தமிழ் இனத்தின் உயர்வுக்கும், எழுச்சிக்கும் வித்திட்ட திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா - பேரறிஞர் அண்ணா அவர்களின் 107ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் 2015 செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் கலந்துகொள்கிறார். இதனை ஒட்டி மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் சார்பில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் திருச்சி முதல் திருப்பூர் பல்லடம் வரை (வழி- திருச்சி, குளித்தலை, கரூர், சென்னிமலை, ஊத்துக்குளி, திருப்பூர், பல்லடம்) 324 கி.மீ. தூரம் ‘திராவிட இயக்க நூற்றாண்டு சுடர் ஏந்தி’ தொடர் ஓட்டமாக வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இன்று 2015 செப்டம்பர் 12 காலை 9 மணிக்கு தமிழ் மொழி காக்க தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முதல் தியாகி கீழப்பழூர் சின்னச்சாமி, தியாகி விராலிமலை சண்முகம் நினைவிடங்களில் சுடர் உயர்த்தி, திருச்சி மாநகர் கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா சிலை பகுதியில் ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் அ.கணேசமூர்த்தி அவர்களால் தொடங்கி வைக்க ஏற்பாடுகள் முறைப்படி செய்யப்பட்டிருந்தன.
சுடர் பயணம் நடைபெறும் வழி நெடுகிலும் திராவிட இயக்க இலட்சியங்களைப் பிரச்சாரம் செய்திடவும், கொள்கைப் பாடல்கள் வாயிலாக விழிப்புணர்வு ஊட்டவும் திட்டமிடப்பட்டு இருந்தன. இச்சுடர் ஓட்டத்திற்கும், பிரச்சாரத்திற்கும் தக்க அனுமதி வழங்கிடக் கோரி கழகத் தொண்டர் அணியின் இயக்குநரும், வடசென்னை மாவட்டச் செயலாளருமான சு.ஜீவன் அவர்கள் 4.9.2015 அன்று தமிழ்நாடு காவல்துறைதுணைத் தலைவர் (ADGP Law & order) திரு டி.கே.இராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து அனுமதிக் கடிதம் வழங்கினார். அப்போது காவல்துறைத் துணைத் தலைவர் அவர்கள் ‘சுடர் ஓட்டம் செல்கின்ற வழித்தடங்களில் உள்ள திருச்சி மாநகர், திருச்சி புறநகர், கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஆறு மாவட்டங்களின் காவல்துறை ஆணையர் / மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் விண்ணபிக்குமாறும், தாம் அவர்களுக்கு தகவல் தெரிவித்து விடுவதாகவும் ஜீவன் அவர்களிடம் கூறியிருக்கிறார். அவர் கூறியவாறு அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் விண்ணப்பித்தனர்.
இன்று 12.09.2015 காலை 9 மணிக்கு ‘திராவிட இயக்க நூற்றாண்டு சுடர்’ தொடர் ஓட்டம் புறப்பட வேண்டிய நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் அறிவுரையின் பேரில் கோட்டை காவல்நிலையம் ஆய்வாளர் ஞானவேல் அவர்கள் சுடர் ஓட்டத்துக்கு அனுமதி மறுத்து 11ஆம் தேதி இரவு பத்தரை மணிக்கு திருச்சி மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு அவர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், ‘திராவிட இயக்க நூற்றாண்டுச் சுடர்’ கொண்டு செல்லும் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறும், பள்ளி மாணவர்களுக்கு சிரமங்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். (இன்று சனிக்கிழமை பள்ளிகள் விடுமுறையாக உள்ளது)
மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி - இளைஞர் அணி சார்பில் 2005 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு எட்டு இடங்களில் இருந்தும், 2009 ஆம் ஆண்டு திருச்சி மாநாட்டுக்கு சென்னை பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் இருந்தும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி சுடர் ஏந்திய தொடர் ஓட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் எந்தவொரு செயல்பாடும் சட்டம் ஒழுங்கை பாதிப்பதாக இதுவரை அமைந்தது இல்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் - மாணவர்களோடு நான் மேற்கொண்ட நடைப்பயணங்களில் போக்குவரத்துக்கு சிறிதும் இடையூறோ, சட்டம் ஒழுங்கு பிரச்சினையோ ஏற்பட்டதே இல்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
இந்நிலையில், வருங்காலத் தமிழினத்தின் வார்ப்படங்களாக விளங்கும் மாணவர்கள், தமிழ் இனத்தின் உரிமைக்கும் உயர்வுக்கும் அடித்தளமிட்ட திராவிட இயக்க நூற்றாண்டுச் சுடரை ஏந்தி ஓடி வருவதை தடை செய்திட முனையும் தமிழக அரசின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகம் திராவிட இயக்கத்தின் தாயகம் என்பதை இளைய சமுதாயம் ஆழமாக அறிந்து உணர்வு பெறுவதை ஆட்சியாளர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதையே இந்தத் தடை உத்தரவு புலப்படுத்துகிறது. திராவிட இயக்கம் பெற்றுத் தந்த பதவிகளில் அமர்ந்துகொண்டு, அதன் இலட்சியங்களை முனை மழுங்கச் செய்திடும் வேலைகளை ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்பதனையே இந்தச் சுடர் ஓட்டத்திற்கான தடை உணர்த்துகிறது.
திராவிட இயக்கம் ஊட்டிய உணர்வுகளை இம்மண்ணில் இருந்து அகற்றிட முனையும் எதிரிகளிடம் இருந்து திராவிட இயக்கத்தைப் பாதுகாத்திட, இந்தத் தடை அக்கிரமத்தை எதிர்த்து ஆயிரமாயிரம் லட்சிய இளைஞர்கள் / மாணவர்கள் அணி திரண்டு எழுவார்கள்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் இன்றே திராவிட இயக்க நூற்றாண்டுச் சுடர் ஓட்டத்தினை தொடங்கிட கழக மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், திருச்சி மாநகர் மாவட்டட்ப பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தலைமைக் கழக வழக்கறிஞர் சுப்பாராஜ் வழிகாட்டுதலில் அவசர வழக்கு தாக்கல் செய்திட அறிவுறுத்தி உள்ளேன். நீதி கிடைக்கும், சுடர் ஓட்டம் நடக்கும் என்ற நம்பிகையுடன் காத்திருப்போம்.
பேச்சு உரிமை, நடமாடும் உரிமை உள்ளிட்ட அரசியல் சட்டம் தந்த அடிப்படை உரிமைகளை தமிழ்நாட்டில் ஜெயலலிதா அரசு காலில் போட்டு மிதிக்கிறது என்பதால்தான் சுடர் ஓட்டத்துக்குத் தடை என்கிறார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரை கட்சிக்கு வைத்துக்கொண்டு, அண்ணாவின் பெருமைக்கே துரோகம் செய்யும் வஞ்சத்தை அனைவரும் இதன் மூலம் உணர்ந்துகொள்வார்கள் என வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment