மறுமலர்ச்சி தி.மு.க. உயர்நிலைக்குழுக் கூட்ட தீர்மானங்கள்!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் (இன்று) 08.07.2015 காலை 10 மணி அளவில் தலைமைக் கழகம் தாயகத்தில் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம்:1
திராவிட இயக்கத்தின் தொடக்கமாக 1916 நவம்பர் 20 இல் தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் உதயமானது. அவ்வியக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஜÞடிÞ (நீதி) இதழின் பெயராலே நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது. இதற்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் 1912 இல் சென்னையில் திராவிடர் சங்கம் தொடங்கப்பட்டது. திராவிட இயக்கத்தின் சமூக அரசியல் ரீதியான தொடக்கம் 1916 ஆம் ஆண்டு என கணிக்கப்படுகிறது.
எனவே, திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா 2015 நவம்பரிலேயே தொடங்குவதையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாளில் அறிவாசான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும் முதன் முதலாகச் சந்தித்த திருப்பூர் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா - திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டினை எழிலான கொட்டகை அமைத்து முழு நாள் மாநாடாக பெரும் சிறப்புடன் நடத்துவது என்றும், இந்த மாநாட்டில் திராவிட இயக்க நூற்றாண்டு புகைப்படக் கண்காட்சியை திறப்பது என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 2
வளரும் தலைமுறையினரான மாணவர்களையும், இளைஞர்களையும் திராவிட இயக்க இலட்சியங்களில் அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாட்டை ஏற்படுத்த கருத்துப் பட்டறைகள் நடத்துவது என்றும், முதல் கருத்துப் பட்டறை ஆகஸ்டு 8, 9 தேதிகளில் ஈரோட்டில் நடத்துவது என்றும், இரண்டாவது பட்டறை 23, 24 தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்துவது என்றும் மூன்றாம் பட்டறை செப்டம்பர் 5, 6 தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: 3
மார்க்கிசிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்களை ஜூலை 4 ஆம் தேதி அன்று தாயகத்தில் சந்தித்து, இன்றைய மத்திய-மாநில அரசுகளை எதிர்த்து மக்கள் நலனைக் காக்க கூட்டு இயக்கப் போராட்டங்களை முன்னெடுக்க கழகம் பங்கேற்க வேண்டி முன்வைத்த கோரிக்கையை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொண்டு அத்தகைய போராட்டங்களிலும், அதற்காக நடைபெறும் பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது என உயர்நிலைக்குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம்: 4
இந்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று ஒரு குற்றமும் செய்யாத 20 தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் கொடூரமாக சித்திரவதை செய்து சுட்டுப் படுகொலை செய்த கோரச் சம்பவத்தில் உண்மைகளை வெளிக்கொணர தேசிய மனித உரிமை ஆணையம் நடந்த சம்பவங்கள் கொலை வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டு, மத்தியப் புனலாய்வுத்துறை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இப்படுகொலைகளுக்குக் காரணமான ஆந்திர மாநில அரசு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தடை பெற்றுள்ளது. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையையும் அநீதியையும் எதிர்த்து நீதியை நிலைநாட்டும் கடமையைச் செய்ய வேண்டிய தமிழ்நாட்டின் அண்ணா தி.மு.க. அரசு, குற்றவாளியான ஆந்திர அரசுக்கு அனைத்து வழிகளிலும் உதவிக்கொண்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட தமிழர்களின் சார்பில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 5
நாட்டையே உலுக்குகின்ற மத்தியப் பிரதேச வியாபம் ஊழலின் பின்னணியில் 48 பேர் இதுவரை மர்மமான முறையில் மடிந்துள்ளனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று செய்திகள் வருகின்றன. மருத்துவக் கல்லூரியில்மாணவர் சேர்க்கை, அரசு பணியிடங்களுக்குகான தேர்வு இவற்றில் 2000 ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகளும், ஊழலும் நடைபெற்று உள்ளது. நேற்று முன்தினம் ஜூலை 6 ஆம் தேதி வரை சி.பி.ஐ. விசாரணைக்கு மறுப்புத் தெரிவித்த மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானின் கருத்தையே வழிமொழிந்து இந்தியாவின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று கூறியதால் வெளிப்படைத் தன்மையையும், நேர்மையையும் பற்றி கூரைமேல் நின்று உரக்கக் குரல் கொடுத்த பாரதிய ஜனதா கட்சியின் பொய்முகம் அம்பலமாகிவிட்டது என்பதை நாட்டு மக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சுட்டிக் காட்டுகிறது.
தீர்மானம்: 6
பண்டித ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் பிரச்சினையில் இந்திய அரசு பின்பற்றி வந்த வெளியுறவுக் கொள்கையை நரேந்திர மோடி அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டு, பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் அரசு நடத்திய படுகொலைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்து வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல், செயல்பட்டதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம்: 7
தமிழகத்தில் காலம் காலமாக போற்றப்பட்ட நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடியோடு நிர்மூலம் செய்யும் விதத்தில் மது அரக்கனின் கொடுமை தாண்டவம் ஆடுகிறது. கல்லூரி மாணவர்கள், ஏன் பள்ளி மாணவர்களும் மதுப்பழக்கத்துக்கு ஆளாகி, விதை நெல்லே நாசமாகும் அபாயம் ஏற்பட்டுவிட்டது. சின்னஞ்சிறு பாலகனை மது அருந்த வைத்த மூவர் மீது காவல்துறை வழக்குத் தொடுத்திருக்கிறதே! இலட்சக்கணக்கான குடும்பங்களைப் பாழ்படுத்தும் குற்றத்துக் காரணமான அண்ணா தி.மு.க. அரசின் மீது யார் வழக்குத் தொடுப்பது? முழுமையான மதுவிலக்கை இலக்காகக் கொண்டு 2004 இல் 1200 கிலோ மீட்டர் நடைப்பயணம், 2014 இல் 1500 கிலோ மீட்டர் நடைப்பயணம் என நாட்டின் கோடிக்கணக்கான மக்களிடம் விழிப்புணர்வை கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தiமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்படுத்தியது.
வளரும் தலைமுறையினரான கல்லூரி, பள்ளி மாணவர்களிடம் மதுவிலக்கை வலியுறுத்தும் வகையில் கோவை, சென்னை, திருச்சியில் மதுவிலக்கு மராத்தான் ஓட்டப்பந்தயங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தியது.
இதில் கோவையில் 20 ஆயிரம் மாணவ-மாணவியர்களும், சென்னையில் 59 ஆயிரம் மாணவ -மாணவியர்களும், திருச்சியில் 42 ஆயிரம் மாணவ -மாணவியர்களும் கலந்து கொள்ளும் விதத்தில் தமிழகமே வியக்கும் வகையில் நடத்திக்காட்டியது. அதன் தொடர்ச்சியாக, மாணவர்கள் மட்டுமே பங்கேற்கின்ற மதுவிலக்கு மராத்தான் போட்டியை செப்டம்பர் 5 ஆம் தேதி மதுரை புறநகர் மாவட்டத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment