முல்லைப் பெரியாறு புதிய அணை கட்டும் திட்டத்திற்கு கேரள மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, முதல்வர் உம்மன்சாண்டி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து இருக்கின்றார்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்புகளை வழங்கி உள்ளது.
2010 பிப்ரவரி 18 இல் முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு நடத்திட வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதன் படி உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. இக்குழு முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்துப் பல கட்டங்களாக ஆய்வு நடத்தியது; அணை பலமாக இருக்கிறது; நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம், சில பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட பிறகு நீர்மட்டத்தை மேலும் உயர்த்தலாம் என்று 2014 மார்ச் 25 ஆம் தேதி ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இதன்பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் நீதிபதிகள் முகுந்தகன் சர்மா, பி.சுதர்சன் ரெட்டி, ஆர்.எம்.லோதா, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, முல்லைப் பெரியாறு அணை பற்றிய வழக்குகளை விசாரித்து, மே 7, 2014 இல் இறுதித் தீர்ப்பு அளித்தது.
முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து நீதிபதி ஆனந்த் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்பதாகவும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயரம் வரை உயர்த்தலாம்; புதிய அணை கட்டுவதற்காகக் கேரளச் சட்டமன்றத்தில் கொண்டுவந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால் இரத்து செய்கிறோம்; அணையைப் பராமரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்கின்றோம் என்று அந்த அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.
ஆனால் நேற்று, முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துவிட்டுப், புதிய அணை கட்டுவதற்காக, நிதிநிலை அறிக்கையில் கேரள அரசு 100 கோடி ஒதுக்கி இருப்பது, உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது; கண்டனத்திற்குரியது.
எனவே உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேரள அரசை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment