விண் முட்ட உயர்ந்து இருக்கின்ற விலைவாசி மக்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. விலைவாசி ஏற்றத்தால் மக்கள் படும் அல்லல் குறித்து மத்திய-மாநில அரசுகள் கவனத்தில் கொண்டதாகவே தெரியவில்லை.
தமிழ்நாட்டு மக்கள் உணவில் சாம்பார் என்பதையே மறந்து பல வாரங்கள் ஆகிவிட்டன. கடந்த 2014 அக்டோபரில் துவரம் பருப்பு ரூ. 90க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ.180 ஆக உயர்ந்துவிட்டது. நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற பின்னர் இணையதள வர்த்தகப் பட்டியலில் துவரம் பருப்பு போன்ற பருப்பு வகைகளையும் சேர்த்ததால் விலை தாறுமாறாக அதிகரித்துவிட்டது. துவரம் பருபபு உற்பத்தி ஆகும் மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, மத்தியப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் போதிய மழையின்றி விளைச்சல் குறைந்ததால், தமிழ்நாட்டுக்கு வரத்துக் குறைந்தது. துவரம் பருப்பு விலை உயர்வுக்கு இது மட்டுமே காரணம் இல்லை. ஆன் லைன் டிரேடிங் மூலம் சந்தையில் செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, துவரம் பருப்பு பதுக்கப்படுவதும், விலை உயர்வுக்கு முதன்மைக் காரணம் ஆகும்.
“விலைவாசியைக் குறைப்போம்” என்று 2011 இல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, நான்கரை ஆண்டுகளில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்? ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற 2011 அக்டோபரில் துவரம் பருப்பு விலை கிலோ ரூ. 52. தற்போது ரூ.180 ஆக உயர்ந்துள்ளது. பாசிப் பருப்பு ரூ. 64 இல் இருந்து ரூ.130; கடலைப் பருப்பு ரூ.52 இல் இருந்து ரூ.85; உளுந்தம் பருப்பு ரூ.78 இல் இருந்து ரூ.150; மிளகாய் ரூ.110 இல் இருந்து ரூ.140; மிளகு ரூ.40 இல் இருந்து ரூ.1000 ஆகவும் அதிகரித்துவிட்டன. இதைப் போன்று சீரகம் ரூ.180 இல் இருந்து ரூ.200; மல்லி ரூ.64 இல் இருந்து ரூ.160; கடுகு ரூ.45 இல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்ந்துவிட்டன. தேங்காய் எண்ணெய் ரூ.100 இல் இருந்து ரூ.220 ஆகவும், நல்லெண்ணெய் ரூ.91 இல் இருந்து ரூ.220 ஆகவும் அதிகரித்துவிட்டன.
மத்திய அரசு பண வீக்கம் குறைந்துவிட்டது, உணவு பண வீக்கம் குறைந்தது என்று புள்ளி விவரங்களை வெளியிட்டு திருப்தி பட்டுக்கொள்வதும், ஜெயலலிதா அரசு மளிகைப் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய அம்மா மளிகைத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்துவதாக மக்களை ஏமாற்றுவதும் வன்மையான கண்டனத்துக்கு உரியது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் காலத்தில் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை உயர்வு மக்களை கவலை அடையச் செய்கிறது. எனவே, மத்திய -மாநில அரசுகள் தாறுமாறான விலைவாசி ஏற்றத்தைத் தடுக்க வேண்டும் எனவும், பருப்பு வகைகளை ஆன் லைன் டிரேடிங் பட்டியலிலிருந்து நீக்குவது மட்டுமின்றி, இணையதள வர்த்தக சூதாட்டத்தை முற்றாக தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment