Thursday, March 24, 2016

குருவை மிஞ்சிய சிஸ்யன் - வைகோவிற்கு பாராட்டு மழை!

இன்றைக்கு திமுகவை மேடைக்கு மேடை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந் தாலும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மீது வைத்திருக்கும் மரியாதையை வைகோ குறைத்துக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. பல சந்தர்ப்பங்களில் இதை அவர் நிரூபித்திருக்கிறார். அண்மையில் சில பத்திரிகையாளர்களிடம் தனியே பேசிக் கொண்டிருந்தபோது, கருணாநிதி பற்றிக் குறிப்பிடுகையில் ‘அண்ணன் கலைஞர்’ என்றே சொல்லிக் கொண்டிருந்தார்.


‘இப்பவும் கலைஞரை விட்டுக் கொடுக் காமல் பேசுறீங்களே சார்?’ என்று ஒரு செய்தி யாளர் கேட்டபோது, சிரித்துக்கொண்டே பழைய சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார்.

ஒரு ரயில் பயணத்தின்போது, கலைஞரின் கூபே அருகே குடித்துவிட்டு ரகளை செய்திருக்கிறார் அதிமுக பிரமுகர் ஒருவர். அவரால் கலைஞரின் தூக்கம் கெட்டுவிடக் கூடாதே என்பதற்காக, இரவு முழுவதும் கூபேக்கு அருகிலேயே நின்றுகொண்டு வந்திருக்கிறார் வைகோ. இந்த சம்பவத்தை குறிப்பிட்டுச் சொன்ன வைகோ, ‘நான் அவர் மீது வைத்திருந்த அன்பும் மரியாதையும் எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாதது’ என்று கூறியிருக்கிறார்.

இப்போதுகூட நண்பர்களிடம் பேசும்போது கலைஞரின் தமிழ்ப் பற்றையும், உழைப்பையும், ஆற்றலையும் மெச்சவே செய்கிறார். அதற்கு கலைஞரின் வயோதிகமும் ஒரு காரணம்.

‘கலைஞரின் ராஜதந்திரம் வேறு யாருக்குமே கைவராத திறமை’ என்று வைகோ அடிக்கடி சொல்வதுண்டு. இன்றைக்கு அந்த ராஜதந்திரம் வைகோவுக்கும் வாய்த்திருக்கிறது. மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி, இதுவரையில் அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கும் ஒருங்கிணைப்பே அதற்கு சாட்சி. விஜயகாந்தின் பலம் குறித்து ஆயிரம் கேள்விகள் இருந்தாலும், அவரை வளைக்க மத்திய அரசை கையில் வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியான திமுகவும் போட்டிபோட்டு போராடிக் கொண்டிருந்த நிலையில், தனது அடுத்தடுத்த முயற்சிகளால் தன் பக்கம் கொண்டு வந்திருக்கிறார் வைகோ.

‘பழம் கனிந்து இருக்கிறது. விரைவில் பாலில் விழும்’ என்றும், ‘இன்னும் அந்த நம்பிக்கை தொடர்கிறது' என்றும் சொன்னார் கலைஞர். அவ்வளவு சுலபத்தில் எந்த வார்த்தைகளையும் கலைஞர் விடமாட்டார். இந்த வார்த்தைகளின் பின்னணியில் விஜயகாந்த்தை கூட்டணிக்கு கொண்டுவர எவ்வளவு பகீரதப் பிரயத்தனங்களை திமுக தரப்பு செய்திருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இதையெல்லாம் கடந்துதான் விஜயகாந்தை வசீகரித்திருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. இதற்கு பெரும் பின்புலமாக வைகோ இருந்ததை யாரும் மறுக்க முடியாது.

தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியும் விஜயகாந்தும் இணைந்திருக்கும் அணி எத்தகைய வெற்றியை ஈட்டப் போகிறது என்பது வேறு விஷயம். ஆனால், கருணாநிதியால் சாதிக்க முடியாததை வைகோ சாதித்திருக்கிறார் என்பதை மட்டும் எல்லோரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். மதிமுகவை உடைத்தும் முக்கிய நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் கொண்டுவந்தும் வைகோவுக்கு எல்லாவித இடைஞ்சலையும் திமுக செய்தது. துரைமுருகன் உள்ளிட்ட திமுகவின் சீனியர் பிரமுகர்கள் ‘ஆளே இல்லாத கட்சி' என்கிற அளவுக்கு மதிமுகவை விமர்சித்தார்கள். ‘மக்கள் நலக்கூட்டணி தேர்தல் வரை நீடிக்கிறதா எனப் பார்ப்போம்', ‘நாலு கட்சியும் நாலு திசைக்கு போய்விடும்' என்றெல்லாம் சீண்டினார்கள். ஆனால், நான்கு கட்சிக் கூட்டணி இப்போது ஐந்து கட்சிக் கூட்டணியாக கம்பீரமாகி இருக்கிறது.

‘முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்', ‘124 சீட்கள்' என விஜயகாந்த்தை கூட்டணிக்குக் கொண்டுவர மக்கள் நலக் கூட்டணி கொடுத்த விலை பெரிதுதான். ஆனால், ‘அதிமுக, திமுகவுக்கு மாற்றான அணி’ என்கிற வல்லமை விஜயகாந்த் வந்தபிறகுதான் மக்கள் நலக் கூட்டணிக்கு மிகுதியாகி இருக்கிறது.

மூத்த தலைவர் கருணாநிதியின் ராஜ தந்திரங்களை ஒரு சிஷ்யன் தவிடுபொடியாக்கி இருக்கிறார். ‘மக்கள் நலக் கூட்டணிக்கும் தேமுதிகவுக்கும் ஒருங்கிணைப்பாளர் வைகோ தான்' என விஜயகாந்த் கொடுத்திருக்கும் சான்றிதழ் நிச்சயமாக கலைஞரை நெளிய வைத்திருக்கும். 'குருவை மிஞ்சிய சிஷ்யன் வைகோ' என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் சொன்ன வார்த்தைகள் கலைஞரின் எரிச்சலை இன்னும் அதிகமாக்கி இருக்கும். முத்தரசன் இப்படி சொன்னபோது வைகோ முகத்தில் லேசான புன்னகை..

எம்ஜிஆர் முதன்முறையாக முதல்வராகி டெல்லி சென்ற நேரம்..

‘‘கலைஞர் மிகப் பெரிய ராஜ தந்திரியாயிற்றே... அவரை எப்படி தோற்கடித்தீர்கள்?’’ என பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டனர்.

எம்ஜிஆர் சொன்னார்: ‘‘கலைஞர் எப்படி திரைக்கதை எழுதுவார்... எங்கே முடிச்சுப் போடுவார், எங்கே அவிழ்ப்பார் என்பது எனக்குத் தெரியும். காரணம், அவருடைய கதையில் நான் நடித்திருக்கிறேன். ஆனால், நான் எப்படி கதை எழுதுவேன் என்பது கலைஞருக்குத் தெரியாது”

அன்று புரட்சித் தலைவர் செய்ததை, புரட்சிக் கலைஞரை வைத்து இன்றைக்கு செய்து காட்டி இருக்கிறார் வைகோ.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment