பருவ மழை பொய்த்ததாலும், பாசன தண்ணீர் கிடைக்காததாலும், வேளாண்மை இடுபொருள் விலை ஏற்றத்தாலும், விளை பொருளுக்குரிய லாபகரமான விலை கிடைக்காததாலும், கடன் வாங்கி மேற்கொண்ட விவசாயத்தில் திடீர் நோய்கள் ஏற்பட்டு பயிர்கள் அழிவதாலும், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் திடீரென்று ஏற்படுகின்ற சூறாவளிப் பேய்க்காற்றால் அடியோடு நாசமாவதாலும் தமிழக விவசாயிகள் தொடர்ந்து தாங்க முடியாத துன்பத்துக்கும் துயரத்துக்கும் ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சூறாவளிப் பேய்க்காற்றால் பாழாகிப்போன வாழைகளுக்கு நட்டஈடு வழங்கக் கோரி விவசாயிகள் பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டும் தமிழக அரசு இன்றுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை. தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்கனவே வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்ற சங்கரன்கோவில் வட்டம், குருவிகுளம் ஒன்றியத்தில் வெங்கடாசலபுரம், இளையரசனேந்தல், வடக்குப்பட்டி, தோணுகால் கிராமப் பகுதிகளில் பலத்த காற்று மழையால் ஏறத்தாழ 20 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன.
ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாழையைப் பயிரிட்ட விவசாயிகள் தற்போது தாங்க முடியாத அதிர்ச்சியால் தாக்குண்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அவதிப்படுகிறார்கள்.
இதுபோன்று தமிழகத்தில் எங்கெல்லாம் இப்படிப்பட்ட சேதம் ஏற்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் ஏக்கருக்கு ஒரு இலட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தனது அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment