தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகவும் முக்கியமான, மக்களுக்குத் தேவையான மின்சாரம் வழங்கும் மிகப் பெரிய நிறுவனமான மின்சார வாரியத்தில் பொறியாளர்கள், களப் பணியாளர்கள், அலுவலர்கள், பகுதி நேரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
2015 ஏப்ரல் மாதம் வாரியத்தால் வரையறை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட (Sanctioned Post) அதிகாரிகள், அலுவலர்கள் (Provincial Caders) மொத்தம் 39,293; களத் தொழிலாளர்கள் (Regular Work Employee) மொத்தம் 90,508; ஆக மொத்தம் வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 1,29,801. (ஒப்பந்தப் பணியாளர்கள் சேர்க்கப்படவில்லை).
ஆனால், தற்போது மின்வாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 68,000 மட்டுமே. இது ஒவ்வொரு மாதமும் குறைந்து கொண்டே போகிறது. மின் உற்பத்தி சீர் செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் 2015 முதல் மின்சாரம் வழங்குவதாக அரசு கூறினாலும், மின்தடை, பழுது ஏற்பட்டால் அதைச் சீர் செய்யப் போதிய பணியாளர்கள் இல்லை என்பதே தற்போதைய நிலை.
மக்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதோடு, அதிகமான பணிச்சுமை காரணமாக, பல இடங்களில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றார்கள். பலர் உயிர் இழந்திருக்கின்றார்கள். மின்துறை அமைச்சர், “மின்வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களே இல்லை” என்கிறார்.
அப்படியானால் தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை, எண்ணுhர் அனல் மின் நிலையங்களில் நிலக்கரியைக் கையாள்வதும், கொதி சாம்பலைக் கையாள்வதும் யார்? மிகக் குறைந்த தினக்கூலியில் பாடுபடும் தொழிலாளிகள் யார்? மின் விநியோகப் பிரிவில் புதிதாக வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கு கம்பம் நடுவது யார்? புதிய மின் பாதை அமைத்து (Light Line) மின்னோட்டம் செய்வது யார்? ஒப்பந்தத் தொழிலாளர்கள்தானே?
மின் வாரியம் வரையறை செய்து அனுமதிக்கப்பட்ட களத் தொழிலாளர்கள் (RWE) சுமார் 91,000. ஆனால், இருப்பதுவோ பாதியளவுக்கும் குறைவுதான். மின் விநியோகப் பணியில் ஒருவர் இரண்டு மற்றும் மூன்று ஷிப்டுகள் வேலை செய்கிறார்கள்.
தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் மட்டும் 4 மின் விநியோக வட்டங்கள் உள்ளன. இதில் தாழ்வழுத்த மின் நுகர்வோர் சுமார் 35 இலட்சம். இதில் உயர்வழுத்த மின் நுகர்வோர் அடங்காது. குறிப்பாக சென்னை அண்ணா நகரை உள்ளடக்கிய சென்னை மேற்கு மின் விநியோக வட்டத்தில் சுமார் 6 இலட்சத்து 60 ஆயிரம் தாழ்வழுத்த (Low Tension) மின் நுகர்வோர் உள்ளனர்.
சென்னை மின் விநியோக வட்டத்தில் வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட (Sanctioned Post) களப்பணியாளர்கள் (Regular Work Employee) எண்ணிக்கை 2,196. அதில் காலிப் பணியிடங்கள் கிட்டத்தட்ட 1000 என்று வாரியத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
சென்னையில் பல அதிகாரிகள், அமைச்சர்கள் வசிக்கும் சென்னை மேற்கு மின் விநியோக வட்டத்தில் மட்டும் அல்லாது, சென்னை, மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, திருச்சி என 5 மண்டலங்களோடு பொது கட்டுமான வட்டம், தலைமை அலுவலகம், அனல்மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள் மற்றும் ஏனைய மின் உற்பத்தி பிரிவுகள் என மொத்தம் 115 தலைமை அலுவலகங்களிலும் உள்ள காலிப் பணியிடங்கள் வரலாறு காணாத அளவுக்கு மாதந்தோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
Managing Director / Tantransco Post 1.6.15 முதல் காலியாக உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடு என்ன? 2020 இல் உத்தேச மின் தேவை 20,260 மெகாவாட் என்று கணிக்கப்படுகிறபோது, அனுபவம் மிக்க பொறியாளர்கள், தொழிலாளர்கள் வாரியப் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது அவ்விடங்களை உடனடியாக நிரப்பினால் மட்டுமே இதை எட்ட முடியும்.
எனவே, மின் வாரியத்தில் உள்ள மேற்கண்ட நிலைமைகளை அரசு கவனத்தில் கொண்டு, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். தற்போது பணியாற்றி வருகிற சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக அமர்த்திட வேண்டும்.
வாரியத்தில் பணியாற்றும் அனைத்துப் பிரிவு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 2014-2015 ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகையாக 30% சதவீதத் தொகையினையும், பல ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 30% உடனடியாக வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment