மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக தேர்தல் பிரச்சாரம் இன்று 29-03-2016 காலையில் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நடந்தது. இதில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோரும், தேமுதிக முன்னணி நிர்வாகி சந்திரகுமாரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் திருமாவளவன் அவர்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சி சின்னமான மோதிரத்தை ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் தங்கத்தில் திருமாவளவனுக்கு அணிவித்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் அவர்கள், மனசாட்சிக்கு உண்மையாக பணியாற்றிய முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தள்ளி கொலை செய்த இந்த அரசாங்கம் அகற்றப்பட வேண்டும். ஒரு தொழிற்சாலையாவது தென் தமிழகத்தில் துவக்கினார்களா? பெப்சி கம்பெனிக்கு இரண்டு இலட்சம் லிட்டர் தண்ணீரை தாரைவார்த்தது தான் அதிமுகவின் சாதனை என ஆளும் கட்சி மீது விமர்சனம் வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் இரா முத்தரசன் அவர்கள் பேசுகையில், 4 கட்ட பிரச்சாரத்தில் 4 கட்சிகள். 5ம் கட்ட பிரச்சாரத்தில் 5 கட்சிகள். திமுக தலைவரின் சின்னக் குழந்தை சொல்கிறது. ம.ந. கூ யை பினாமி என்று. எங்களுக்கு பினாமி என்றாலே என்னவென்று தெரியாது. பினாமிகளோடு வாழ்வதால் தான் அவருக்கு அதே சிந்தனை இருக்கிறது.
பொன். இராதாகிருஷ்ணன் அவர்களே, நீங்கள் கருப்பு பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் தருவதாக சொன்னீர்களே! அந்த பணம் எப்போது வரும்.
பஞ்சத்துக்கான கூட்டணி அல்ல , மக்கள் நலக்கூட்டணி. மக்களின் பஞ்சத்தை போக்க வந்த கூட்டணி. யாரிடமும் நாங்கள் இரகசியப் பேச்சு நடத்தவில்லை என பேசினார்.
தொடர்ந்து தொல்.திருமாவளவன் பேசுகையில், வெறும் அரசியல் ஆதாயத்திற்காக நாங்கள் இணையவில்லை. அதையும் தாண்டிய ஒரு உணர்வு உள்ளது. தமிழக அரசியலின் சரித்திரத்தை புரட்டிப் போடுவதற்காக நாங்கள் வலிமை பெற்றுள்ளோம். இப்படி ஒரு கூட்டணி அமையும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. நம் மீது கருணை காட்ட மாட்டாரா என நேற்று வரை காத்துக்கொண்டிருந்தவர்கள், இன்று மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்த பிறகு விஜயகாந்த் அவர்களை பூஜ்ஜியம் என்கிறார்கள். ஊழலை ஒழிப்போம், மதுக்கடைகளை மூடுவோம், திமுக - அதிமுக வை வீழ்த்துவது என்ற மூன்று முக்கியப் புள்ளிகளில் தேமுதிகவும் மக்கள் நலக்கூட்டணியும் உடன்படுகிறது. ஜெயலலிதாவின் கால்களில் அவர்கள் விழவில்லை. அவரைச் சுற்றியுள்ள அதிகாரத்தின் காலில் தான் அவர்கள் விழிகிறார்கள். நியாயவான்கள் அனைவரும் கோபக்காரர்களாகத் தான் இருப்பார்கள். தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சிமுறை ஒழிய வேண்டும். கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்றார்.
ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள், ஊடகச் சுதந்திரத்தை பாதுகாப்பதில் நாங்கள் முன்னணியில் நிற்போம். சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவோம் என சொன்ன அம்மையார் ஜெயலலிதா அவர்களே சொன்னதை செய்தீர்களா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமைதியான தமிழகத்தை உருவாக்குவோம். தமிழகத்தின் 10 ம் வகுப்பு படிக்க கூடிய மாணவர்களின் கற்றல் திறனில் கடைக்கோடியில் இருக்க காரணம் திமுகவும், அதிமுகவும் தான். ஐ ஏ எஸ், ஐ ஐ டி தேர்வில் தமிழகத்தில் இருந்து செல்வோர் மிகமிக குறைவு. தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மொத்தம் 65 பேர் மட்டுமே. ஆந்திர அரசு பள்ளிகளில் படித்து 4000 க்கு மேலும், மரட்டியத்திலிருந்து 1500 க்கு மேற்பட்டோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தான் திமுக ,அதிமுக கூறும் வளர்ச்சியா..? எனவு கேள்வி எழுப்பினார்.
இறுதி உரையாற்றிய மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள், ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பாதாள நிலவறைகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் பணம் பதுக்கப்பட்டு இருக்கின்றது.
நேற்று ஒரு பெரிய கண்டெய்னரும், தார்பாலின் போட்டு மூடப்பட்ட 10 லாரிகளும் அந்த பங்களா வளாகத்திற்குள் சென்றுள்ளன. எனவே தேர்தல் ஆணையம் உடனே அந்த பங்களாவை சோதனை போட வேண்டும். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு நேற்று நான் மின்னஞ்சல் அனுப்பினேன். அந்தச் செய்தியை இன்று காலை இந்து ஆங்கில ஏடு ஒருவரிகூட வெளியிடவில்லை.
ஆனால் தமிழ் இந்து நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்கள், தினத்தந்தி நாளிதழில் பூதக்கண்ணாடி போட்டு தேடிப் பார்த்தால் ஒரு நாலு வரி இருக்கிறது. தினமணி ஒருவரிகூட வெளியிடவில்லை.
தினமலரும், தினகரனும் செய்தியை நன்றாக வெளியிட்டிருக்கின்றார்கள். நீங்கள் ஒன்றும் ஜெயலலிதாவை குற்றம் சாட்ட வேண்டியது இல்லை. இவ்வாறு வைகோ தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருக்கிறார் என்று போட்டால் போதுமே.
எங்களைப் பற்றி பரப்பப்படுகின்ற அவதூறுகளை கொட்டை எழுத்தில் வெளியிடுகிறீர்கள் இது என்ன பத்திகை தர்மம்? ஜெயலலிதாவுக்கு அஞ்சுவது ஏன்? என பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் வைகோ கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment