உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை
அமல்படுத்த, மத்திய அமைச்சரவை பரிந்துரையின் பேரில் முதல்வர் ஹரீஷ்
ராவத் அமைச்சரவை கலைக்கப்பட்டு இருப்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும்.
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு எதிராக
அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் உத்தரகாண்ட் ஆளுநர் கே.கே.பாலைச்
சந்தித்து ஆட்சியைக் கலைக்கக் கோரி மனு அளித்தனர். அதனைப் பரிசீலித்த ஆளுநர்
மார்ச் 28 ஆம் தேதி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்குமாறு முதல்வருக்கு
உத்தரவிட்டார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்புக் கொடுக்காமல், குடியரசு
தலைவர் ஆட்சியை கொண்டு வந்திருப்பதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் வெட்ட
வெளிச்சம் ஆகி இருக்கிறது. மத்திய அரசு உத்தரகாண்ட் அரசை பதவி நீக்கம் செய்திருப்பது
வன்மையான கண்டனத்துக்கு உரியது.
உத்தரகாண்ட் அரசு கலைக்கப்பட்ட உடனேயே பா.ஜ.க.
பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா, பா.ஜ.க.
அங்கு ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று கூறி இருக்கிறார். கடந்த காலங்களில் மத்திய
காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தபோது, காங்கிரஸ்
கட்சி குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறது என்றும், ஜனநாயகப்
படுகொலை நடத்துகிறது என்றும் குற்றம் சாட்டிய பா.ஜ.க., காங்கிரஸ்
கட்சி செய்ததையே பின்பற்றி தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனநாயகத்தைக்
குழிதோண்டி புதைத்து இருக்கின்றது. சட்டமன்றத்தைக் கலைக்காமல், குதிரை
பேரத்தை நடத்தி உத்தரகாண்ட்டில் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. முயற்சி செய்வது
ஜனநாயகப்படுகொலை ஆகும். ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிப்பதில் பா.ஜ.க., காங்கிரஸ்
கட்சிகளுக்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு
வாங்கி, புறவாசல் வழியாக ஆட்சிக்கு வருவதற்கு குதிரை பேரம் நடத்தும்
பா.ஜ.க.வின் முயற்சியை குடியரசுத் தலைவர் முறியடிக்க வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment