தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் ஊழல் செய்து சொத்துக்களை வாங்கிக் குவித்த வழக்கிலிருந்து இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்பதும், உச்ச நீதிமன்ற குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் மக்கள் மன்றம் மறந்துவிட வில்லை. இந்நிலையில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள பிரபல லக்ஸ் திரையரங்க வளாகத்தை ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி பட்டவர்த்தனமாக வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
சென்னையில் எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் திரைப்படங்களைத் திரையிடும் பல திரையரங்குகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்துக்குச் சொந்தமாக வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் 11 திரையரங்கங்களுடன் கூடிய பிரம்மாண்டமான லக்ஸ் திரையரங்கு வளாகம் இருக்கிறது.
தற்போது எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் தனக்குச் சொந்தமான லக்ஸ் திரையரங்க வளாகத்தை ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்திருக்கிறது. ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் இதற்கு முன்பு ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடட் என்று இயங்கியது. இந்நிறுவனம் 2005 இல் தொடங்கப்பட்டது. கடந்த 2014 ஜூலை 14 இல் நடந்த இந்நிறுவனத்தின் சிறப்பு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி ‘ஜாஸ் சினிமாஸ்’ என்று பெயர் மாற்றப்பட்டதாக ஆதாரபூர்வமான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
சிறப்புப் பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் கலந்துகொண்டதும், நிறுவன பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தில் சசிகலா கையெழுத்துப் போட்டிருப்பதும் ஆவணங்கள் மூலம் வெள்ளிடை மலையாக தெரிகிறது.
ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தில் கார்த்திகேயன் கலியபெருமாள், சிவக்குமார் கூத்தையப்பர், சத்தியமூர்த்தி ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். இவர்கள் அனைவருமே டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வரும் மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரிஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் இயக்குநர்களாகவும் உள்ளனர். மிடாஸ் நிறுவனம் சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமானது என்பது உலகறிந்த இரகசியம்.
எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் பி.வி.ஆர். சினிமாஸ் என்ற நிறுவனத்தால் ரூ.600 கோடி முதல் ரூ.1000 கோடி வரையில் விலை பேசப்பட்டதாகவும், ஆனால், சசிகலா சம்பந்தப்பட்டுள்ள ஜாஸ் சினிமாஸ் அதே அளவு தொகைக்கு வாங்கி உள்ளது என்பதும் ஆவணங்கள் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி டி குன்ஹா அவர்கள் தனது தீர்ப்பில் குறிப்பிடும்போது, “அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகார மீறல், பொறுப்பில் உள்ளவர்கள் பேராசை காரணமாக தவறான வழிமுறைகளில் பொருளீட்டும் வேட்கை போன்றவற்றுக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஜனநாயக நாட்டின் கட்டமைப்பை தகர்த்துவிடும்” என்று சுட்டிக் காட்டினார்.
நீதிமன்றத் தீர்ப்புகளை துச்சமாகக் கருதி காலில் போட்டு மிதித்துவிட்டு, கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் ஆட்சி அதிகாரத்தின் மூலம் கொள்ளையடித்துள்ள கோடானு கோடி ரூபாயைப் பயன்படுத்தி சசிகலா குடும்பத்தினர் சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் என்றால், சந்தேகத்தின் நிழல் முதல்வர் ஜெயலலிதா மீதும் படிந்துள்ளது என்பதை மறைக்க முடியாது. எனவே, ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பம் ஊழல் மூலம் முறைகேடான வகையில் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜனநாயக நாட்டில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பவர்கள் யாராக இருந்தாலும் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment