விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சகோதரர் திருமாவளவன் அவர்கள் தஞ்சை மாவட்ட சுற்றுப்பயணத்தில், பட்டுக்கோட்டை பகுதி வடசேரியில் கொடியேற்று விழாக்களில் கலந்துகொள்ள சென்றபோது, அவர் செல்லும் சாலையில் அவரைத் தாக்குவதற்கு சில வன்முறையாளர்கள் தயாராக இருப்பதாக அறிந்த காவல்துறையினர் திருமாவளவன் அவர்களை வேறு பாதை வழியாக பயணிக்கச் சொல்லிவிட்டு, வன்முறையாளர்களை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் பெட்ரோல் அடைக்கப்பட்ட பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.
காவல்துறையினரிடம் விசாரித்தபோது, இதில் எந்த அரசியல் கட்சியினரும் சம்பந்தப் படவில்லை என்றும், அந்தப் பகுதியில் ஏற்கனவே இப்படிப்பட்ட வன்முறையில் ஈடுபடுகிற நபர்களால்தான் இந்தத் தாக்குதல் ஏற்பாடு செய்யப் பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த வன்முறையில் ஈடுபட இருந்தவர்கள், திட்டத்தை வகுத்தவர்கள் யாராக இருப்பினும் அவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து, சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்தச் செயலில் ஈடுபட முயன்ற வன்முறையாளர்களுக்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு காவல்துறை தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் ஆத்திர உணர்ச்சிக்கு இடம் தராமல் அமைதி காக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment