அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகிலுள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி அழகர், தனியார் நிதி நிறுவனத்தின் கெடுபிடியால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது! பெரம்பலூரில் இயங்கி வரும் சோழமண்டல நிதி நிறுவனத்தில் கடன் பெற்று டிராக்டர் வாங்கிய அவர் 5 இலட்சம் ரூபாய் வரை கடனை திருப்பிச் செலுத்தியுள்ளார். ஒரு சில தவணைகளைக் கட்டவில்லை என்று நிதி நிறுவனத்தின் சார்பில் அடியாட்கள் சென்று அழகரை பொது இடத்தில் வைத்து தாக்கி உள்ளனர். இந்த அவமானம் தாங்க முடியாத வேதனையில் அழகர் நஞ்சு அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டை அடுத்துள்ள சோழன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன், கோடக் மகிந்திரா தனியார் வங்கியில் டிராக்டர் வாங்க கடன் பெற்று, கடனை முறையாக திருப்பி செலுத்தி வந்திருக்கின்றனர். மேலும் சில தவணை தொகையைக் கட்ட கால அவகாசம் கேட்ட அவரை தனியார் வங்கி ஊழியர்கள் குண்டர் படையுடன் சென்று கடன் தவணைகளை செலுத்தக் கோரி அவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பாப்பாநாடு காவல்நிலைய காவலர்கள், தனியார் வங்கியின் ஏவலர்களாக மாறி, விவசாயி பாலனை அடித்து இழுத்துச் சென்றதுடன், டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
விவசாயி பாலன் தாக்கப்பட்டதை அறிந்து விவசாயிகள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரியலூரில் இன்னொரு விவசாயி அழகர் தனியார் நிதி நிறுவனத்தின் அடாவடியால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 2011 முதல் 2015 வரை 5 ஆண்டுகளில் மட்டும் 2,422 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம், 2015 டிசம்பரில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தமிழக விவசாயிகளில் 82.5 விழுக்காடு பேர் மீள முடியாத கடன் சுமையில் சிக்கி இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்த அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள விவசாயக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் சராசரியாக ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 900 ரூபாய் கடன் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயக் குடும்பங்களின் சராசரி கடன் சுமை அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.
இரண்டாவது பசுமைப் புரட்சி என்று சுய தம்பட்டம் அடித்துக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, விவசாயிகளின் துயரங்களைப் போக்க எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேளாண் கடன்களை ரத்து செய்யவும் கரும்பு, நெல் உள்ளிட்ட வேளாண் விளைப் பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யவும், தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையைப் பெற்றத் தரவும் எந்த முயற்சியும் எடுமுக்கவில்லை. ஐந்து ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் விவசாயிகள் பல வகைகளிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
கடனில் பிறந்து கடனிலேயே மூழ்கி மடிந்து போகும் விவசாயிகளை மத்திய - மாநில அரசுகள் கைவிட்டுவிட்டன. இந்தியாவில் வங்கிகளின் வராக்கடன் அளவு 2.67 இலட்சம் கோடி ரூபாய் என்று மத்திய நிதி அமைச்சகம் கணித்துள்ளது. இந்நிலையில், விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தி வரும் போது, ஜப்தி நடவடிக்கைகள் எடுப்பதும், குண்டர்களை வைத்துக்கொண்டு விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதும், காவல்துறையும் நிதி நிறுவனங்களின் அடியாள் படையாக செயல்படுவதும் வன்மையான கண்டனத்துக்கு உரியது.
அரியலூர் விவசாயி அழகர் தற்கொலைக்குக் காரணமான தனியார் நிதி நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், உயிரைப் போக்கிக் கொண்ட விவசாயி அழகர் குடும்பத்துக்கு 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். மக்கள் நலக் கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வரும் நிலையில், கடன் வலையிலிருந்து விவசாயிகளை மீட்கும் நடவடிக்கைகளை எடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment