கடந்த 2 ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் போராட்டங்களுக்குத் துணையாக இருந்து வருகிறது. மத்திய அரசு மக்களின் உணர்வுகளைத் துச்சமாகக் கருதிப் புறக்கணித்து வருகின்றது.
உலகில் வேறு எந்த அணு உலைக்கும் இல்லாத பல சிறப்புகள் கூடங்குளத்திற்கு உண்டு. எந்தவொரு அணு உலைக்கும் பழுதடைந்து நிற்றல் (tripping) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழும். ஆனால் கூடங்குளம் அணு உலையில் மட்டும் கடந்த இரண்டு வருடங்களில் 31 முறை இந்த நிற்றல் நிகழ்ந்து இருக்கின்றது.
இந்த நிலையில், அங்கே மேலும் இரண்டு அணு உலைகளைப் புதிதாக அமைக்க அடிக்கல் நாட்டப்போவதாக அறிவித்து இருக்கின்றது.
செலவைக் குறைக்கும் எண்ணத்தில் கூடங்குளத்தில் தரமற்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன். அணு உலையின் பாதுகாப்பையும் அவர் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தி வருகிறார்.
இது அணு உலை பாதுகாப்பு குறித்த கேள்வி மட்டும் அன்று, அந்தப் பகுதியில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் குறித்த கேள்வியும் ஆகும்.
மக்கள் முன் வைக்கும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இருக்கின்றது. உலக நாடுகளில் பரவலாகவே அணுசக்தியின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது. பல்வேறு நாடுகள் அணுசக்தித் திட்டங்களைக் கைவிட்டு வருகின்றன. ஆனால், அணுசக்திதான் வல்லரசுக்கான பாதை என்று மத்திய அரசு கருதுவது ஏற்புடையது அல்ல.
எனவே மத்திய அரசு கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் தொடங்கும் திட்டத்தைக் கைவிடுவதுடன், சரிவர இயங்காத 1 மற்றும் 2 ஆவது அணு உலைகளையும் மூட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment