தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மண்டிக் கிடக்கின்ற சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பொதுநல வழக்காக ரிட் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த வழக்கு இன்று (11.9.2015) நீதிஅரசர் சுதாகர், நீதிபதி வேலுமணி அம்மையார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வைகோ முன்வைத்த வாதம்:
நீதிபதி அவர்களே, கடந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி அன்று, இதே நீதிமன்றத்தில் வேலிக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீங்கள் ஆணை பிறப்பித்தீர்கள். ஆனால், கடந்த இருபது மாதங்களாகத் தமிழக அரசு இதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அரசு வழக்குரைஞர்: கடந்த மாதம் 20 ஆம் தேதி இதற்காகத் தமிழக அரசு ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கின்றது.
வைகோ: இருபது மாதங்களாகத் தமிழக அரசு நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிவிட்டு, நான் வழக்குத் தொடுத்ததால், இருபது நாள்களுக்கு முன்பு கூட்டம் போட்டு இருக்கின்றார்கள். இது மக்களை ஏமாற்றுவதற்காக.
சீமைக் கருவேல மரங்கள் 1960 களில் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டன. அதனால்தான் அதற்கு அப்பெயர் வந்தது. இப்போது இந்த மரங்கள் தமிழகம் முழுமையும் பற்றிப் படர்ந்து விவசாயத்தையே அழித்து விட்டது. இம்மரங்கள் உயிர்க்காற்றை உறிஞ்சிக் கொண்டு கரிக்காற்றை வெளியிடுகின்றன. எனவே, இந்த மரங்களில் பறவைகள் கூடு கட்டாது. சுற்றுச்சூழல் நாசமாகிறது.
நீதிஅரசர் சுதாகர்: பல இடங்களில் இதை விறகாகப் பயன்படுத்துகின்றார்களே...
வைகோ: உண்மைதான். விவசாயம் நொறுங்கிப் போன நிலையில், வறுமையில் வாடும் ஏழைகள் இதை விறகாக எரிப்பதற்கு வெட்டி விற்கிறார்கள். ஆனால் இந்த மரங்கள் மொத்த வேளாண்மையையும், சுற்றுச்சூழலையும் நாசமாக்குகின்றன. கேரள மாநிலத்தில் சீமைக் கருவேல மரங்களைத் தூருடன் வெட்டி எடுத்து எரித்துப் பெரும்பாலும் அழித்து விட்டார்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நாம் அவர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டும். அங்கு ஆற்றுப்படுகைகளில் ஒரு கூடை மணலை அள்ளுவதற்கு அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் பொதுமக்களும் அனுமதிக்கவே மாட்டார்கள். தமிழ்நாட்டில் ஊழல் கொள்ளைக்காக எடுக்கப்படும் மணலைத்தான் அவர்கள் விலைக்கு வாங்கிக் கொள்கின்றார்கள்.
சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பதற்கு தரைக்கு மேல் வெட்டினால் பயன் தராது. மீண்டும் துளிர்த்து வளரும். எனவே, தூருடன் அகற்றுகின்ற விதத்தில் அரசு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் ஆணையிட வேண்டுகிறேன்.
இதுகுறித்து இந்த நீதிமன்ற அதிகார வரம்புக்குட்பட்ட 13 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு, கடந்த மாதம் 8ஆம் தேதி கடிதம் எழுதினேன். பெற்றுக்கொண்டதற்கான ரசீதை அனுப்பினார்கள். ஆனால், விருதுநகர் மாவட்ட ஆட்சியரும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக எனக்குப் பதில் கடிதம் எழுதி இருக்கின்றார்கள்.
தமிழக அரசு இந்நீதிமன்றத்தின் ஆணையைச் சட்டை செய்யவே இல்லை. எனவே, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தி ஆணையிட வேண்டுகிறேன்.
நீதிஅரசர் சுதாகர்: எவ்விதத்தில் இம்மரங்களை முழுமையாக அகற்றலாம் என்பதற்கு, நீங்களே தகவல்களைச் சேகரித்து, அந்த ஆலோசனைகளை இந்த நீதிமன்றத்தில் கொடுக்கலாம் என்று கூறி வழக்கை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment