எம்.கே.நாராயணனை செருப்பாலடித்த அறந்தாங்கி பிரபாகரனுக்கு ஜாமீன் விடுதலை ஆணை இன்று கிடைத்தது. இதனை கரூர் வழக்கறிஞர் மோகன் வாதாடி பெற்றார்.
பிரபாகரன் இலங்கைத் தமிழர். இவரின் தந்தை பெயர் மெய்யப்பன். புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணங்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
இவரின் பெற்றோர் இலங்கையின் மலையகத் தமிழர். பிரபாகரன் இளவயதிலேயே தமிழகம் வந்து உறவினர்களுடன் வசித்து வருகிறார். இதனால் தமிழகத்தில் நடைபெறும் ஈழத்தமிழர் குறித்த அரசியல் நிகழ்வுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவர் சென்னையில் கோயம்பேடு பகுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். அவ்வப்போது சென்னையில் நடைபெறும் தமிழர் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில்,"இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்" என்ற தலைப்பிலான கருத்தரங்கு சென்னை மியூசிக் அகாடமியில் நடக்க உள்ளதாக வந்த விளம்பரத்தைப் பார்த்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டவாறு தனது முகவரி தொலைபேசி எண் ஆகியவற்றைக் கொடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவும் செய்துள்ளார்.
அதன்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். கருத்தரங்கில் எம்.கே.நாராயணின் பேச்சை முழுமையாகக் கேட்டுள்ளார். அவர் தனது பேச்சை முடித்து மேடையை விட்டு இறங்கி வருகிறபோது, பிரபாகரன் எம்.கே. நாராயணுக்கு கை கொடுப்பது போல சென்றுள்ளார். அவருக்கு இடது கையை கொடுத்துவிட்டு, வலது கையால், " இலங்கையில் நடந்த இன அழிப்புக்கு காரணமே நீதான்...!" என்றபடியே காலில் இருந்த செருப்பைக் கழற்றி கழுத்து, முகம், தலை ஆகிய பகுதிகளில் எம்.கே.நாராயணனை சரமாரியாக அடித்துள்ளார். இந்த தாக்குதலை எதிர்பார்க்காத நாராயணன் அதிர்ச்சியடைந்து, நிலைகுலைந்து போனார்.
அரங்கின் உள்ளேயே இந்த தாக்குதல் நடைபெற்றதால் அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சில நொடிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனே விழா மேடையில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு, "போலீஸ்... போலீஸ்!" என்று குரல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த 10 க்கும் மேற்பட்ட போலீசார், பிரபாகரனை மடக்கி பிடித்துக் கைது செய்தனர். ஆனால் பிரபாகரன் அங்கிருந்து தப்பிச் செல்லவோ,போலீசாரிடம் தகராறு செய்யவோ முயலவில்லை.
பின்னர் அரங்கின் வெளியே கொண்டுவரப்பட்ட பிரபாகரன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...
"இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு முக்கிய காரணம் எம்.கே.நாராயணன்தான். அவரைத்தான் முதலில் கைது செய்திருக்க வேண்டும். இன அழிவுக்கு காரணமாக இருந்த நாராயணன், பாதுகாப்பு ஆலோசகராக இருந்து தன்னை யோக்கியனாகக் காட்டிக் கொண்டார். இலங்கை அகதிகள் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்ள, தமிழின அழிவுக்கு காரணமான நாராயணனுக்கு என்ன தகுதி இருக்கிறது ?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, போலீசார் உடனடியாக கைது செய்யப்பட்ட பிரபாகரனை தங்களின் பாதுகாப்பில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இரவு 8 மணி அளவில், சென்னை நீலாங்கரையில் உள்ள சைதாப்பேட்டை 18 -வது மாஜிஸ்திரேட் மோகனா இல்லத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பின் பிரபாகரனை மத்திய புழல் சிறையிலடைத்தனர். அவர்தான் இன்று ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
சகோதரர் பிரபாகரன் அவர்களின் வீரத்தை பாராட்டுவதோடு, தமிழ் அமைப்புகளில் எப்போதும் போல இணைந்து போராடி தமிழீழத்தை வென்றெடுக்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறோம்.
செய்தி சேகரிப்பு: வாட்சப்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment