தமிழ்நாட்டில் பாசிச வெறி பிடித்த காட்டாட்சி நடக்கிறது. அதன் விளைவாகத்தான் அனைவராலும் மதிக்கப்படும் அன்புச் சகோதரர் பழ.கருப்பையா அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் வன்முறையின் மூலம் அச்சுறுத்தி மிரட்டுகின்ற காலித் தனத்தில் அண்ணா தி.மு.க. குண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று நிலவி வரும் அரசாங்கத்தின் ஊழலைச் சுட்டிக் காட்டி உண்மைகளை எடுத்து வைத்ததால், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழ.கருப்பையா அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் ஜனநாயக நெறி சார்ந்த முடிவெடுத்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனே ராஜினாமா செய்தார்.
நேற்று நள்ளிரவில் ஆளும் கட்சி ரௌடிகள் அவரையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கிட முயன்று, வீட்டுக்குள் இருந்த அவர்களை வெளியே வரச்சொல்லி கூச்சலிட்டவாறு வீட்டுக் கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் மீது கற்களை எறிந்து உடைத்துள்ளனர். அவரது காரை உடைத்து நொறுக்கியுள்ளனர். அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் வசைபாடி மிரட்டிச் சென்றுள்ளனர்.
வேலூர் மாநகரில் அவர் தொடங்கி வைப்பதாக இருந்த தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் அவர் உயிரோடு திரும்ப முடியாது, கொலை செய்து விடுவோம் என்று அச்சுறுத்தியதால் நிகழ்ச்சி இரத்துசெய்யப்பட்டது.
எனவே பழ.கருப்பையா அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை எதேச்சதிகாரம் தலைதூக்கி வருகிறது. பத்திரிகைகளை மிரட்டுவது, நியாயமான விமர்சனங்களுக்கும் அவதூறு வழக்கு போடுவது, குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.
பழ.கருப்பையா என்ற ஒரு தனி மனிதர் மீது ஏவப்பட்ட இந்த வன்முறை எவர் மீதும் பாயும். ஜனநாயகம் அனுமதித்துள்ள அடிப்படை உரிமைகளான கருத்துச் சுதந்திரம், நடமாடும் உரிமை இவற்றுக்கெல்லாம் இந்த ஆட்சியில் பேராபத்து வளர்ந்து வருகிறது.
பழ.கருப்பையா அவர்கள் புகார் கொடுக்கவில்லை என்றாலும், இந்த வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களை காவல் துறையினர் உடனடியாகக் கைது செய்து, உரிய முறையில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணா தி.மு.க.வினரின் வன்முறைச் செயலுக்கு எனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment