Sunday, February 21, 2016

மீனவர்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்திருத்தத்திற்கு வைகோ கண்டனம்!

தமிழக 14 ஆவது சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டத்தொடரின் நிறைவுநாளான பிப்ரவரி 20 ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும். 

அதேவேளையில், தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983 இல் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

இச்சட்டத்தின்படி,

மீனவர்கள் மாநிலக் கடற்கரையில் இருந்து 5 கடல் மைல் தொலைவிற்குள்  மீன்பிடிக்கக் கூடாது;

தடை செய்யப்பட்ட மீன்பிடி கருவிகளைக் கொண்டு செல்லக் கூடாது;

எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்றால் ஆயுட்காலத் தடை;

மீனவர்களின் படகுகளில் கடலோரக் காவல்படையினர் எந்த நேரமும் புகுந்து ஆய்வு செய்வார்கள் எனக் கடுமையான தண்டனைப் பிரிவுகளை உள்ளடக்கி இருக்கின்றது.

இதையெல்லாம் ஆய்வு செய்யாமல், ஜெயலலிதா அரசு, தனது பதவிக்காலத்தின் இறுதியில் சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும்.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, 2009 இல் அறிமுகம் செய்த கடல் மீன்பிடித் தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மைச் சட்ட முன்வரைவு, மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததால், கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

அச்சட்டத்தின்படி மீனவர்கள், ஐந்து கடல் மைல் தாண்டி, 12 கடல் மைல் தொலைவிற்குள்தான் மீன்பிடிக்க வேண்டும். 12 கடல் மைல் வரை மாநில எல்லைக்குள் வருகிறது. அதற்கு மேல் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். எனவே, மாநில அரசுக்கு உள்ள உரிமைகளையும் மத்திய அரசு மறைமுகமாகப் பறித்துக் கொண்டது. அத்துடன், மீனவர் பதிவுகள், உரிமம் வழங்குதல், மீன்பிடித் தொழிலைக் கவனிக்கும் பணி போன்றவற்றை  மாநில மீன்வளத்துறையில் இருந்து பறித்து, கடலோரக் காவல்படைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும் அந்தச் சட்டத்தின் மற்றொரு மோசமான பிரிவு ஆகும். 

அத்துடன், சிறிய மீனவர்கள் பத்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான மீன்களைப் பிடிக்கக் கூடாது; ஆனால், வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் சென்று எவ்வளவு மீன்களையும் பிடிக்கலாம் எனக் கூறப்பட்டது. மீன்களைப் பிடிக்கும்போது அதற்குச் சந்தையில் என்ன விலை கிடைக்கும் என்பதை எப்படிக் கணிக்க முடியும்?

இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு 6 இலட்சம் ரூபாய் முதல் 9 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்; விதிமீறலில் ஈடுபடும் மீனவர்களின் படகுகள், வலைகளைப் பறிமுதல் செய்வதுடன், அவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்படும்.

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி பாரம்பரியக் கடற்கரை பகுதியில் இருந்து மீனவர்கள் வெளியேற்றப்பட்டு, கடற்கரைகளில் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள், விடுதிகள் அமைத்தல், தொழில் நிறுவனங்களின் கட்டடங்கள் கட்ட அனுமதித்தல் போன்றவை நிறைவேற்றப்படும். உலக வங்கி வழிகாட்டுதலின்படி கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தின்படி, மீனவ மக்கள் கடற்கரை சார்ந்த மீன்பிடிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு, துறைமுகம் சார்ந்த மீன்படித்தலில் ஈடுபடும்படிக் கட்டாயப்படுத்தப்படுவர்.

எனவேதான், இந்தியா முழுவதும் உள்ள மீனவர்கள் மத்திய அரசின் கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணையை இரத்து செய்ய வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.

உள்நாட்டு மீனவர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையிலும், உலக மய, தாராள மய, தனியார் மயக் கொள்கையைத் திணித்து, நமது கடல்வளத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை அடிக்கவும் வழி செய்து இருக்கின்ற மத்திய அரசின் கடல் மீன் தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மைச் சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுக்காமல், ஜெயலலிதா அரசு அதை நடைமுறைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983 இல் திருத்தங்கள் கொண்டு வந்து இருப்பது, தமிழக மீனவர்களை உள்நாட்டு அகதிகள் ஆக்கிவிடும். 

மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் இச்சட்டத் திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment