இன்று காலை 11 மணிக்கு தாயகத்தில் மக்கள் நலக் கூட்டு இயக்க குறைந்த பட்ச செயல் திட்டம் வெளியிடப்பட்டது. கூட்டியக்க தலைவர்கள் தாயகத்தில் இறுதி கட்டமாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர் குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையை கூட்டியக்க தலைவர்கள் இணைந்து வெளியிட்டனர். நவம்பர் 25 ஆம் தேதி மக்கள் நல கூட்டு இயக்க அறிக்கை குறித்த விளக்க பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
பின்னர் மக்கள் நல கூட்டியக்கம், மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் அதன் பதாகையை திறந்து அறிவித்தனர்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய வைகோ அவர்கள், கூட்டியக்கத்தின் அறிக்கை அள்ளி தெளித்த அவசர கோலத்தில் வெளியிடப்படவில்லை. அனைவரும் ஒருமனதாக ஒன்றுபட்டு அனைத்து மட்டத்திலும் விவாதித்து முடிவெடுத்திருக்கிறோம் என்றார்.
மேலும், இந்த கூட்டியக்கம் பொதுமக்களிடத்தில் நம்பிக்கையை விதைத்துள்ளது,எதிர்மறை ஓட்டுகளே ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. எனவே மக்கள் வரவேற்பார்கள் என்ற எண்ணத்தில் இந்த செயல் திட்டத்தை வெளியிடுகிறோம்.
சொத்து குவிப்பு வழக்கிற்கு பிறகும் திரையரங்கம் வாங்குவதில் அப்பட்டமான ஊழல் அதிமுகவில் நடைபெற்றிருக்கிறது. எனவே சி.பி.ஐ விசாரணை வேண்டும் என வைகோ தெரிவித்தார்.
தமிழகத்தை அதிமுக ஊழலில் திளைக்க வைத்தது. திமுக வும் அதன் தலைவரின் மொத்த குடும்பமும் ஊழலில் சிக்கி தவிக்கிறது. ஊழல் நாணயத்தின் இரு பக்கங்கள் அதிமுக, திமுக. இதிலிருந்து விடுபடவே மக்கள் நல கூட்டியக்கம் எனவும் வைகோ தெரிவித்தார்.
மக்கள் நல கூட்டு இயக்கம் இன்று மக்கள் நல கூட்டணியாக அறிவிக்கப்படுகிறது.ஒத்த கருத்து உடைய மற்ற கட்சிகளை எதிர்பார்க்கிறோம், வரவேற்கிறோம் எனவும் கூறினார் வைகோ.
சதவீத ஓட்டு கணக்குகளை தகர்த்தெறிந்து மக்கள் ஒத்துழைப்புடன் இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும். இந்த நான்கு கட்சி ஒன்றாக இருக்காது என்று இரண்டு மாதங்களாக விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். இனி வெற்றி பெறாது என்ற கருத்தை வைக்க முயற்சிப்பார்கள் எனவும் கூறினார் வைகோ.
தொடர்ந்து பேசிய தலைவர் வைகோ அவர்கள், தேமுதிக வும் தமாக வும் இந்த கூட்டணிக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஊடகங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். எங்கள் வெற்றியில் ஊடகங்களுக்கு பங்கு இருக்கிறது என்றார்.
பிரச்னைகளை மக்களை திசைதிருப்புவதில் அதிமுகவும் திமுகவும் ஒன்றுதான். கோவனை இன்று உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை தமிழகத்துக்கு உண்டு. நாங்க எப்போதும் மக்களுடனே இருக்கிறோம். புதிதாக சந்திப்பவர்கள் வேண்டுமானாலும் செட்டிங் போட்டு சந்திக்கட்டும் என்று பேசினார் வைகோ.
இந்த நிகழ்வில் கூட்டியக்க நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment