Sunday, August 30, 2015

இந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா? வராஹா கப்பலை இலங்கைக்கு வழங்கிய இந்தியாவின் துரோகம் வைகோ கண்டனம்!

இந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று இலங்கையின் தலைநகரமாம் கொழும்பு நகர் துறைமுகத்தில் ‘வராஹா’ கப்பலை இலங்கைக்கு தாரை வார்த்த இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இந்தியா செய்த மன்னிக்கவே முடியாத பச்சைத் துரோகம் ஆகும்.


ஈழத்தமிழர்களைக் காத்து சுதந்திரத் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க மகத்தான தியாகத்தாலும், தீரத்தாலும் களமாடிய தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை அழிக்கவும், ஈழத் தமிழர்களை சிங்களவனுக்குக் கொத்தடிமைகள் ஆக்கவும் திட்டமிட்ட இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முப்படை ஆயுதங்களையும், ரடார்களையும் வழங்கியதோடு இந்தியா இலங்கை கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை 2006 ஆம் ஆண்டு செய்ததை, அன்று முதல் நான் குற்றம் சாட்டி வந்துள்ளேன். விடுதலைப் புலிகளுக்கு வந்த 14 கப்பல்களை இலங்கைக் கடற்படை கடலில் மூழ்கடிக்க இந்தியக் கப்பல் படை உதவியது என்பதையும் சொல்லி வந்தேன். எனது குற்றச்சாட்டு உண்மை என்பதை ‘வராஹா’ கப்பலை இந்திய அரசு இலங்கைக்குத் தாரை வார்த்ததன் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி என நிரூபணம் ஆகிவிட்டது.

1992 ஆம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ‘வராஹா’ கப்பல், தொடக்கத்தில் கடலோரக் காவல் படை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 2006 ஆம் ஆண்டில் தமிழ் இனக் கொலைகாரன் ராஜபக்சே வேண்டுகோளின் பேரில் சிங்களக் கடற்படையின் சேவைக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. இந்தக் கப்பலுக்கு இலங்கை சிங்களக் கடற்படை ‘சாகரா’ என பெயர் சூட்டியது. பொருத்தமான பெயர். தமிழர்களைச் சாகடிக்கத்தானே பயன்பட்டது. விடுதலைப் புலிகளின் கடற்படையாம் சூசை தலைமை தாங்கிய கடல் புலிகளை சிங்களக் கடற்படை அழிப்பதற்கு இந்தியக் கப்பல் படை முழுமையாகக் பயன்படுத்தப்பட்டதற்கு இந்த ‘சாகரா’ சரியான சாட்சியம் ஆகும்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இந்திய அரசுதான் முழுக்க உதவியது என்று ராஜபக்சே பகிரங்கமாகச் சொன்னதைத் தமிழர்கள் ஒருநாளும் மறந்துவிடக் கூடாது. காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கவும், ஈழத் தமிழ் இனப்படுகொலையை சிங்கள அரசு நடத்துவதற்கும் முழுக்க முழுக்க காரணம் ஆகும் என்பதையும் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்த அதே துரோகத்தை, பாரதிய ஜனதா கட்சி தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இன்றைக்குச் செய்கிறது..

இந்திய அரசு தற்போது செய்துள்ள பச்சைத் துரோகத்தைத் தமிழ் இனம் ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. தமிழ்க் குலத்துக்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்து வினை விதைக்கிறது. இந்த வினைக்குரிய அறுவடையை வருங்காலம் நிச்சயமாக நிரூபிக்கும் என எச்சரிக்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment