இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்), கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு 871 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டத்தைச் செயல்படுத்த, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது. கெயில் நிறுவனத்தின் திட்டத்தால், பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் ஏழு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்காதது வேதனை அளிக்கின்றது.
விவசாய நிலங்களைப் பாழாக்கும் கெயில் இந்தியாவின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு 6.6.2008 இல் கருணாநிதி அரசு அனுமதி வழங்கியது. 2011 இல் ஜெயலலிதா முதல்வர் ஆனவுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்த 21.2.2012 இல் தமிழக அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அதிகாரக் குழுவை நியமித்து, கெயில் நிறுவனத்திற்கு தேவையான துறை சார்ந்த அனுமதிகளை ஒற்றைச் சாளர முறையில் உடனடியாக வழங்கிட ஏற்பாடு செய்தார்.
விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏழு மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, தமிழக அரசு காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தியது. பின்னர் மக்கள் கொந்தளிப்பு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, கெயில் நிறுவன திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.
கெயில் நிறுவனத்திற்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து விவசாயிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகவில்லை.
இதன் மூலம் ஜெயலலிதா அரசின் அலட்சியப் போக்கு வெளிப்பட்டது. தன் மீதுள்ள சொத்துக்குவிப்பு ஊழல் வழக்குகளுக்காக கர்நாடக நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் டஜன் கணக்கில் வழக்கறிஞர்களைக் கொண்டுபோய் நிறுதிதிய ஜெயலலிதா, விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையில் அக்கறை காட்டாமல் ஏனோதானோ என்று வழக்கை நடத்தியது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்றம் கெயில் நிறுவனத்தின் திட்டத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளதற்கு மத்திய-மாநில அரசுகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
கெயில் நிறுவனம் குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டங்கள் பல மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை வழியாகவே செயல்படுத்தப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தில் கொச்சி - பெங்களூரு 20 கிலோ மீட்டர் தூரமும், கர்நாடக மாநிலத்தின் வழியாக கொச்சி - பெங்களூரு 70 கிலோ மீட்டர் தூரமும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக குழாய் பதித்து கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்கிறது.
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் -வதோதரா தேசிய நெடுஞ்சாலையில் 520 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., ஜி.எஸ்.பி.எல்., போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாகவே எரிவாயு எடுத்துச் செல்கின்றன.
எனவே, மத்திய அரசின் நிறுவனமான கெயில் இந்தியா, தமிழ்நாட்டில் 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை வழியாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். மத்திய அரசு இதற்கான மாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்தினால் உச்சநீதிமன்றம் குறுக்கே நிற்கப்போவது இல்லை.
தமிழக விவசாயிகளின் கவலையைப் புரிந்துகொண்டு மாற்றுப் பாதையில் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் ஒட்டுமொத்த விவசாயப் பெருமக்களும் ஒன்று திரண்டு அறப்போரில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment