முல்லைப் பெரியார் விடயத்தில் ஆலோசனை தந்து பேருதவியாக இருந்த பொறியாளர் விஜயகுமார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று நேற்று இரவு 10 மணிக்கு, மதுரையில் திரு. விஜயகுமார் அவர்களது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மாமனிதர் விஜயகுமார் புகழ் வாழ்க வைகோ இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிபிட்டிருப்பதாவது...
தமிழக அரசின் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி, தமிழ்நாட்டுக்கு அருந்தொண்டாற்றிய பொறியாளர் விஜயகுமார் மறைந்தார் என்ற செய்தி கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
கடந்த 11 ஆண்டுகளாக நான் அவருடன் பழகி வருகிறேன். தமது பெருமதிப்பிற்கும், நன்றிக்கும் உரியவரான விஜயகுமார் அவர்கள் பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் தலைவரான திரு. வீரப்பன் அவர்களுடன் இணைந்து தயாரித்திருந்த முல்லைப் பெரியாறு பிரச்சினைகள் குறித்த ஒரு விளக்க அறிக்கையை எனக்கு அனுப்பி இருந்தார். நான் அதைப் பார்த்துவிட்டு, அவரது தொலைபேசி எண்ணை வாங்கி அவருடன் தொடர்புகொண்டு, உங்களை சந்திக்க வேண்டும் என்று சொல்லி மதுரையில் சந்தித்தேன். சுமார் இரண்டு மணி நேரம் என்னிடம் விளக்கங்கள் தந்தார்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் என்ன தடைகள் உள்ளன, அவற்றை எப்படிக் களைவது, இப்போதுள்ள நிலைமை என்ன? என்பது குறித்து விரிவான விளக்கங்கள் தந்தார். அவர் மூலமாகத்தான் முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்த பல நுணுக்கங்களை அறிந்துகொண்டேன். அதன்பிறகு அவருக்கும் எனக்கும் மிக நெருக்கமான நட்பு ஏற்பட்டது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அதிகாரிகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல், காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்து தமிழகத்தின் நலன்களையும், உரிமைகளையும் காக்கப் போராடி இருக்கின்றார். அவரைப் போல மேலும் பல பொறியாளர்கள் போராடி இருக்கின்றார்கள்.
2007 பிப்ரவரி 27 இல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தபோதே நீர்மட்டத்தை 142 அடிக்கு நாம் உயர்த்தி இருக்கலாம்; அப்போது அந்த அளவுக்குத் தண்ணீர் வந்துகொண்டு இருந்தது; இதுகுறித்து நான் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சரிடம் சொன்னேன்; அதற்கு அவர் இப்போது நாம் செய்ய முடியாது என்று கூறிவிட்டார். அதன் பிறகுதான் கேரள அரசு, மார்ச் 15 இல் கேரள சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தது.
தமிழக நலன்களைக் காக்க வேண்டும் என்பதற்காகத் தங்களுடைய பென்சன் பணத்தில் பொறியாளர் விஜயகுமார் அவர்களும், பொறியாளர் வீரப்பன் அவர்களும் சேர்ந்து குறுந்தகடுகள், விளக்கக் கையேடுகள் தயாரித்து தமிழகம் முழுவதும் அனுப்பினார்கள். அந்தக் குறுந்தகடை நான் இலட்சக்கணக்கான பிரதிகள் எடுத்து ஐந்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் வழங்கினேன்.
2006 டிசம்பர் 18 இல் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகில் இருந்து முல்லைப் பெரியாறு பாதுகாப்பு நடைப்பயணத்தை நான் தொடங்கியபோது, விஜயகுமார் அவர்கள் மேடைக்கு வந்து என்னை மிகவும் பாராட்டி, புகழ்ந்து சிலாகித்துச் சொன்ன வார்த்தைகளையும், உரையையும் நான் என்றுமே மறக்க முடியாது. எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டுப் பத்திரமாகவே கருதுகிறேன். அதன் பிறகு நாங்கள் நடத்திய அனைத்துப் போராட்டக் களங்களுக்கும் வந்தார்.
மதுரையில் சகோதரர் பூமிநாதன் ஏற்பாடு செய்திருந்த முல்லைப் பெரியாறு வெற்றி விழா மற்றும் பாராட்டு விழாவில் உடல்நலக் குறைவுற்று இருந்த நிலையிலும் பங்கேற்று, என்னைப் பாராட்டி நீண்ட நேரம் வாழ்த்திப் பேசினார். அதன் பிறகு குடும்த்தாருடன் வந்து நான் அவரைச் சந்தித்தபோது, புற்றுநோய் அவரை மிகக் கடுமையாகத் தாக்கி இருந்தது. மிகுந்த வேதனையுற்றேன்.
விஜயகுமார் தமிழ்நாட்டுக்காகப் பாடுபட்ட மாமனிதர் ஆவார். நேர்மையோடும், நாணயத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தமிழ்ச் சமூகத்திற்கு தொண்டாற்றி இருக்கின்றார். தன்னுடைய ஓய்ñதியப் பணத்தைக்கூட தமிழ்நாட்டின் நலனுக்காகச் செலவழித்திருக்கின்றார். இத்தகைய நல்ல மனிதர்களால்தான் தமிழகம் பாதுகாக்கப்படுகிறது. அவர் செய்த தியாகத்திற்கு தமிழகம் கடமைப்பட்டிருக்கின்றது. குறிப்பாக முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றார்கள். மதுரை மாநகர மக்கள் பருகுகின்ற குடிதண்ணீரை பாதுகாப்பதில் விஜயகுமார் போன்ற பொறியாளர்களின் பணி மகத்தானது.
பொறியாளர் விஜயகுமார் அவர்களது மறைவால் வேதனையில் ஆழ்ந்திருக்கும் அன்னாரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உத்தமர் விஜயகுமார் புகழ் நீடு வாழ்க என வைகோ குறிப்பிட்டுள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment