Sunday, February 21, 2016

வாட்சப்-ல் வைகோ பற்றி பொய்யான அவதூறு செய்திக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

வாட்சப்-இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைப் பற்றி வெளியாகிய தவறான அவதூறு செய்தி குறித்து மாவட்டச் செயலாளர் என்.செல்வராகவன் காவல்துறை சைபர் பிரிவில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அளித்த புகாரின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்.

அனுப்புநர்
                என்.செல்வராகவன்
                மாவட்டச் செயலாளர்
                ம.தி.மு.க.

பெறுநர்
                உயர்திரு கண்காணிப்பாளர்
                மாவட்ட காவல்துறை, சைபர் பிரிவு
                திண்டுக்கல்.

மதிப்பிற்குரியீர் வணக்கம்.

                பொருள் : வாட்சப்-இல் பொய்யான அவதூறு செய்தி - உரிய நடவடிக்கை கோருதல்

17.02.2016 அன்று பழனி - உடுமலை ரோடு சண்முகநதி பாலம் அருகே கோவையில் இருந்து வந்த மினி லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வாலிபர்களும் உயிர் இழந்தனர். விபத்து நடந்த இடத்தில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழனி தாலுகா போலிஸார் அவ்விடத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தார்கள்.

சம்பவம் நடந்த நேரத்தில் பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னுடைய காரில் சென்றபோது விபத்தைப் பற்றி அறிந்தார். உடனே காரை நிறுத்தி விசாரித்துவிட்டு வேதனை அடைந்து கண்ணீர் விட்டார். இந்தச் செய்தி 18.02.2016 அன்று வெளியான தினத்தந்தி, தினமலர் போன்ற பத்திரிகைகளில் இடம்பெற்றது. அந்த பத்திரிகை செய்தியின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். வாட்சப்-இல் பரப்பப்பட்ட பொய்யான செய்தியையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

உண்மை நிகழ்வு இப்படி இருக்க வாட்சப்-இல் வைகோ வின் கார் விபத்து ஏற்படுத்தியதாக அவருடைய நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறான செய்தியை விசமத்தனமாக பரப்பி வருகின்றார்கள். பொய்ப் பிரச்சாரம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

தங்கள் உண்மையுள்ள
(என்.செல்வராகவன்)

இணைப்பு:
1. 18.02.2016 தினத்தந்தி, தினமலர் செய்தி

2. வாட்சப்-இல் வெளிவந்த பொய்யான செய்தி

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment