விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம் - சேச சமுத்திரம் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதோடு, மிகுந்த கவலையைத் தருகிறது. அந்தக் கிராமத்தில் மிக பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூக மக்களும், பட்டியல் வகுப்பினரான தலித் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் அவர்கள் வழிபடும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவில் வழிபாட்டுக்கு கோயில் தேர் ஒன்றினை அவர்கள் அமைத்துள்ளனர்.
இரண்டு சமூக மக்களுக்கும் பொதுவான சாலை வழியாக கோவில் தேரைக் கொண்டு செல்வதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு ஏற்படுத்த நல்ல நோக்கத்துடன் இருதரப்பினரையும் அழைத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தியதில், இருதரப்பினரின் சம்மதத்துடன் கோவில் தேரை கொண்டுசெல்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது. 15 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற இருந்தது. அந்தத் தேரை பொதுப் பாதையில் கொண்டு வருவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கோவிலுக்கு முன்பு தேரோட்டத்திற்காக நிறுத்தப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தேர் முற்றிலும் எரிந்து சேதமானது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காலனி பகுதியில் உள்ள வீடுகளும் தீயிட்டு எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அமைதியை நிலைநாட்ட முயன்ற காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட சிலரும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளனர் என்றும் செய்தி வெளிவந்துள்ளது.
தற்போது அந்தப் பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவுகிறது. கோவில் தேரை எரித்ததும், தலித் வீடுகளைக் கொளுத்தியதும் கண்டனத்துக்குரியதாகும்.
இந்த வன்முறையில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் ஈடுபடாத அப்பாவி பொதுமக்களுக்கு காவல்துறையினர் எந்த இடையூறும் செய்துவிடக் கூடாது.
உழைப்பே உயர்வு தரும் என்ற கோட்பாட்டை தமிழ்நாட்டில் நிலைநாட்டி வந்துள்ள மிகப் பிற்படுத்தப்பட்ட வன்னிய சமுதாய மக்களும், தலித் மக்களும் பகை ஏதுமின்றி நல்லிணக்கத்துடன் வாழும் சூழலை உருவாக்க வேண்டியது அனைத்துத் தரப்பினரின் கடமையாகும்.
அனைத்து சமூக மக்களும் குறிப்பாக தாய்மார்களும் மதுக் கொடுமையை ஒழிக்கும் நோக்கத்துக்காக அறவழியில் போராடும் நல்ல சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், சேச சமுத்திரத்தில் ஏற்பட்ட மோதல் மிகுந்த வேதனையைத் தருகிறது.
ஒற்றுமையாக வாழவேண்டிய சமுகத்தினரிடையே பகையும் வேற்றுமையும் வளர்ந்தால் துன்பமும் துயரமும்தான் வளரும். சின்னஞ்சிறு பிள்ளைகள், மாணவர்களின் பிஞ்சு நெஞ்சில் வேற்றுமை உணர்வுகள் புகுந்து அவர்களின் எதிர்காலமும் நல்வாழ்வும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலனும் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் கசப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் நல்லிணக்கமாக வாழ்ந்திட இருதரப்பினரும் முன்வர வேண்டும் என இருகரம் கூப்பி அன்புடன் வேண்டுகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment