மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டம் நவம்பர் 24ஆம் நாள் கோவையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.சுதாகர் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வதாக இருந்தனர். கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையாலும், அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்காலும் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மக்கள் நலக் கூட்டணியின் தொண்டர்களும் நிவாரணப் பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சில நாட்களுக்கு மழை தொடரலாமென வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, கோவையில் நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 12ஆம் நாள் மதுரையில் நடைபெறும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு போதிய நிவாரணங்களை வழங்கவிலலை. வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காததால் தலைநகர் சென்னையில்கூட மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னமும்கூட பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடவோ மக்களுக்கு ஆறுதல் சொல்லவோ முதலமைச்சர் முன்வராதது வேதனையளிக்கிறது. இந்நிலையில், மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணியின் தொண்டர்கள் இயன்றவரையில் எல்லா உதவிகளையும் செய்யுமாறு வேண்டுகிறோம். தமிழக அரசு இனியாவது நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம் என மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment