இதைப் படித்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ஜெயலலிதா உயிருக்கு விலை வைப்பது போலத் தோன்றுகிறது அல்லவா? ஆனால் உண்மை அதுவல்ல. ஜெயலலிதாதான் தமிழர்களின் உயிருக்கு அடிக்கடி விலைப்பட்டியல் வெளியிடுகிறார்.
ஆம். ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றபோது தமிழ்நாட்டில் இறந்த ஒவ்வொருவரின் உயிருக்கும் ஜெயலலிதா நிர்ணயித்த விலை மூன்று லட்சம். (அதில் பாதியை அதிமுக-வினர் ஆட்டையை போட்டது தனிக்கதை). இறப்பின் காரணம் எதுவாக இருந்தாலும் அதிமுக கணக்குப்படி அது ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனதால் செய்துகொண்ட தற்கொலைதான்.
அடுத்து சில மாதங்களுக்கு முன்பு டோர்னியர் விமானம் காணாமல் போனது. அப்போது ஆழ்ந்த கோமாவில் இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் திடீரென நினைவு திரும்பியது. விமானம் காணாமல் போனதை அறிந்து பதை பதைத்த ஜெயலலிதா உயிரிழந்த விமானிகள் ஒவ்வொருவர் உயிருக்கும் நிர்ணயித்த விலை பத்து லட்சம்.
அப்துல் கலாம் அவர்கள் உயிருக்கும் ஜெயலலிதா ஒரு விலை வைத்தார். அது உங்களுக்குத் தெரியுமா? அப்துல் கலாம் பெயரில் ஏற்படுத்திய விருதுதான் அது.
அதுபோலவே கடந்த ஏப்ரலில் ஆந்திர அரசால் இருபது தமிழர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டபோதும் போயஸ் தோட்டத்தில் விஸ்வாமித்திரன் போல் விடுதலை வேண்டி கடும் தவம் இருந்தார் ஜெயலலிதா. சேசாசலம் வனத்தில் வெடித்த துப்பாக்கிச் சத்தம் மட்டுமல்ல, இருபது குடும்பங்களில் ஒலித்த மரண ஓலங்களும், அதன் தொடர்ச்சியாய் நடந்த போராட்டக் குரல்களும்கூட அவருடைய கடும் தவத்தைக் கலைக்க இயலவில்லை.
ஆனால் படுகொலைகள் நடந்த பல மாதங்களுக்குப் பிறகு போதிமரத்தடியில் ஞான உதயம் பெற்ற ஜெயலலிதா அந்த இருபது பேரின் உயிர்களுக்கு நிர்ணயம் செய்த விலை தலா மூன்று லட்சம். கூடவே தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல அவர்கள் குடும்பப் பெண்களுக்கு சமையல் ஆயா வேலையும்.
இதுதொடர்பாக வைகோ அவர்கள் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டபோது சந்திக்காத ஜெயலலிதாவுக்கு, மோடியை வைகோ சந்தித்தபின் இந்த ஞானம் உதயமானதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
இருபது பேரும் சுட்டுக்கொல்லப்பட்டபோது ஒரு அனுதாபம் கூட தெரிவிக்காத ஜெயலலிதாவுக்கு, திடீரென பாசம் பொங்கியதால் அவர்களைத் தனது கொடூரமான அன்பால் மிரட்டி அந்தத் தொகையை வழங்கி இருக்கிறார்.
இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வந்த அந்தக் குடும்பத்துப் பெண்களைக் கண்டபோது என் மனம் நொறுங்கிப்போனது. சில பெண்கள் கண்களில் தொடர்ந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. தந்தையை இழந்த பிஞ்சுக் குழந்தைகளும், கணவனோடு சேர்த்து வாழ்வையும் தொலைத்த பெண்களையும் பார்த்தபோது அடி வயிற்றில் தீ வைத்ததுபோல் இருந்தது. உண்ணாவிரதம் முடித்து வீடு திரும்பிய பின்னரும்கூட உணவருந்த மனம் வரவில்லை.
நான் ஜெயலலிதாவை ஒன்றே ஒன்றுமட்டும் கேட்க விரும்புகிறேன். நீங்களும் ஒரு பெண்தானே...? பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்களே... ஆனால் இந்தப் பெண்களைக் கண்டபின்பும் உங்களுக்கு இரக்கம் வரவில்லையெனில் உங்கள் மனம் பேயை விடக் கொடியதா?
அந்த அப்பாவிப் பெண்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூடவா உங்களுக்கு எழவில்லை?
யார் இறந்தாலும் அவர்கள் உயிருக்கு விலை வைக்கிறீர்களே, ஒருவேளை நீங்கள் ஏதேனும் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியாக நேர்ந்தால் அதனை விசாரித்து கொலைகாரர்களுக்குத் தண்டனை வாங்கித் தராமல், மூன்று லட்ச ரூபாயை சசிகலா குடும்பத்துக்கோ அல்லது அதிமுக கட்சி நிதிக்கோ நிவாரணமாக வழங்கி விடலாமா?
இதைப் படிக்கும் சில ரத்தத்தின் ரத்தங்கள் பொங்கி எழக்கூடும். அதனால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் 'அம்மா' என்று அழைக்கும் அந்தப் பெண்மணியிடம் சொல்லுங்கள்... அம்மா என்றால் கருணை, அகம்பாவம் அல்ல என்று.
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. பணத்தால் எதையும் வாங்கிவிடலாம் என்ற உங்கள் ஆணவத்தை விடுத்து அந்தக் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கச் செய்யுங்கள். இல்லையேல் அந்த இருபது குடும்பத்தினரின் சாபம் உங்களை சும்மா விடாது.
செய்தி சேகரிப்பு: நல்லு லிங்கம் முகநூல்
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment