தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டங்களில் காவிரி தீரத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கக் கூடாது என்று தடை செய்து, தமிழக அரசு அக்டோபர் 8 ஆம் தேதியன்று ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், ஓஎன்ஜிசி நிறுவனம், மீத்தேன் எரிவாயுவை விடவும் காவிரி தீரத்தின் சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் பாறைப்படிவ வாயு எனும் சேல் கேஸ் எரிவாயுவை சட்ட அனுமதி இன்றியே எடுக்கின்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இதை உடனடியாகத் தடுக்கக் கோரி, குத்தகைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவரும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் விவசாய அணிச் செயலாளருமான ஆர். முருகன் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தப் பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, இடைக்காலத் தடை ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.
இதுபோன்ற வழக்கை, அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர். பாண்டியனும் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் ஆஜரானார்.
சேல் எரிவாயு வழக்கு, நவம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருவைகுண்டம் அணை தூர் வாரும் வழக்கு, இன்றைய விசாரணையில் வைகோ வாதம்.
திருவைகுண்டம் அணையில் தூர் வாரக் கோரி ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் தொடுத்த பொதுநல மனு மீதான வழக்கு இன்று (27.10.2015) தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வைகோ எடுத்து வைத்த வாதம்:
144 ஆண்டுகளாகத் தூர் வாரப்படாமல் இருந்த அணையில், தீர்ப்பு ஆயத்தின் ஆணைப்படி தற்போது ஏழு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டதில் முதல் கட்டத்தில் தூர் வாரும் வேலை ஓரளவு நடந்து இருக்கின்றது. இதனால் தண்ணீர் நன்கு தேங்கி நிற்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்து இருக்கின்றது. அதை அண்ணன் நல்லகண்ணு அவர்களும் இங்கே குறிப்பிட்டார்கள். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் வரையறுக்கப்பட்ட முதல் இரண்டு பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் ஆற்று மணலை அள்ளக்கூடாது எனத் தீர்ப்பு ஆயம் தெரிவித்து இருந்தும், மூன்றாம் பகுதியில் மணல் அள்ளியபோது, அங்கிருந்த விவசாயிகள் தடுத்ததுடன், காவல்துறையிலும் புகார் கொடுத்து உள்ளனர்.
ஏற்கனவே நாடெங்கும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. ஊழல் என்பது சமூகத்தின் அனைத்துத் துறைகளையும் செல்லரிக்கும் விதத்தில் ஊடுருவி விட்டது. இதன் விளைவாக, நேர்மையாகச் செயல்படுகிறவர்கள் மீதும் கூட சேற்றை அள்ளி வீசும் நிலைமை ஏற்படுகிறது.
நீதியரசர் ஜோதிமணி: நானும் ஒரு பத்திரிகையில் செய்தி பார்த்தேன். நீங்கள் வருத்தப்படுவதில் உள்ள நியாயம் எனக்குப் புரிகிறது.
வைகோ: நான் 51 ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் இருக்கிறேன். நேர்மை ஒன்றுதான் எனது கவசம். நான் கூட ஒரு கட்டத்தில் மனம் வேதனைப்பட்டு இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்ளலாமா என்றுகூட நினைத்தேன்.
நீதியரசர் ஜோதிமணி: கூடவே கூடாது. நீங்கள் இந்த வழக்கைத் தொடுத்து இருக்காவிட்டால், தூர் வாரும் பணியே நடந்திருக்காது. விவசாயிகள் நலனுக்காகத்தானே நீங்கள் செய்கிறீர்கள்.
வைகோ: தூர் வாரப்பட்ட அமலைச் செடிகள், தூர் மண் இவற்றை தாமிரபரணிக் கரை ஓரத்திலேயே கொட்டி வைப்பது மிகவும் ஆபத்தானது. அதைத் தரிசு நிலங்களில்தான் கொண்டு போய்த்தான் கொட்ட வேண்டும்.
நீதிபதி நாகேந்திரன்: தாமிரபரணிக்கு அருகாமையிலோ வேறு நீர் நிலைகளுக்கு அருகிலோ கொண்டு போய்க் கொட்டினால் பத்து மடங்கு உடனே பரவி விடும். எனவே, தொலைவில் உள்ள தரிசு நிலங்களில்தான் கொட்ட வேண்டும்.
வைகோ: மணல் அள்ளும் ஒப்பந்தக்காரர்கள் தரப்பில் இங்கு வாதாடிய வழக்கறிஞர், வேலைகளைச் செய்ய விடாமல் பலர் வந்து தடுக்கிறார்கள், குண்டர்கள் மிரட்டுகிறார்கள் என்று கூறியதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். விவசாயிகள் தங்களுக்கு ஏற்படுகின்ற நியாயமான கவலையால் போராடுகிறார்கள்.
நல்லகண்ணு: ஒப்பந்தக்காரர்கள்தான் ஊருக்கு ஊர் சென்று கோயில் கொடைக்குக் கொடுக்கிறோம், ஊர் நிதிக்குக் கொடுக்கிறோம் என்று இலடசக்கணக்கில் பணம் கொடுத்துச் சரிக்கட்ட முயற்சிக்கிறார்கள்.
நீதியரசர் ஜோதிமணி: பொதுமக்கள் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. வரையறுக்கப்பட்ட இரண்டு பகுதிகளில் மட்டும்தான் தூர் வாரும் பணி நடக்க வேண்டும. எக்காரணத்தை முன்னிட்டும் மற்ற இடங்களில் மணல் அள்ள அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்த புகார்களை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரே விசாரணை செய்ய வேண்டும். ஏற்கனவே தூர் வாரப்பட்ட அமலைச் செடிகள் மண் உள்ளிட்ட கழிவுகள் எங்கே கொட்டப்பட்டுள்ளன என்ற விவரத்தை, நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இன்றைய தீர்ப்பு ஆய விசாரணையின்போது, ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் வழக்கறிஞர் ஜோயல், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் நன்மாறன், வழக்கறிஞர் தவசிராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment