Thursday, February 4, 2016

கடுகு உள்ளிட்ட பயிர்களுக்கு மரபணு மாற்று அனுமதி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வைகோ அறிக்கை!

இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தொடர்ந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மரபணு மாற்று, பி.டி. பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் ஆந்திராவிலும், மராட்டிய மாநிலத்திலும் போதுமான விளைச்சல் இல்லாமலும், பி.டி. பருத்தி பயிரிடப்பட்டிருந்த நிலத்தின் உயிர்த்தன்மை அழிந்ததாலும் வேதனையுற்று தற்கொலை செய்து கொண்டனர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது 2010 இல் பி.டி. கத்திரி பயிரிட கள ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து பெருமளவில் மக்கள் போராட்டங்கள் வெடித்ததால், மத்திய அரசு பின்வாங்கியது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், இந்தியாவில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதற்கு மாறாக, பா.ஜ.க. அரசு மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி வழங்கிட திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த உயிரி தொழில்நுட்ப நிபுணர் குழுவும், மரபணு மாற்றுப் பயிர்களைத் திறந்தவெளியில் பயிரிட்டு சோதனை நடத்தவும், வர்த்தக ரீதியில் பயன்படுத்தவும், எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை அளித்துள்ளது.


மோடி அரசு, ‘புரோட்டீன் புரட்சிஎன்ற பெயரில் மரபு சார்ந்த இந்திய விவசாயத்தை உயிரி தொழில்நுட்பத்தைக் கொண்டு மாற்றி அமைக்க முயற்சித்து வருகிறது. விவசாயத் துறையில் நான்கு விழுக்காடு வளர்ச்சிக்கும், உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் இந்திய வேளாண்மையை மரபணு மாற்றுப் பயிர்கள் சாகுபடி மூலம் மாற்ற வேண்டியது அவசியம் என்று மோடி அரசு நியாயப்படுத்துகிறது.

இதற்காகவே மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் அனுமதியைக் காட்டி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கத்திரிக்காய், கடுகு, கொண்டைக் கடலை உள்ளிட்ட 15 உணவுப் பயிர்களைக் கள ஆய்வு செய்வதற்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாபீன்சிலிருந்து தயாரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யவும் கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வரும் சான்சாண்டோ, பாயர், பி.ஏ.எஸ்.எஃப். போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், இந்திய விவசாயிகள் இந்நிறுவனங்களைச் சார்ந்துதான் விவசாயம் செய்ய வேண்டிய நிலையை உருவாக்கவும் மோடி அரசு தொடர் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இந்நிலையில்தான், மத்தியச் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு பிப்ரவரி 5-ஆம் தேதி, நடத்த இருக்கும் கூட்டத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு, திறந்தவெளியில் பயிரிட அனுமதி வழங்கப்படப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் மொத்த கடுகு உற்பத்தியில் 50 விழுக்காடு உற்பத்தித் திறன் கொண்ட ராஜஸ்தான் மாநிலம் மற்றும் அரியானா, மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசின் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

மரபணு மாற்றுப் பயிர்களைத் தொடர்ந்து உட்கொண்டால், சிக்கில் செல் அனீமியா என்ற நோய் ஏற்படும். இதனால் இரத்தச் சிவப்பு அணுக்கள் மாற்றம் அடைந்து, இரத்தக் குழாய்க்குள் நுழைய முடியாத நிலை உருவாகும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். சுற்றுப்புறச் சூழல் மருத்துவத்திற்கான அமெரிக்கக் கழகம், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் உயிரினங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், இனவிருத்தி செயல்பாடுகள், மனநலம் ஆகியவற்றில் கடும் விளைவுகள் ஏற்படும்எனக் குறிப்பிட்டு, இப்பயிர்களுக்குத் தடை விதிக்க பரிந்துரைத்துள்ளது.

இத்தகைய அபாயம் நிறைந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை இந்தியாவில் அனுமதிப்பது நமது பாரம்பரிய பல்லுயிர்த் தன்மைகளைக் கொண்ட விதைகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி விட்டு, அமெரிக்காவின் மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் விதைக்காக கையேந்தும் நிலையை உருவாக்கிவிடும். இந்திய வேளாண்மைத் தொழிலின் தற்சார்பை அழித்து, உணவு உற்பத்தியையும் வீழ்ச்சி அடையச் செய்துவிடும். எனவே, மத்திய அரசு மரபணு மாற்றப்பட்ட கடுகு உள்ளிட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment