இந்துத்துவா மத அடிப்படைவாதிகள், மத்தியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், விரும்பியதையெல்லாம் செயற்படுத்திடும் வகையில், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கல்வி பிரிவான ‘பாரதிய சிக்சன் மண்டல்’ வழிகாட்டுதலின்படி மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி செயற்பட்டு வருகிறார். 2014, மே மாதம் மோடி அரசு பதவிக்கு வந்தவுடனேயே, மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளில் (சி.பி.எஸ்.இ) சமஸ்கிருத மொழியைத் திணிப்பதற்கு உத்தரவு போட்டார்.
அப்போது 2014, ஜூலை 17 ஆம் தேதி, சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நாடு முழுதும் உள்ள அதன் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாயாக விளங்கும் சமஸ்கிருத மொழியைக் கற்பிக்கவும், கற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்கும் நோக்கில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. சமஸ்கிருத மொழி ஆய்வரங்கம், சமஸ்கிருத புலமை கொண்ட அறிஞர்களின் சொற்பொழிவு, சமஸ்கிருத மொழி திரைப்படங்கள் திரையிடுதல் போன்றவற்றை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
2014, செப்டம்பர் 5 ஆம் தேதி, இதுவரை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டுவரும் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை இனி ‘குரு உத்சவ்’ என்று நடத்த வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டது.
2014, டிசம்பர் 7 ஆம் தேதி சி.பி.எஸ்.இ மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழி கற்பிக்கப்படுவதை மாற்றி சமஸ்கிருதம் கற்பிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உத்தரவிட்டார்.
மீண்டும் 2015 இல் ஆகஸ்டு 26 முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை, சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கடைபிடிக்க வேண்டும். சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு உதவும் வகையில் கட்டுரைப் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சரின் மேற்கண்ட உத்தரவுகளுக்கு நாடு முழுதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தபோதும், சமஸ்கிருதத்தை வலிந்து திணிக்கும் அறிவிப்புகளை செயற்படுத்துவதில் பின்வாங்கவில்லை.
வரும் 2016 - 17 கல்வி ஆண்டில் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தை கற்பிக்க வேண்டும் என்று தற்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், நாட்டின் பன்முகத்தன்மையையும் அலட்சியப்படுத்திவிட்டு ‘இந்துத்துவா’ குறிக்கோளை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்கள் முறைப்படி திட்டமிட்டு செயலாற்றுகின்றன. மோடி அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர்கள் எங்களை வழி நடத்துவது ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் என்று நாடாளுமன்றத்திலேயே பெருமிதத்துடன் பலமுறை குறிப்பிட்டுள்ளனர். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசுவதையும், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளை சுட்டுக் கொன்ற, இந்து மகா சபை, நாதுராம் வினாயக கோட்சேவை ‘தேச பக்த திலகம்’ என்று புகழ்வதையும், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மௌன புன்னகையுடன் ஆமோதித்தாரேயொழிய ஒருபோதும் வாய்திறந்து இத்தகைய போக்குகளை கண்டிக்க முன்வரவில்லை என்பதை மக்கள் அறிவார்கள். பிரதமரின் அனுமதி இல்லாமல் பாஜக அமைச்சர்களின் எந்தவொரு அசைவும் நடக்காது என்பதை நாடு அறியும்.
தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பாஜக அரசின், சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்தபோதும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மீண்டும், மீண்டும் இந்துத்துவா அடையாளமான சமஸ்கிருத மொழியை திணிப்பதையே நோக்கமாக கொண்டு ஆணை பிறப்பித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. பல்வேறு மொழிகள், பன்முக பண்பாடுகள் கொண்ட இந்தியாவில், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமையும், வாய்ப்பும் அளித்தால்தான் ஒருமைப்பாடு நிலைக்கும் என்பதை மோடி அரசு உணர வேண்டும்.
எனவே, சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment