கோவை - திருப்பூர் - ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி, கடந்த 8 ஆம் தேதி முதல், அத்திக்கடவு- அவிநாசி திட்டப் போராட்டக் குழுவைச் சேர்ந்த 14 சமூக ஆர்வலர்கள் அவிநாசியில் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு ஆதரவாக அப்பகுதிகளில் உள்ள மக்கள் உண்ணாவிரதம், கடை அடைப்பு போன்ற போராட்டங்களில் இறங்கி உள்ளனர்.
தொடர் உண்ணாவிரதம் இருக்கும் போராட்டக் குழுவினரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக வரும் செய்தி அறிந்து மிகவும் கவலைப்படுகிறேன்.
கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், கொங்கு மண்டல மக்களின் முக்கியக் கோரிக்கையான அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடவில்லை. முதல்வர் பதவியில் இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் அளித்த வாக்குறுதிகள் காற்றோடு கலந்துவிட்டன.
1991-2007 க்கு இடைப்பட்ட காலத்தில், பவானி ஆற்றில் இருந்து ஐந்து முறை உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 42,257 மில்லியன் கன அடி நீர் வீணாகி விட்டது.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றினால், மழை வெள்ள காலத்தில் பவானி ஆற்றில் வரும் உபரி நீரை மடை மாற்றி, 13 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள 71 குளங்கள், 538 குட்டைகளை நிரப்பலாம். இதனால் 50 இலட்சம் மக்களுக்குக் குடிநீரும், ஐந்து இலட்சம் கால்நடைகளும் பயன்பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும்.
மக்கள் நலனில் அக்கறையற்ற தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சிகள் கைவிட்ட அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று, மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உறுதி அளித்து இருக்கின்றோம்.
இத்திட்டத்திற்காகத் தங்களை வருத்திக் கொண்டு உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அந்தக் கோரிக்கையின் நியாயத்தை உணராத ஜெயலலிதா ஆட்சி வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களால் தூக்கி எறியப்படும் என்பதால், தங்கள் அறப்போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைய உள்ள மக்கள் நலக் கூட்டணி அரசு அத்திக் கடவு- அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்தி, கொங்கு மண்டலத்தின் 60 ஆண்டுக் காலக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறுகிறேன் என வைகோ தெரிவித்து|ள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment