Friday, November 27, 2015

ஜப்பான் நாட்டுத் தமிழறிஞர் நோபுரு கரஷிமா மறைவு வைகோ இரங்கல்!

ஜப்பான் நாட்டுத் தமிழறிஞர், பேராசிரியர் நோபுரு கரஷிமா அவர்கள் தனது 82 ஆவது வயதில் நேற்று ஜப்பானில் மறைந்தார். டோக்கியோ பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும், கிழக்காசிய வரலாற்றுத்துறையில் ஆய்வு அறிஞராகவும் திகழ்ந்த பேராசிரியர் முனைவர் நோபுரு கரஷிமா, உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவராக 1989 ஆம் ஆண்டு முதல் 2010 வரையில் சிறப்பாக செயற்பட்டவர் ஆவார். தமிழ்நாட்டின் மொழி, சமூக மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் தோய்ந்து பல நூல்களை எழுதியுள்ளார்.


வரலாற்றுக் காலம் தொடங்கி தமிழ்ச் சமூக மாற்றங்கள் குறித்து, கரஷிமா அவர்களின் ஆய்வுப்பணி குறிப்பிடத்தக்கது ஆகும். இந்திய கல்வெட்டு இயல் கழகத்தின் தலைவர் பொறுப்பினை ஏற்று, சோழர் கால கல்வெட்டுகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். மேலும் கல்வெட்டுகள் குறித்த சொல் அகராதி முதலிய நூல்களை எழுதி, தமிழக வரலாற்று ஆய்வுக்கு பெரும் பங்காற்றிய பெருமை நோபுரு கரஷிமா அவர்களையே சாரும்.

1995 ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த 8 ஆவது உலகத் தமிழ்மாநாட்டை முன்னின்று நடத்திய நோபுரு கரஷிமா அவர்கள், 2010 இல் அன்றைய திமுக அரசு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தபோது, அரசியல் காரணங்களுக்காகவே அந்த மாநாடு நடைபெறுகிறது என்று மிகச்சரியாக கணித்து, மாநாட்டில் பங்கேற்க முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டார். நோபுரு கரஷிமா அவர்களின் மொழியியல் மற்றும் வரலாற்று ஆய்வுகளை பாராட்டி, இந்திய அரசு 2013 இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியதும், ஜப்பான் சென்றிருந்தபோது பிரதமர் மன்மோகன் சிங் நேரில் சென்று அந்த விருதை அவ்ருக்கு அளித்ததும் பேராசிரியர் நோபுரு கரஷிமா அவர்களின் பெருமையை பறைசாற்றும்.

தமிழ் மொழி, பண்பாட்டு, சமூக ஆய்வுகளுக்கு அருந்தொண்டாற்றிய அயலக தமிழறிஞர் நோபுரு கரஷிமா அவர்களின் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். பேராசிரியர் நோபுரு கரஷிமா அவர்கள் மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment