மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஹைதராபாத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதனை மக்கள் நலக்கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர்கள் மீது பொய் குற்றச்சாட்டு புனையப்பட்டு, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதை கடுமையாக எதிர்த்து, மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பழி வாங்கும் உள்நோக்கத்தோடு தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடுமையான அரசியல் சட்ட அத்துமீறலும், ஜனநாயகப் படுகொலையுமாகும்.
சுதந்திரமாக கருத்து சொல்லும் உரிமையைப் பறிக்க காலனிய சட்டங்களை பயன்படுத்தி, ஆளுகிற நரேந்திர மோடி அரசு எதிர்க்கட்சிகளை வேட்டையாடி வருகிறது. தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்ய வழிவகை செய்திடும் இந்திய குற்றவியல் சட்டத்தின் 124-ஏ பிரிவு மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிற பிரிவாக அமைந்துள்ளது. எனவே, இந்திய குற்றவியல் சட்டத்திலிருந்து அப்பிரிவினை உடனடியாக அகற்ற வேண்டுமென மக்கள் நலக்கூட்டணி கோருகிறது.
மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்துகிற எதிர்க்கட்சியினரை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துவதும், அவர்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத்தையும் பறிக்கின்ற நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டுமென மக்கள் நலக்கூட்டணி மத்திய அரசை கடுமையாக எச்சரிக்கிறது.
ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், 124-ஏ பிரிவினை வாபஸ் பெறவும் கோரி தமிழ்நாடு முழுவதும் கண்டன தெருமுனைக் கூட்டங்களை நடத்திட வேண்டுமென மக்கள் நலக்கூட்டணி கேட்டுக் கொள்கிறது என வைகோ, ஜி. ராமகிருஷ்ணன், இரா. முத்தரசன், தொல். திருமாவளவன் ஆகியோர் கூட்டறிக்கை தெரிவித்துள்ளனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment