இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அரசு படைகளை ஏவி ஈழத்தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொடூரமாகக் கொன்று குவித்த படுகொலைகள் குறித்து, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில், இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மேக்ஸ்வெல் பரணகமவின் 178 பக்க அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே ஈழத்தமிழர்களுக்குச் சம உரிமை மறுக்கப்பட்டு, அடக்குமுறைக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள். அதிலும் 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த காலத்தில் திட்டமிட்ட தமிழ் இனப் படுகொலை நடைபெற்றது.
இந்த உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி ஆகும். கேல்லம் மேக்ரே அவர்கள் வெளியிட்ட ஆவணப்படங்களில், எட்டுத் தமிழ் இளைஞர்கள் அம்மணமாக, கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் இழுத்து வரப்பட்டு உச்சந்தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரமும், தமிழ் மகள் இசைப்பிரியா நாசமாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட அவலமும், இனப்படுகொலைக்குச் சரியான சாட்சியங்கள் ஆகும்.
இவற்றை புனையப்பட்ட போலிக் காட்சிகள் என்று மகிந்த ராஜபச்சேயின் அரசும், இராணுவமும் மறுத்து வந்தன. ஆனால் இந்தக் காட்சிகள் உண்மைதான் என்பதை மேக்ஸ்வெல் பரணகமவின் அறிக்கை ஒப்புக் கொள்கிறது.
2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பின்னர், வெள்ளைக் கொடியுடன் சரண் அடையச் சென்ற நடேசன், புலித்தேவன், ரமேஷ் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மேக்ஸ்வெல் அறிக்கை ஒப்புக் கொள்கிறது. பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்ட ஏராளமான தமிழர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்பதையும் குறிப்பிடுகிறது.
இந்த மேக்ஸ்வெல் உள்ளிட்ட ஐந்து பேர் விசாரணைக் குழுவை நியமித்ததே மகிந்த ராஜபச்தோன். நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஒரு நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்றும், வெளிநாட்டு நீதிபதிகளையும் அதில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
கொலையாளியே தீர்ப்பாளியாவதா? குற்றவாளியான இலங்கை அரசு நியமிக்கின்ற நீதிபதிகள் விசாரணை கூடாது; பன்னாட்டு விசாரணை வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
இந்த அறிக்கை ஆகஸ்ட் மாதத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய பின்னர், தற்போதுதான் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு இடையில், ஜெனீவா மனித உரிமைகள் கமிசனில் இலங்கைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது.இந்த அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்தால், சிங்களர்களின் நரித்தந்திரம் நன்றாகத் தெரிகிறது.
சேனல் 4 காட்சிகள் மறுக்க முடியாத உண்மைகள் என்பதால் அதனை ஒப்புக்கொண்டு விட்டு, 1,47,000 தமிழர்கள் முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாள்களில் கொலை செய்யப்பட்டதை மூடி மறைப்பதற்காக விடுதலைப்புலிகள் மீது மேக்ஸ்வெல் அறிக்கை பழி சுமத்துகிறது.
தங்கள் தாயக ஈழ மக்களைப் பாதுகாப்பதற்காக உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத மகத்தான உயிர்த்தியாகத்தைச் செய்தவர்கள் விடுதலைப்புலிகள் ஆவார்கள். சிங்கள இராணுவம் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசியும், மருத்துவமனைகளைக் கூட விட்டு வைக்காமல் பீரங்கி ஷெல்களாலும், விமானக் குண்டுவீச்சாலும் தமிழர்களைக் கொன்று குவித்த கொடுமையை ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மன், ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகிய மூவர் குழு அறிக்கை ஆதாரங்களோடு நிரூபித்தது.
அதுபோலவே ஐ.நா. மனித உரிமை ஆணையர் அல்ராத் உசேன் அமைத்த மார்ட்டி அட்டிசாரி, சில்வியா கார்ட்ரைட், ஆஸ்மா ஜகாங்கீர் குழுவின் 268 பக்க அறிக்கையிலும், சிங்கள இராணுவம் நடத்திய படுகொலைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்ற பழியில் இருந்து தப்புவதற்காகவே, ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயின் வேலையைப் போல மேக்ஸ்வெல் அறிக்கை விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்துகிறது.
ஐ.நா. மனித உரிமை பிரகடனத்தின்படி உண்மை வெளிவர வேண்டுமானால், அதற்கு ஒரே வழி, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை மட்டுமே ஆகும்.
ஈழத்தமிழர்கள் படுகொலையை நடத்த சிங்கள அரசுக்கு உதவிய இந்திய அரசு உள்ளிட்ட நாடுகளின் அரசுகள், பன்னாட்டு நீதி விசாரணையை நடைபெற விடாமல், நீதியைக் குழிதோண்டிப் புதைக்கின்ற வேலையில் தொடர்ந்து ஈடுபடுகின்றன.
இலங்கையின் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழக சட்டமன்றத்தில் 2015 செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆகியவற்றின் அடிப்படையில், சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணையை நடத்துவதற்குத் தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கும்உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவதே இன்றைய கடமை ஆகும் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment