Saturday, October 31, 2015

தாம்பரம் நகரக் கழக அவைத்தலைவர் திரு சிவஞானம் அவர்கள் மறைந்தார்!

இதிகாசங்கள் இந்துத்துவத்தின் குறியீடுகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன.இருப்பினும் நமக்குத் தேவையான கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம்.அப்படி என்னைக் கவர்ந்தது மகாபாரதம்.அதில் பாஞ்சசயன்யம் ஒலிக்க நடந்த குருசேத்திய யுத்தத்தில் பீஷ்மரின் விருப்ப மரணம் பாண்டவர்களின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் என்பது என் எண்ணம். அந்தக் கதாபாத்திரம் கர்ணனுக்கு அடுத்து என்னைக் கவர்ந்த பாத்திரம்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக 2013 ஜீலை மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக கழக நிதியளிப்பு விழா தாம்பரம் சண்முகம் தெருவில் நடைபெற்றது.அந்தக் கூட்டத்தில் தலைவர் வருவதற்கு முன்பு இசை முரசின் எதிரொலி நெல்லை அபுபக்கர் அவர்களின் இசைக் கச்சேரி நடைபெற்றது.5.:30 மணிக்கு அவரின் இசைக்கச்சேரி தொடங்கியது. 3 பாடல்கள் பாடினார் பின்பு பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

அப்பொழுது குறைவான உயரம்,பெரியாரின் தொண்டர் போல கருஞ்சட்டை அணிந்த ஒருவர் உடனே அருகில் இருந்த கடையில் அந்த பலத்த மழையிலும் ஒரு குடை போன்ற ஒன்றை ஏற்பாடு செய்து நெல்லை அபுபக்கர் தொடர்ந்து தலைவர் வரும் வரை பாடினார்.அப்பொழுது அபுபக்கர் அவர்கள் "எனக்கு நாளைக்கு குற்றாலத்தில் ஒரு கச்சேரி இருக்கின்றது.இரயிலை விட்டாலும் கூட பேருந்திலே போயிறுவேன்.இவருக்காகப் பாடுவேன்" என்றார்.அப்படி இறுதி வரை உயரம் குறைவாக இருந்தாலும் இறுதி வரை குடையைப் பிடித்துக் கொண்டே இருந்தார் அந்தப் பலத்த மழையிலும்.அதன் பின்பு தலைவர் வந்த பின்பு ஒலிபெருக்கியில் "தலைவர் இதற்கு முன்பு பலத்த புயலுக்கிடையே பேசியுள்ளார்.எனவே யாரும் கவலைப்பட வேண்டாம்.தலைவர் கண்டிப்பாகப் பேசுவார்" என்று கர்ஜித்தார்.

அதன் பின்பு கடந்த Oct 3 அன்று தலைவர் துவக்கிய காஞ்சி மறுமலர்ச்சிப் பயணத்தில் தலைவரின் இறுதிப் பிரச்சார இடம் தாம்பரம் சண்முகம் தெரு..அங்கு வந்து 10:15 க்குப் பேசிய தலைவர் அவர் பெயரைக் குறிப்பிட்டு "இவரைப் போன்ற தொண்டர்கள் 20 ஆண்டுகள் எந்தப் பதவியிலும் இல்லாமல் இந்த இயக்கத்திற்குப் பாடுபட்டு வருகின்றார்" என்றார்.

அதன் பின்பு Oct 25 அன்று விழுப்புரம் ஜெயம் மஹாலில் நடைபெற்ற பொம்பூர் பாண்டியன் திருமணத்தில் பேசிய தலைவர் " நேற்று காலை 4 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்று,அங்கிருந்து மதுரை சென்று அதன் பின்பு திருப்பத்தூர் சென்று மருதுபாண்டியர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்னை விமான நிலையம் வந்து வீட்டிற்குக் கூட செல்லாமல் ,நேராக இந்த இயக்கத்திற்கு பாடுபட்டு வரும் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றார்.அவரால் பேச முடியவில்லை.அவரைப் பார்த்து விட்டு நேராக விக்கிரவாண்டி வந்து தோழர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள் " என்று பேசினார்.

இப்படிப்பட்ட தகுதிகள் கொண்ட தலைவரால் உச்சி முகர்ந்து பாராட்டப்பட்ட அந்த தன்னமில்லாத அந்த தொண்டர் தான் இன்று இயற்கை எய்தினாரே காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தாம்பரம் நகரக் கழக அவைத்தலைவர் அய்யா சிவஞானம் அவர்கள்.
குருசேத்திர யுத்தத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதிர் கொள்ளவிருக்கும் ஒரு சூழ்நிலையில் ஒரு பீஷ்மரை இழந்து விட்டோம்.இவரைப் போன்ற தொண்டர்களால் காப்பாற்றப்பட்ட இயக்கம் இனி வெற்றியை நோக்கிப் பயணிக்கும்.

அய்யா வானத்திலிருந்து எங்களை வாழ்த்துங்கள்!!
உங்கள் நினைவலைகளை சுமந்து தமிழின விடியலுக்காக தொடர்ந்து பயணிப்போம்!!

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் திரு சிவஞானம் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

செய்தி: தீபன் பழனிசாமி முகநூல்

மதிமுக இணையதள அணி - ஓமன்

திருச்சி ஆர்ப்பாட்டத்தில் தலைவர் வைகோ மத்திய மாநில அரசை எதிர்த்து சூளுரை!

சிறுபான்மை தலித் மக்கள் மீதான கொலை வெறி தாக்குதல், கருத்துரிமை மீதான தாக்குதலை கண்டித்து மக்கள் நல கூட்டியக்கம் சார்பில், திருச்சியில் இன்று 31-10-2015 நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் வைகோ, முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து கூட்டியக்க தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், 'மூடு டாஸ்மாக்கை மூடு.. ஊத்தி கொடுத்த உத்தமி போயஸ் கார்டனில் உல்லாசம்' என்ற கோவனின் பாடலை பாடி, முடிந்தால் என் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போடட்டும் என்று தமிழக அரசுக்கு பகிரங்க சவால் விடுத்தார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

ஓமன் மதிமுக செயல்வீரர்கள் செப்டம்பர் கூட்டம் சங்கொலியில்!

ஓமன் மதிமுக இணையதள அணியின் செயல் வீரர்கள் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் நாள் 2015ல் நடந்தது, இதில் அனேக கழக கண்மணிகள் கலந்துகொண்டனர். அந்த செய்தியானது தீர்மானங்களுடன் சங்கொலிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அந்த கூட்ட நிகழ்வுகள் இன்று மதிமுக அதிகார ஏடான சங்கொலியில் 6-11-2015 பிரசுரத்தில் வெளியாகியுள்ளது. 

இந்த அங்கிகாரமே ஓமன் மதிமுக இணையதள அணி நண்பர்களை எழுச்சிபெற வைக்கிறது. மேலும் பல உத்யோகமான பணிகளை மேற்கொள்ளவும் வலு சேர்க்கிறது. 

வரும் தேர்தலில் தலைவர் வைகோவை அரியணையில் அமர்த்துவோம். இணையதள அணி நண்பர்கள் ஈடில்லாமல் பணியாற்றுவோம். வெற்றியை நமக்கே உரியதாக்குவோம்.


மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

மதுவிலக்கு பிரச்சாரப் பாடகர் கோவன் கைது; தமிழகத்தில் நெருக்கடி நிலை! வைகோ கண்டனம்!

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  மக்கள் சக்தியைத் திரட்டி போராட்டத்தை மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல, மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் ‘டாஸ்மாக்கை மூடு’ என்ற பாடலை இயற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடி வருகிறார் பாடகர் கோவன். 

திருச்சி உறையூர் அரவனூரில் இருந்த கோவன் வீட்டுக்கதவை, அக்டோபர் 30 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு யாரோ சிலர் தட்டியுள்ளனர். கோவன் கதவைத் திறந்தவுடன்,  சாதாரண உடையில் இருந்த காவல்துறையினர் அவரைப் பிடித்து இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி இருக்கின்றனர். கோவன் மனைவி கேட்டதற்கு எந்த பதிலும் கூறவில்லை; கோவன் தனது காலணியை அணிவதற்குக்கூடக் காவலர்கள் அனுமதிக்கவில்லை. 

காவல்துறை வாகனத்தின் பின்னாலேயே ஓடிச் சென்ற கோவன் மனைவியிடம், ‘உறையூர் காவல் நிலையத்துக்கு வா’ என்று ஒரு காவலர் கூறி இருக்கிறார். கோவன் மனைவியும் மகனும் அங்கே சென்றபோது, அங்கே கோவன் இல்லை. 

காலை 8 மணிக்குக் காவல்துறை ஆய்வாளர் அலைபேசி மூலம் தனது மகன் வழக்கறிஞர் சாருவாகனிடம் தொடர்புகொண்ட கோவன், சென்னையில் இருந்து வந்துள்ள காவலர்கள் தன்னைக் கைது செய்து, சென்னைக்குக் கொண்டு செல்வதாகக் கூறி உள்ளார். ‘தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கோவன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்’ என்று காவல்துறை ஆய்வாளர் சாருவாகனிடம் கூறி இருக்கிறார். 

இத்தகைய நள்ளிரவுக் கைது, தமிழகத்தில் நெருக்கடி நிலைக் காலத்தை நினைவூட்டுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கி உள்ள கருத்து உரிமை தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. 

தமிழ்நாட்டின் வீதியெங்கும் மதுக்கடைகளைத் திறந்து, மக்கள் நல்வாழ்வைச் சீரழித்து வரும் ஜெயலலிதா அரசு, மக்கள் குரலுக்குச் செவி சாய்க்காமல், அதிகார மமதையுடன் செயல்பட்டு வருவது கண்டு பொறுக்க முடியாமல்தான் ம.க.இ.க. பாடகர் கோவன் மக்களைத் தட்டி எழுப்பிட விழிப்புணர்வுப் பாடலை இயற்றிப் பாடி வந்துள்ளார். மதுவின் தீமை பற்றி நாட்டுப்புறப் பாடல் மூலம் எடுத்துக் கூறியதற்காக  அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி தேசத் துரோகம், சமூகத்தில் இரு பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்படுத்துதல், அவதூறு செய்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

இதுபோன்ற மிரட்டல் நடவடிக்கைகளால் மது ஒழிப்புப் போராட்டங்களை முடக்கி விடலாம் என்று ஜெயலலிதா அரசு நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. 

பாடகர் கோவன் கைது, மதுவிலக்குப் போராட்டத்தை இன்னும் பன் மடங்கு வீரியத்துடன் மக்கள் முன்னெடுத்துச் செல்லவே வழி வகுத்து இருக்கின்றது. 

பாடகர் கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வைகோ அஞ்சலி!

பசும்பொன் தேவரின் 108 ஆவது குரு பூஜையையொட்டி அவரது நினைவிடத்தில் 40ஆவது ஆண்டாக மலர் வளையம் வைத்து தலைவர் வைகோ அஞ்சலி செலுத்தினார். 
முன்னதாக நேற்று 31-10-2015 காலை மதுரையில் உள்ள பசும்பொன் தேவர் சிலைக்கு தலைவர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வில் மதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்த்கொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

திருச்சியில் மக்கள் நலக் கூட்டியக்க கண்டன ஆர்பாட்டத்தில் தலைவர்கள்!

பாரதிய ஜனதா ஆட்சியில் அதிகரித்து வரும் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறைகள்; கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து இன்று (31.10.2015) காலை 11 11 மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்துகொண்டன.

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு டி.கே.ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள். மேலும் கூட்டியக்க நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டார்கள்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். வைகோ அறிக்கை!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் ஊழல் செய்து சொத்துக்களை வாங்கிக் குவித்த வழக்கிலிருந்து இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்பதும், உச்ச நீதிமன்ற குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் மக்கள் மன்றம் மறந்துவிட வில்லை. இந்நிலையில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள பிரபல லக்ஸ் திரையரங்க வளாகத்தை ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி பட்டவர்த்தனமாக வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

சென்னையில் எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் திரைப்படங்களைத் திரையிடும் பல திரையரங்குகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்துக்குச் சொந்தமாக வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் 11 திரையரங்கங்களுடன் கூடிய பிரம்மாண்டமான லக்ஸ் திரையரங்கு வளாகம் இருக்கிறது.

தற்போது எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் தனக்குச் சொந்தமான லக்ஸ் திரையரங்க வளாகத்தை ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்திருக்கிறது. ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் இதற்கு முன்பு ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடட் என்று இயங்கியது. இந்நிறுவனம் 2005 இல் தொடங்கப்பட்டது. கடந்த 2014 ஜூலை 14 இல் நடந்த இந்நிறுவனத்தின் சிறப்பு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி ‘ஜாஸ் சினிமாஸ்’ என்று பெயர் மாற்றப்பட்டதாக ஆதாரபூர்வமான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

சிறப்புப் பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் கலந்துகொண்டதும், நிறுவன பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தில் சசிகலா கையெழுத்துப் போட்டிருப்பதும் ஆவணங்கள் மூலம் வெள்ளிடை மலையாக தெரிகிறது.
ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தில் கார்த்திகேயன் கலியபெருமாள், சிவக்குமார் கூத்தையப்பர், சத்தியமூர்த்தி ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். இவர்கள் அனைவருமே டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வரும் மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரிஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் இயக்குநர்களாகவும் உள்ளனர். மிடாஸ் நிறுவனம் சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமானது என்பது உலகறிந்த இரகசியம்.

எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் பி.வி.ஆர். சினிமாஸ் என்ற நிறுவனத்தால் ரூ.600 கோடி முதல் ரூ.1000 கோடி வரையில் விலை பேசப்பட்டதாகவும், ஆனால், சசிகலா சம்பந்தப்பட்டுள்ள ஜாஸ் சினிமாஸ் அதே அளவு தொகைக்கு வாங்கி உள்ளது என்பதும் ஆவணங்கள் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி டி குன்ஹா அவர்கள் தனது தீர்ப்பில் குறிப்பிடும்போது, “அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகார மீறல், பொறுப்பில் உள்ளவர்கள் பேராசை காரணமாக தவறான வழிமுறைகளில் பொருளீட்டும் வேட்கை போன்றவற்றுக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஜனநாயக நாட்டின் கட்டமைப்பை தகர்த்துவிடும்” என்று சுட்டிக் காட்டினார்.

நீதிமன்றத் தீர்ப்புகளை துச்சமாகக் கருதி காலில் போட்டு மிதித்துவிட்டு, கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் ஆட்சி அதிகாரத்தின் மூலம் கொள்ளையடித்துள்ள கோடானு கோடி ரூபாயைப் பயன்படுத்தி சசிகலா குடும்பத்தினர் சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் என்றால், சந்தேகத்தின் நிழல் முதல்வர் ஜெயலலிதா மீதும் படிந்துள்ளது என்பதை மறைக்க முடியாது. எனவே, ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பம் ஊழல் மூலம் முறைகேடான வகையில் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜனநாயக நாட்டில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பவர்கள் யாராக இருந்தாலும் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Friday, October 30, 2015

மூடு டாஸ்மாக் பாடல் பாடிய கோவன் கைதுக்கு கடும் கண்டனம்!

மூடு டாஸ்மாக் மூடு பாடல் பாடிய, மக்கள் கலை இலக்கிய கழகத்தின், மைய கலைக்குழுவை சார்ந்த கோவன் அவர்களை, திருச்சியில் நள்ளிரவில் 2 மணி அளவில் சென்னை குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 124ஏ தேசதுரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் எங்குள்ளார் என்பதை தெரிவிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

மக்கள் அதிகாரம் சார்பாக மூடு டாஸ்மாக மூடு என்ற பாடல் பாடி மக்களுக்கு மதுவின் கொடுமைகளை விழிப்புணர்வு பாடலாக வெளியிட்டார்கள். இந்த பாடலில், மூடு டாஸ்மாக்கை மூடு,  ஊத்திக்கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம் என்ற இரண்டு பாடல்களை பாடி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியதற்காக மக்கள் பாடகர் தோழர்.கோவன் அவர்களை தமிழக அதிமுக அரசின் காவல்துறை கைது செய்துள்ளது. இதை ஓமன் மதிமுக இணையதள அணி வன்மையாக கண்டிக்கிறது. அவர் பாடிய பாடல் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனனாயகத்தை அடியோடு அழிக்கின்ற செயல்களில் ஜெயா அரசு ஈடுபட்டுள்ளது. கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மக்களின் மீது ஏதேச்சாரமாக தமிழக அரசு நடந்துகொள்கிறது கண்டிக்கதக்கது. சொந்த மாநில மக்களையே கொடுமைபடுத்தும் நிலமை கேவலமான செயலாகும். இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் இனியும் ஜெயா அரசு ஈடுபடகூடாது எனவும் ஓமன் மதிமுக இணையதள அணி கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறது. 

மதிமுக இணையதள அணி - ஓமன்

அருப்புகோட்டையில் வைகோவிற்கு அலங்கார வரவேற்பு!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் இன்றைய குருபூஜை விழாவினை முடித்து விட்டு திரும்புகையில் தலைவர் வைகோ அவர்களை அருப்புக்கோட்டை எல்லை பகுதியில் மதிமுக தோழர்கள் உற்சாமகமாக வரவேற்றார்கள். 

மதிமுக இணையதள அணி - ஓமன்

பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் சிலைக்கு மாலையணிவித்து வைகோ மரியாதை!

மதுரையில் உள்ள பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் திருமகனார் திருவுருவ சிலைக்கு மக்கள் தலைவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று காலையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.  அருகில் மதுரை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் புதுர் பூமிநாதன் மற்றும் கழக தோழர்கள் உள்ளார்கள். 

இந்நிகழ்வில் ஏராளமான கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்