தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி மக்கள் திரள் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இலவசங்களை வாரி இறைத்து, வாக்கு அறுவடை செய்வதற்காக அதிமுக, திமுக இரு கட்சிகளும் தமிழகத்தில் சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடச் செய்தன. இதன் விளைவாக தமிழகம் ‘மதுப்பழக்கம்’ எனும் கொடிய புற்றுநோயின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறது.
சேலம் அஸ்தம்பட்டி முதன்மைச் சாலையில், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ள பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடையை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் தொடர்ந்து அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு அதிகாரிகள் சார்பில், இந்த மதுக்கடையை இடமாற்றம் செய்வதாக உறுதி அளித்து நூறு நாட்கள் ஆகியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஜனவரி 17 ஆம் தேதி, அஸ்தம்பட்டி மதுக்கடையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதன்படி மதுக்கடை முற்றுகைப் போராட்டத்திற்கு அணிதிரண்டு சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்கள் மீதும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் மீதும் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி விரட்டி உள்ளனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற ஏழு பெண்கள் உள்ளிட்ட 55 பேரை கைது செய்தனர். மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து நடத்தி வரும் எழுச்சி மிகு போராட்டங்களை ஜெயலலிதா அரசு, காவல்துறையினர் துணை கொண்டு அடக்கிவிடலாம் என்று அராஜக போக்குடன் செயற்பட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சேலம் அஸ்தம்பட்டி முதன்மைச் சாலையில் உள்ள மதுக்கடையை உடனடியாக அகற்றுவது மட்டுமின்றி, தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment