Monday, February 29, 2016

கேரள முதல்வருக்கு கடிதம் எழுதிய வைகோ அவர்களுக்கு நன்றி!

மரியாதைக்குரிய தலைவர் திரு. வைகோ அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் பண்பைக் கண்டு மகிழ்கிறேன். சந்தித்த சில மணி நேரங்களிலேயே உறுதி கொடுத்தது போல் கேரள முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டீர்கள். தாய் கண்ணகித் தங்களைக் காப்பாள்.

நன்றி,
யாணன்,(கண்ணகி அம்மன் வழிபாட்டு மன்றம்)

ஓமன் மதிமுக இணையதள அணி

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மத்திய பட்ஜெட்! வைகோ கருத்து!

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்துள்ள 2016-17 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் கடந்த இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தவைதான் இடம் பெற்றுள்ளன. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. பொருளாதார வளர்ச்சி என்பதை 8.6 எழுக்காடு இருக்கும் என்று போன ஆண்டு கணித்தது பொய்த்துப் போனது. பொருளாதார வளர்ச்சி 7.6 விழுக்காடு அளவுதான் எட்டப்பட்டு இருக்கிறது. பணவீக்க விகிதம் குறைந்தாலும் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. இணையதள வர்த்தகம், முன்பேர வணிகத்தால் பருப்பு விலை மூன்று மடங்கு உயர்ந்து போனதைத் தடுக்க முடியாத மத்திய அரசு பருப்பு விலையைக் கட்டுப்படுத்த 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வது ஏமாற்று வேலை.

விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆக்கப் போகிறார்களாம். அந்த இலக்கை அடைவதற்கு முன்வைத்துள்ள திட்டங்கள் என்ன? கடந்த 13 ஆண்டுகளில் இந்தியாவில் இரண்டரை இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மோடி அரசிலும் இதே நிலைமைதான் தொடருகிறது.

விவசாயத் துறையை கார்ப்பரேட் மயம் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கி உள்ள நிதி போதுமானது அல்ல. பாரம்பரிய வேளாண்மையை அழிக்கும் வகையில் மரபணு மாற்றுப் பயிர் சாகுபடிக்கு அனுமதி அளித்துவிட்டு, இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்போம் எறு தெரிவித்துள்ளது முரணாக இருக்கிறது.

உலக வங்கி கட்டளைக்கு அடிபணிந்து உரத்துக்கான மானியங்களை வெட்டியதால் இரசாயன உரங்களை, யூரியா விலைகள் பன்மடங்கு உயர்ந்து விட்டன. இந்நிலையில் உர மானியத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று கூறுவது நடைமுறை சாத்தியமற்றது.

இந்திய உற்பத்தித் துறையில் பல கோடி பேருக்கு வேலைவாய்ப்பளித்து வரும் சிறு, குறு தொழில்துறை நலிந்து வருவதைக் காப்பாற்ற மத்திய அரசு முனைப்பான நடவடிக்கை எடுக்கவில்லை. சிறு தொழில் நிறுவனங்களுக்கான உற்பத்தி வரி விலக்கு வரம்பை 1.5 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டிருந்தால் ஓரளவு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், 2 கோடி ரூபாய் என்று மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு 3 ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்படும் என்ற அறிவிப்பு அந்நிய நிறுவனங்களுக்குச் சாதகமானது ஆகும்.

பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யவும் வங்கித் துறையை முற்றிலும் தனியார் மயமாக்கவும் தொடர் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்காகவே பங்கு விலக்கல் துறையின் பெயர் முதலீடு மற்றும் பொதுச் சொத்துத் துறை என்று மாற்றப்படுகிறது.

பங்கு சந்தையை மையப்படுத்தியும், அந்நிய முதலீடுகளை நம்பியும் இந்தியப் பொருளாதார சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டில் 13,414 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. ஆனால், பா... அரசு, அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீட்டை விரிவுபடுத்தி வருகிறது. உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் மருந்து உற்பத்தித் துறைகளில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவது கண்டனத்துக்கு உரியது.

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படாததால் மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது ஏற்கக் கூடியதல்ல.

கிராமப்புற மூத்த குடிமக்களுக்குக் காப்பீடு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத் தொழில் முனைவோருக்குத் தேசிய மையம், சிறுநீரக டயாலிசிஸ் இயந்திரங்களுக்கு உற்பத்தி வரி நீக்கம், நில ஆவணங்கள் மின்னணு மயமாக்குதல் போன்ற சில வரவேற்கத் தக்கவை இருந்தாலும் மத்திய வரவு-செலவு அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் மாற்று அரசியல் எழுச்சிப் பிரச்சாரப் பயணம்!

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் மூன்றாம் கட்ட மாற்று அரசியல் எழுச்சிப் பிரச்சாரப் பயணம்!

01.03.2016 செவ்வாய்:
ஆவடி காலை 10 மணி
திருவள்ளூர் மதியம் 12 மணி
அரக்கோணம் மாலை 4 மணி
வேலூர் இரவு 7 மணி

02.03.2016 புதன்:
கிருஷ்ணகிரி காலை 10 மணி
தருமபுரி மதியம் 12 மணி
சேலம் மாலை 6 மணி

03.03.2016 வியாழன்:
அரூர் காலை 10 மணி
செங்கம் மாலை 5 மணி
திருவண்ணாமலை இரவு 7 மணி

04.03.2016 வெள்ளி:
உளுந்தூர்பேட்டை காலை 10 மணி
திண்டிவனம் மாலை 4 மணி
செங்கல்பட்டு இரவு 7 மணி

வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகிய மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஒன்றாக மக்களை சந்தித்து மாற்று அரசியல் எழுச்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். 

ஓமன் மதிமுக இணையதள அணி

மதிமுக, சிபிஐ (எம்), சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி - மக்கள் நலக் கூட்டணி - கூட்டறிக்கை!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஹைதராபாத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதனை மக்கள் நலக்கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர்கள் மீது பொய் குற்றச்சாட்டு புனையப்பட்டு, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதை கடுமையாக எதிர்த்து, மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பழி வாங்கும் உள்நோக்கத்தோடு தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடுமையான அரசியல் சட்ட அத்துமீறலும், ஜனநாயகப் படுகொலையுமாகும்.

சுதந்திரமாக கருத்து சொல்லும் உரிமையைப் பறிக்க காலனிய சட்டங்களை பயன்படுத்தி, ஆளுகிற நரேந்திர மோடி அரசு எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறது. தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்ய வழிவகை செய்திடும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 124-ஏ பிரிவு மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிற பிரிவாக அமைந்துள்ளது. எனவே, இந்திய குற்றவியல் சட்டத்திலிருந்து அப்பிரிவினை உடனடியாக அகற்ற வேண்டுமென மக்கள் நலக்கூட்டணி கோருகிறது.

மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்துகிற எதிர்க்கட்சியினரை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துவதும், அவர்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத்தையும் பறிக்கின்ற நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டுமென மக்கள் நலக்கூட்டணி மத்திய அரசை கடுமையாக எச்சரிக்கிறது.

ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், 124-ஏ பிரிவினை வாபஸ் பெறவும் கோரி தமிழ்நாடு முழுவதும் கண்டன தெருமுனைக் கூட்டங்களை நடத்திட வேண்டுமென மக்கள் நலக்கூட்டணி கேட்டுக் கொள்கிறது என வைகோ, ஜி. ராமகிருஷ்ணன், இரா. முத்தரசன், தொல். திருமாவளவன் ஆகியோர் கூட்டறிக்கை தெரிவித்துள்ளனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

கேரளாவில் கண்ணகி வழிபாட்டினை மூன்று நாட்களாக நீட்டிக்க வைகோவிடத்தில் கோரிக்கை!

கண்ணகி அம்மன் வழிபாட்டு மன்றத்தை சார்ந்த யாணன் அவர்கள் இன்று காலை மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், பொதுச் செயலாளர் வைகோ அவர்களை சந்தித்து வெற்றிக்கு ஆதாரமாக வெற்றிலை மாலையையும், கண்ணகியின் கைச்சிலம்பையும் அளித்தார்.

கேரளாவில் கண்ணகி வழிபாட்டினை மூன்று நாட்களாக நீட்டிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைகோ அவர்களிடம் தெரிவித்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் திருமணம் வைகோவிற்கு அழைப்பு! .

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் திரு.கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தன் திருமண அழைப்பிதழை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இன்று காலை தாயகத்தில் சந்தித்து அழைத்தார்கள். வழக்கறிஞர் ரஜனிகாந்த் மற்றும் வழக்கறிஞர் அண்ணன் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

மெரினா கடற்கரையில் மாணவர் மீதான பாஜக-வின் அராஜக போக்கை கண்டித்து கையெழுத்து போராட்டம்!

ஞாயிறு மாலை மெரினா கடற்கரையில் பொதுவுடமை மாணவர்கள், மறுமலர்ச்சி மாணவர் மன்றம் சார்பில் பி.ஜே.பி அரசின் மாணவர்கள் மீதான அராஜக வன்முறை தாக்குதலை கண்டித்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர், வைகோ கலந்து கொண்டு, கையெழுத்திட்டு, ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, February 28, 2016

பழ.நெடுமாறன் அவர்களிடம் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு கோரினார் வைகோ!

28.02.2016 இன்று காலை 10:00 மணியளவில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்களை பல்லாவரத்தில் உள்ள அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சந்தித்து, நடக்கவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு அளிக்க கேட்டு சந்தித்தார்.

அப்போது நாம் தமிழர் கட்சியின் முன்னாள் முக்கிய நிர்வாகி அய்யநாதன் உடனிருந்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

சேர்ந்தே இருப்பது ஜெயலலிதா ஆட்சியும், ஊழலும் என நெடுஞ்சாலைத்துறை இளநிலைப் பொறியாளர் நியமனத்தை இரத்து செய்ய வைகோ அறிக்கை!


தமிழக அரசில், கிராம நிர்வாக அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை லஞ்சம் கொடுத்தால்தான் கோப்புகள் நகரும். நாலரை ஆண்டுகளில் அமைச்சர்களும், ஆளும் கட்சியினரும் அரசு ஒப்பந்தப் பணிகளில் 35 விழுக்காடு கமிஷன் கொள்ளைக்காக நடத்தி இருக்கின்ற முறைகேடுகள், விதிமீறல்களை இராமாயணம், மகாபாரதம் போல ஒரு நெடுங்காப்பியமாகத்தான் எழுத வேண்டும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய்; கல்லூரிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் பணி நியமனங்களுக்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்; பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் பதவிக்கு 8 கோடி ரூபாயும் வசூலித்துக் கொண்டு இருப்பதைத் தமிழகத்தின் பட்டிதொட்டிகளில், ஆலமரத்தில், தேநீர்க்கடைகளில் விவாதித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.


ஆட்சி அதிகாரத்தின் அந்திமக் காலத்தில்கூட ஆளும் கட்சியினர் வாரிச் சுருட்டுவதற்காக, தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 180 இளநிலை பொறியாளர்கள் (JDO) பணி இடங்களுக்கு 13,500 பேருக்கு அவசர அவசரமாக அழைப்பு அனுப்பி, கண் துடைப்பாக ஒரு நேர்காணலையும் நடத்தி முடித்து விட்டனர். ஆளும் கட்சிக்கு நெருக்கமான அதிகாரிகள்தான் இந்த நேர்காணலை நடத்தி இருக்கின்றார்கள். குறிப்பாக, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் பொறுப்பில் இருப்பவர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் உறவினர்கள் மேற்பார்வையில்தான், முறைகேடான நேர்காணல்கள் நடத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் உறவினர்கள் கோடிகளில் புரள்கிறார்கள்.

கடந்த ஆண்டும் இளநிலை பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை விலை வைத்து கொள்ளையடித்தனர். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் இளநிலை பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நடைமுறையை மாற்றி, அரசாணை மூலம் நேர்காணல் நடத்தினால்தான் லட்சக்கணக்கில் குவிக்கலாம் என்று ஆளும் கட்சி கொள்ளைக் கும்பல் துணிந்து இத்தகைய முறைகேடுகளில் இறங்கி உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் வேளாண் துறையில் ஓட்டுநர் பணி நியமனங்களுக்கு கையூட்டு பெற்றுத் தருமாறு மிரட்டியதால் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிறைக்கு அனுப்பப்பட்டார். இதன் பின்னரும் தமிழக அரசு நிர்வாகத்தில் புறையோடிப் போன ஊழலைத் தடுக்க முடியவில்லை.

இத்தகைய வெட்ககரமான லஞ்ச ஊழல் அனைத்திற்கும் முதல்வர் ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும். ‘சேர்ந்தே இருப்பது ஜெயலலிதா ஆட்சியும் ஊழலும்’ என்கிற அளவிற்கு, அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை இளநிலைப் பொறியாளர்கள் பணி நியமனத்தில் நடந்துள்ள முறைகேடான நேர்காணலை ரத்து செய்ய வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் முறையாக தேர்வு செய்ய வேண்டும்; இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சமூக நீதியையும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தவறினால், முறைகேடான பணி நியமனங்கள் இரத்து செய்யப்படும் நிலை ஏற்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, February 27, 2016

வைகோவிடத்தில் தேர்தல் நிதியளித்த ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினருக்கு பாராட்டு!

ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினரும், சிறு வயது முதலே தலைவர் வைகோ அவர்களை வழிகாட்டியாக நினைத்து போற்றுபவரும், ஓமன் மதிமுகவில் சுறுசுறுப்பை ஏற்ப்படுத்துகின்ற அன்பு சகோதரர் ஸ்ரீனிவாசன் அவர்கள் 26-02-2016 அன்று கலிங்கப்பட்டி அகோ இல்லமான வைகோ அவர்களின் இல்லத்தில், தென் மண்டல மதிமுக இணையதள அணி நண்பகளுக்கான கலந்துரையாடலில் கலந்துகொண்டு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் 10,000 (ரூபாய் பத்தாயிரம்) தேர்தல் நிதியாக தலைவர் வைகோ அவர்களிடத்தில் நேரடியாக கையளித்தார்.

சகோதரர் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. மேலும் பணி சிறக்கவும், வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில், இப்போதை போல மேலும் வேகமாக களப்பணியாற்றவும் வேண்டுகோள் வைக்கிறது.

ஓமன் இணையதள அணி

தேர்தல் நிதியளிப்பு கலந்துரையாடல் மற்றும் வாழ்நாள் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு!

ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் 2016 க்கான சட்டசபை தேர்தல் நிதியளிப்பு கலந்துரையாடல் மற்றும் வாழ்நாள் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு 26-02-2016 மாலை 3 மணி அளவில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில். நவீன் அப்பார்ட்மன்ட் ரூவியில் நடந்தது. 

ஓமன் மதிமுக இணையதள உறுப்பினர்கள் வருகை தந்தவர்களை நவநீத கிருஷ்ணன், விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்றனர். கலந்துரையாடல் தொடங்க மறுமலர்ச்சி மைக்கேல் தலைமை தாங்கினார். கோவிந்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். 

இந்த கலந்துரையாடலில் 1989 ல் கழக தலைவர் வைகோ அவர்கள் தமிழீழம் சென்று ஒரு மாதம் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தங்கி ராணுவ கட்டமைப்பு, தமிழீழ கட்டமைப்பு என அனைத்தையும் பார்த்து பக்கபலமாக இருந்துவிட்டு, விடுதலை புலிகளுக்கு நம்பிக்கை விதையை ஊட்டிவிட்டு தாயகமான தமிழகம் திரும்பும்போது, இந்திய அமைதிப்படை தாக்கியதில் கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை நோக்கி பாய்ந்த குண்டுகளை தன் மார்பில் தாங்கி மடிந்து தலைவர் வைகோ அவர்களை காப்பாற்றிய விடுதலை புலிகளின் மாவீரன் சரத் என்கிற பீட்டர் கென்னடி அவர்களின் தியாகம் பொருந்திய வீர மரணத்தின் நினைவு தினமான 26-02-2016 ல் நினைவு கூர்ந்து நாகேந்திர குமார் அவர்கள் சிறு நினைவு உரை நிகழ்த்தி 2 நிமிடம் அவரது நினைவாக மவுனம் கடைபிடிக்கப்பட்டது. 

மதிமுக வாழ்நாள் உறுப்பினர்களாக ஏற்கனவே விண்ணப்பித்த ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர்களான, வைகோ  பாலா (எ) பாலகிருஷ்ணன், கனகராஜ், நாகேந்திர குமார், விஜயராகவன் ஆகியோருக்கு மதிமுக வாழ்நாள் உறுப்பினர் அட்டைகளை கையளித்து கவுரவிக்கப்பட்டது. 

ஒமன் மதிமுக இணையதள அணியினர், தலைமை கழகத்திற்கு தங்களது பங்களிப்பை இணையத்தின் மூலமாகவும், வாய்ப்புள்ள போது நேரடியாகவும், தேர்தல் காலங்களில் எவ்வாறு பணியாற்றுவது என விவாதிக்கப்பட்டது. அனைவரும் தங்கள் கருத்துக்களை எடுத்து கூறினார்கள்.

பின்னர் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1:

1. 2016 சட்டமன்ற தேர்தலுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தேர்தல் நிதியை வருகிற மார்ச் மாதம் 30 ஆம் தேதிக்குள் திரட்ட முடிவெடுக்கப்பட்டது.

2. மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, மஸ்கட், ஓமனிலிருது நேரடி விமான சேவை வேண்டி வலியுறுத்தி திரட்டப்பட்ட கையெழுத்து ஆவணங்களை, தலைவர் வைகோ அவர்களிடம் கையளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டுகோள் விடுத்து, விடுமுறை முடிந்து ஓமன் திரும்பிய ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர்கள் விஸ்வநாதன், கணேசன் ஆகியோருக்கு நேரடியாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

3. 2016 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், ஓமன் மதிமுக இணையதள அணியினர், தங்களால் இயலும் பட்சத்தில் விடுமுறை கிடைத்தால், தங்கள் மாவட்டத்திலுள்ள சொந்த தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளான மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளின் சார்பில் எந்த கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும், அந்த வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்து வெற்றி பெற களப்பணியாற்றுவதன் மூலம், மக்கள் நலக் கூட்டணியை வெற்றியடைய செய்யவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

4. அனைத்து நண்பர்களும் இணையத்தில் மக்கள் நலக் கூட்டணியின் உண்மை தன்மையை எடுத்துரைப்பதுடன், குறைந்த பட்ச செயல் திட்டம் பற்றிய சிறு கருத்துக்களை எழுதி பகிரவும், மற்ற இணைய தோழர்களின் உண்மை கருத்துக்களை பகிர்ந்தும் இணைய பங்களிப்பை கூட்டி உலகளாவிய மக்களுக்கும் சென்றடைய செய்ய வேண்டிய கடமையையும் எடுத்து கூறி அனைவரும் கருத்துக்களை இணையம் மூல வேகமாக பரப்பவும் வலியுறுத்தப்பட்டது.

நன்றி உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது. இந்த நிகழ்வில், 
1. மறுமலர்ச்சி மைக்கேல்
2. நவநீத கிருஷ்ணன்
3. விஸ்வநாதன்
4. ராஜகுரு
5. கனகராஜ்
6. கோவிந்த ராஜ்
7. செல்வராஜ்
8. சக்திலிங்கம்
9. நாகேந்திரகுமார்
10. பிரேம் ஜாஸ்பர்
11. பால கிருஷ்ணன்
12. விஜயராகவன்
13.மதி வெங்கடேஷ்
14. சந்திரசேகரன்
15. முத்தையா

ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி