Saturday, August 29, 2015

காவிரி பாசன பகுதிகளில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற முறை வைக்காமல் தொடர்ச்சியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் வைகோ வலியுறுத்தல்!


காவிரி பாசனப் பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடுவதற்குப் பதிலாக, நீர் இருப்புக் குறைவைக் காரணம் கூறி, இந்த ஆண்டு ஆகஸ்டு 9 ஆம் தேதிதான் தண்ணீர் திறந்துவிடப் பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து 23 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டால்தான், காவிரியில் 10,650 கன அடி நீரும், வெண்ணாற்றில் 9,370 கன அடி நீரும் விவசாயிகளின் பயிர் சாகுபடிக்குப் போய்ச் சேரும். மீதி 4 ஆயிரம் கன அடி நீர் குடிநீருக்காகச் சென்றுவிடும். ஆனால், தற்போது 12 இலட்சம் ஏக்கர் பயிர் சாகுபடிக்கு வெறும் 13 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்படுகிறது.

அதுவும் முறை வைத்துத் திறக்கப்படுவதால், கடை மடை விவசாயிகளுக்கு முழுமையான பயன் அளிக்கவில்லை. இதனால் விவசாயிகள் மழையை நம்பி நேரடி விதைப்பு முறையில் விதைகளைத் தெளித்தனர். அவை முளைத்து வரும் பருவத்தில் தண்ணீர் இல்லாமல் கருகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

எனவே தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர், காவிரியில் சாதாரண அளவான (Normal supply level-NSL) 10,650 கன அடி நீரையும், அதைப் போன்று வெண்ணாற்றில் 9,370 கன அடி நீரையும் முறை வைக்காமல் தொடர்ச்சியாக திறக்கப்பட்டால்தான் பயிர் சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, காவிரி கடை மடை பகுதிகளில் நேரடி விதைப்பின் மூலம் முளைவிட்டுள்ள பயிர்களைக் கருகாமல் காப்பாற்றுவதற்கு மேட்டூர் அணையிலிருந்து முறை வைக்காமல் தொடர்ச்சியாக 23 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக இணையதள அணி – ஓமன்

No comments:

Post a Comment