சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில் வெள்ளிக்கிழமை (அக்.16) ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அனுப்பினேன். அதன் மீது நடவடிக்கை இல்லை. எனவே, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வரம்புக்கு உள்பட்ட மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் ஆர். சுதாகர், வி.எம். வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்படும் இந்த வழக்கு, வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் கே. செல்லப்பாண்டியன், சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவது குறித்து தலைமைச் செயலர் தலைமையில் வெள்ளிக்கிழமை (அக்.16) ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு அரசுத் தரப்பில் தீவிரமாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
மனுதாரரான வைகோ வாதிடுகையில், எங்களது கலிங்கப்பட்டி கிராமத்தில் சீமைக் கருவேல மரங்களை குடிமராமத்து முறையில் நாங்களே அகற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
இப்பணி முடிந்ததும், அகற்றப்பட்ட கருவேல மரங்களை அரசு தரப்பில் ஏலம் விட்டு வருமானத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
தலைமைச் செயலரின் கூட்டம் முடிந்ததும், அதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். மனுதாரர் தரப்பிலும் தேவையான பரிந்துரைகளைத் தெரியப்படுத்தலாம். இதன்பின்னர் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment