப் பதில் அளிப்பார்.
அவர் அமைச்சராக இருந்தபோது, காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிரான தீவிரவாதிகள் அவரது மூன்றாவது மகள் ருபையாவைத் கடத்திச் சென்றனர். முஃப்திக்கு மட்டும் அல்ல, அவரது குடும்பத்தாருக்கும் எப்போதும் ஆபத்து இருந்து வந்தது என்றபோதிலும், அஞ்சாத நெஞ்சுரத்துடன் அரசியல் களத்தில் இயங்கி வந்தார். காஷ்மீர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி அமைதிப் பேச்சுகள் நடைபெற வழி வகுத்தார். இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டு இருந்த பதற்றத்தைத் தணிப்பதற்காகப் பெருமுயற்சிகளை மேற்கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியைத் தோற்றுவித்து, காஷ்மீர் அரசியல் களத்தில் ஒரு மாற்று அரசியலை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டார். 2002 ஆம் ஆண்டில் முதன்முறையாக காஷ்மீர் மாநிலத்தில் முதல்வராகப் பொறுப்பு ஏற்றுச் சாதனை படைத்தார்.
இன்றுவரையிலும் இந்தியாவில் உள்துறை அமைச்சர் பொறுப்பை வகித்த ஒரே முஸ்லிம் என்ற பெருமையைப் பெற்று இருக்கின்ற முஃப்தி முகமது சயீத் அவர்கள், அனைத்து இந்தியாவிலும் அறியப்பட்ட காஷ்மீர் அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். அவரது மறைவு நாட்டுக்கு இழப்பு.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும், காஷ்மீர் மக்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக
No comments:
Post a Comment