Thursday, August 27, 2015

ஈழத்தமிழ் இனக் கொலையாளியைத் தீர்ப்பாளியாக்க முயலும் அமெரிக்க அரசின் துரோகத்தைக் கண்டித்து, செப்டெம்பர் 1 இல் சென்னை அமெரிக்கத் தூதரகம் முற்றுகை! வைகோ அறிக்கை!

ஈழத்தமிழ் இனம் இன்றைய உலகால் சபிக்கப்பட்ட இனம் போலும்; சில நாடுகளின் தொடர் துரோகங்களால் ஈழத்தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுத் துன்ப நரகத்தில் தள்ளப்படும் கொடுமை புதியபுதிய பரிமாணங்களை அரங்கேற்றுகிறது.


ஈழத்தமிழர்கள் தங்களுக்கெனத் தனி அரசு அமைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ப் பழந்தமிழர் பண்பாட்டைப் பாதுகாத்து மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியரும், ஒல்லாந்தரும், பின்னர் ஆங்கிலேயரும் அடுத்தடுத்துப் படை எடுத்துத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி, இலங்கைத் தீவில் அதுவரை தனித்தனியாக இருந்த சிங்களர்களையும், தமிழர்களையும் ஒரே அதிகாரக் குடையின் கீழ் கொண்டு வந்து தமிழர்களின் தனி அரசைப் பாழாக்கினர்.

1948 பிப்ரவரி 4 இல் பிரித்தானிய அரசு தங்கள் ஆட்சியை விலக்கியபோது, சிங்களர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஈழத் தமிழர்களைச் சிக்க வைத்துச் சென்றது. சிங்களவர்களுக்கு இணையாக சம உரிமை பெற்று வாழ விரும்பிய ஈழத் தமிழர்களை, சிங்களப் பேரினவாத அரசு நாலாந்தரக் குடிமக்களாக ஆக்கியது. மொழி, கல்வி, அரசு வேலைவாய்ப்பு உரிமைகளைப் பறித்தது.

இதை எதிர்த்து, ஈழத்துக் காந்தியாம் தந்தை செல்வா தலைமையில் ஈழத்தமிழர்கள் மானத்தோடும், உரிமையோடும் வாழ அமைதி வழி நடத்திய அறப்போராட்டங்களை காவல்துறை, இராணுவ அடக்குமுறையைக் கொண்டு சிங்கள அரசு நசுக்கத் தலைப்பட்டது. தமிழர்கள் தாக்கப்பட்டனர்; படுகொலை செய்யப்பட்டனர்.

1957, 1965 களில் சிங்கள அரசு தந்தை செல்வா அவர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தங்களைக் கிழித்துக் குப்பையில் போட்டது.

உரிமைக்குப் போராடிய தமிழர்களைக் காவல்துறையும், இராணுவமும் வேட்டையாடிக் கொன்றது. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகினர். சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகளையும் கொதிக்கும் தாரில் வீசிக் கொன்ற கொடுமைதான் வல்வெல்ட்டித்துறையில் வேலுப்பிள்ளை பார்வதியம்மாளின் மகனான பிரபாகரனை அவரது 15 ஆவது வயதிலேயே ஆயுதப் போராட்டக் களத்தின் விடுதலை நாயகன் ஆக்கியது.

1981 இல் சிங்களர்களால் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது; 1983 இல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்; வெலிக்கடை சிறையில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்ட 53 தமிழர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்; தாய்த் தமிழகம் ஆவேசத்தோடு பொங்கி எழுந்தது.

இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டார். விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் படைப் பயிற்சியும் தரப்பட்டது. அதே காலகட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பொருள் உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்தார். இந்திரா காந்தி அவர்கள் கொலையுண்டு மறைந்தபின், பிரதமரான ராஜீவ் காந்தி ஆட்சியில் போபர்Þ பீரங்கி பேர ஊழலில் சிக்கியதால், மக்கள் கவனத்தைத் திசை திருப்ப விடுதலைப்புலிகளின் விருப்பத்துக்கு எதிராக இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவோடு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஈழத் தமிழர்களின் விடியலுக்கு உலை வைத்தார்.

அமைதிப்படை என்ற பெயரில் சென்ற இந்திய இராணுவம் அட்டூழியங்களில் ஈடுபட்டது. திலிபனின் தியாக மரணத்துக்குப் பின்னர் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிப்படை தளபதிகளின் சாவுக்கும் இந்திய அரசே காரணமாயிற்று.

இந்திய இராணுவம் பிரபாகரனை அழிக்க முயன்று தோற்றது. வி.பி.சிங் பிரதமரான பின் இந்திய இராணுவம் நாடு திரும்பியது. விடுதலைப் புலிகள் மக்கள் ஆதரவுடன் பல களங்களில் சிங்களப் படைகளைத் தோற்கடித்து, ஈழத்தின் வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 2000 ஆம் ஆண்டு இறுதியில் உலகமே வியக்கும் வகையில் தங்களைவிடப் பன்மடங்கு ஆயுத பலம் வாய்ந்த சிங்கள இராணுவத்தை யானை இரவு போர்க்களத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடித்து விரட்டியது மட்டும் அன்றி, டிசம்பர் 24 ஆம் தேதியன்று போர் நிறுத்தமும் அறிவித்தனர்.

வேறு வழியின்றி இரண்டு மாதம் கழித்து சிங்கள அரசும் போர் நிறுத்தம் அறிவித்தது.

2003 ஆம் ஆண்டில் சந்திரிகா அதிபராகவும், ரணில் விக்ரமசிங்கே பிரதமராகவும் இருந்தபோது தாய்லாந்திலும், ஜெனீவாவிலும் புலிகள்-சிங்கள அரசு இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இடைக்கால அரசு அமைக்கப் புலிகள் முன்வந்தபோது, அதிபர் சந்திரிகா பேச்சு வார்த்தையை முறிக்கச் செய்தார்.

2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தியாவில் ஆட்சிக்கு வந்தபின் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கவும், விடுதலைப் புலிகளை அழிக்கவும் திட்டமிட்டு சிங்கள அரசுக்கு முப்படை உதவிகளையும் செய்து, கொலைவெறி அதிபர் ராஜபக்சேவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கியது. ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத உதவியையும் சிங்கள அரசுக்குப் பெற்றுக் கொடுத்தது. உல நாடுகள் தடை செய்த ரசாயனக் குண்டுகளையும், விச வாயு குண்டுகளையும் இந்திய அரசின் நவீன ராணுவ தொழில்நுட்ப உதவியோடு பயன்படுத்தி விடுதலைப்புலிகளைத் தோற்கடித்தது.

இறுதிக் கட்டப் போரில், ஆயுதம் ஏந்தாத ஒன்றரை இலட்சம் தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் ஈவு இரக்கம் இன்றிக் கொல்லப்பட்டனர். இது ஒரு அப்பட்டமான இனப்படுகொலை ஆகும்.

இதனைக் கண்டித்துத் தமிழ்நாட்டில் வீரத் தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தீக்குளித்து உயிர்க் கொடை ஈந்தனர்.

ஜெர்மனி அரசின் முயற்சியால் 2009 மே மாதம் அவசரமாக ஜெனீவாவில் கூட்டப்பட்ட மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்திய அரசும், கியூப அரசும் சேர்ந்து ராஜபக்சே அரசுக்குப் பாராட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றிய அக்கிரமம் நடந்தது.
2010 இல் இருந்து தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களும், மாணவர்களும் நடத்திய போராட்டங்களும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்கள் நடத்திய தொடர் போராட்டங்களால் ஐ.நா. மன்றம் மார்சுகி தாருஸ்மென் தலைமையில் அமைத்த மூவர் விசாரணைக் குழு, இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனப்படுகொலை நடந்த உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் அரசோடு இணைந்துகொண்டு சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டது.

2014 இல் மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க அரசு கொண்டுவந்த தீர்மானம், நீதியை நிலைநாட்டும் தீர்மானம் அல்ல எனினும், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க அனைத்துலக நாடுகளின் விசாரணைக்குழு அமைக்கக் கோரியது.

இலங்கையின் வடக்கு- கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றது போர்க்குற்றங்கள் அல்ல, தமிழ் இனப்படுகொலை என்பதுதான் சரியான நிலைப்பாடு ஆகும். இருந்தபோதிலும் இதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட அனைத்துலக நாடுகளின் விசாரணைக் குழுவை இலங்கைக்குள் நுழைவதற்கே ராஜபக்சே அரசு அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்குள் நுழைவதற்கும் நரேந்திர மோடி அரசும் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், இலங்லை அதிபர் தேர்தலில் அமெரிக்க அரசின் ஏற்பாட்டின் பேரில், இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனாவும், ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்கேவும் கூட்டணி அமைத்துக் கொண்டனர். மைத்திரிபால சிறிசேனா அதிபராக வெற்றி பெற்றார். இந்த மனிதர்தான் தமிழ் இனப்படுகொலை நடந்தபோது சிங்கள ராணுவ அமைச்சராக இருந்தார். அண்மையில் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கே பிரதமர் ஆகி இருக்கின்றார்.

அமெரிக்க அரசின் யோசனைப்படிதான் ஐக்கிய தேசியக் கட்சியும், இலங்கை சுதந்திரக் கட்சியும் இணைந்து இலங்கை தேசிய அரசு அமைத்துள்ளது. 1948 க்குப் பின் முதன்முதலாக இப்போதுதான் இப்படி ஒரு அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழர்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகடைக்காய் ஆக்கப்பட்டுவிட்டது.

இனி, தமிழர் தாயகத்தில் இருந்து சிங்கள இராணுவம் வெளியேறாது; வடக்கு, கிழக்கு இணைப்பு நடக்காது; இனப்படுகொலை விசாரணையை உலக நாடுகள் நடத்தாது.

அமெரிக்க அரசின் மன்னிக்க முடியாத துரோகம் யாதெனில், நடந்து முடிந்த தமிழ் இனப் படுகொலையை முழுமையாக மறைத்து, போர்க்குற்ற விசாரணையை கொலைகார சிங்கள அரசிடமே ஒப்படைக்க முடிவு செய்ததுதான். இதை, தற்போது இலங்கைக்கு வந்துள்ள தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறைத் துணைச் செயலாளர் லிசா பிஸ்வாஸ் எனும் பெண்மணி திமிரோடு தெரிவித்து உள்ளார்.

சிங்களக் கொலைகார அரசின் ஆலோசனையின்படிதான் ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானத்தைத் தாக்கல் செய்வோம் என்றும் கூறி விட்டார்.

ஈழத் தமிழ் இனக்கொலையாளியான சிங்கள அரசாங்கத்தையே இதுபற்றி விசாரணை நடத்தும் தீர்ப்பாளியாகவும் ஆக்குவதற்கு முற்பட்டுள்ள அமெரிக்க அரசின் செயல் மன்னிக்க முடியாத துரோகச் செயல் ஆகும். ஈழத் தமிழ் இனத்தைக் கரு அறுக்க முற்பட்டுள்ள சிங்கள அரசோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் பகிரங்கமாகவே கைகோர்த்து விட்டது. இனி உலக நாடுகளிலும் நீதியை எதிர்பார்க்க வேண்டாம். இந்திய அரசும் இதே துரோகத்தைத்தான் செய்யப்போகிறது.

எனவே, ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான தாய்த் தமிழகத்துத் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், அமெரிக்க - இலங்கை சதித் திட்டத்தை முறியடிக்கவும், ஈழத் தமிழ் இனத்தைப் பாதுகாக்கவும் வீறுகொண்டு எழவேண்டிய நேரம் வந்துவிட்டது. அர்ப்பணிக்கும் வேளை வந்துவிட்டது. உத்தமத் தியாகி முத்துக்குமாரின் மேனியைப் பற்றி எரித்த நெருப்புத் தழலை நெஞ்சில் ஏந்திக் களம் காண்போம்.

அமெரிக்க அரசின் தமிழ் இனத் துரோகத்தைக் கண்டித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று செவ்வாய் கிழமை காலை 10 மணி அளவில்,சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதராலயத்துக்கு எதிரே என்னுடைய தலைமையில் கண்டன அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழகக் கண்மணிகளும், ஈழத் தமிழ் உணர்வாளர்களும் ஆர்ப்பரித்து அறப்போரில் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment