தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பிழைப்புக்காக 23 மீனவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள அஜ்மன் நகருக்குச் சென்றார்கள். கடுமையான உழைப்போடு பொருளீட்டி தங்களையும், தங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு இன்னல்களைக் கடந்து கனவுகளோடு சென்றவர்களின் வாழ்வில் இடிவிழுந்தது போன்று அங்கு நடந்த சம்பவம் அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பெரிய இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது.
அரபு நாடுகள் சட்டப்படி மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், அரபு நாட்டைச் சார்ந்த இரண்டு மீனவர்கள் 01.04.2014 அன்று தங்களுடன் அழைத்துச் சென்றனர். எதிர்பாராத விதமாக 14.04.2014 அன்று இரவில் மீனவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அரபு நாட்டைச் சார்ந்த மீனவர் ஒருவர் காணாமல் போய்விட்டார்.
அந்த நாட்டுச் சட்டப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் இரக்கமில்லாமல் தாக்கப்பட்டு, விசாரணையின் முடிவில் அவர்கள் அப்பாவிகள் என்று முடிவு செய்து வழக்கில் சாட்சிகளாக மட்டும் சேர்க்கப்பட்டார்கள்.
காவல்துறையின் நடவடிக்கையால் மீனவர்கள் அனைவரும் தங்கள் வேலையை இழந்தனர். பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. உண்ண உணவின்றி, உடையின்றி, வேலையின்றி, செலவுக்குப் பணமின்றி வீட்டுக் காவலில் வைத்துள்ளதுபோல அவர்கள் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று கடல் கடந்து வாழும் நமது தமிழர்கள், திரு. ஸ்டாலின் பீட்டர் என்ற தோழர் மூலமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் பரிதவித்து வரும் அவர்களைக் காப்பற்றிடக் கோரி கடிதம் எழுதியுள்ளனர்.
வைகோ அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், வெளி விவகாரத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கும் மனிதாபிமானத்தோடு விரைந்து நடவடிக்கை எடுத்து, வாழ வழியின்றித் தவிக்கும் 23 மீனவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சியை உடனடியாக எடுக்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
கவலையோடு, இருண்ட எதிர்காலத்தோடு, கண்ணீரோடு தவிக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் நம்பிக்கை ஒளியை ஊட்டிட ஆவன செய்ய வேண்டுமென வைகோ வலியுறுத்தியுள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment