கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக் கடை ஊரில் மதுக்கொடுமையை எதிர்த்து அறப்போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் மாநில அரசு நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் சாகடிக்கப்பட்டார். எனவே, இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதியின் நீதி விசாரணை வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ தொடுத்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வைகோ சில ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். விசாரணை அக்டோபர் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்ததாவது:- “சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க முடியாது என்றும், மத்திய அரசின் காவல்துறை பாதுகாப்புதான் வழங்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கூறியுள்ள கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது. இதனை எவ்விதத்திலும் ஏற்க முடியாது. தமிழக காவல்துறையில் ஒரு சிலர் தவறு செய்யலாம். ஆனால், நேர்மையான திறமையான அதிகாரிகள் தமிழக காவல்துறையில் உள்ளனர்.
மனித உரிமை மீறல்கள் என்பது இந்தியாவில் அனைத்து மாநிலக் காவல்துறையினராலும், மத்திய அரசின் காவல்துறையினராலும் நடத்தப்படுவதற்கு ஆதாரங்கள் உள்ளன. மாநில சுயாட்சிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாக மாநில உரிமைகளை, அதிகாரங்களை மத்திய அரசு நசுக்க முயலும் போக்குக்கு தலைமை நீதிபதியின் கருத்து ஊக்கமளிப்பதாகும்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் மத்திய அரசின் காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று, மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறை 2006 ஆம் ஆண்டிலேயே தெரிவித்தது. 1970 க்கு முன்னர் அணையின் பாதுகாப்பை தமிழ்நாடு காவல்துறையே மேற்கொண்டது. ஆனால், முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளத்தின் சில அக்கறையுள்ள சக்திகளால் ஆபத்து நேரிடலாம் என்பதைக் கருதி மத்திய அரசு காவல்துறையின் பாதுகாப்பு அணைக்கு வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முன்வைத்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. கேரள அரசு விரும்பினால்தான் அப்படி பாதுகாப்பைக் கொடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றப் பிரச்சினையில் மத்திய காவல்துறையின் பாதுகாப்பு வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கூறுவது மிகவும் விசித்திரமானது. தமிழ்நாடு மாநிலத்தையே குறைகூறும் இந்தக் கருத்து எவ்விதத்திலும் ஏற்கத்தக்கது அல்ல” என்று வைகோ கூறினார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment