Thursday, September 10, 2015

திருவைகுண்டம் அணை தூர் வாரும் பணி கண்காணிப்புக் குழு நியமனம் வைகோ கோரிக்கையை ஏற்று, பசுமைத் தீர்ப்பு ஆயம் உத்தரவு!


திருவைகுண்டம் அணையில் தூர் வாரக் கோரி தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் இன்று (10.9.2015) விசாரணைக்கு வந்தபோது, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முன்வைத்த வாதம்:

தாமிரபரணி நதியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணையின் மூலம் 25,560 ஏக்கர் நிலத்தில் முப்போக சாகுபடி செய்யப்பட்ட நிலை கடந்த 145 ஆண்டுகளாகத் தூர் வாரப்படாததால், ஆண்டுக்கு 20 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாகியது. முப்போகம் ஒருபோக சாகுபடி ஆனது. எனவே, அணையில் தூர் வாரக் கோரித் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், இந்தியாவில் இதுவரை எந்தத் தீர்ப்பு ஆயமும் வழங்கியிராத வகையில் உன்னதமான ஆணையை நீதி அரசர் அவர்களே நீங்கள் தந்தீர்கள். 

திருவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் இருந்துதான் அகலவாக்கில் தூர் வாரப்பட வேண்டும் என்று இதற்கு முந்தைய அமர்வுகளில் நான் வலியுறுத்திய கோரிக்கையைத் தீர்ப்பு ஆயம் ஏற்றுக்கொண்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அவ்விதமே செய்யுமாறு ஆணையிட்டது. 

ஆனால், 40 நாள்கள் கடந்த நிலையிலும் பொதுப்பணித்துறையினர், அணைக்கட்டுப் பகுதியில் இருந்து வேலையைத் தொடங்கவில்லை. தமிழ்நாடு அரசின் வனத்துறை அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று, பொதுப்பணித்துறையினர் கூறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது.ஒரு மணி நேரத்திற்குள் உத்தரவு இடலாம். ஒரு மேசையில் இருந்து இன்னொரு மேசைக்குக் கோப்பு நகர வேண்டும் அவ்வளவுதான். ஆனால், அரசு அதைச் செய்யாமல், நீளவாக்கில் அணைக்கட்டில் இருந்து தொலைவில் லாரிலாரியாக மணல் அள்ளுவதால், விவசாயிகள் ஆத்திரம் அடைந்து உள்ளனர். 

மது அரக்கனைப் போலத் தமிழ்நாட்டில் மணல் கொள்ளையும் பெரும் கேடு ஆகும். எனவே, மணல் அள்ளுவதை அனுமதிக்காமல் அணைக்கட்டில் இருந்து அகலவாக்கில் தூர் வாரும் வேலையை உடனடியாகப் பொதுப்பணித் துறையினர் மேற்கொள்ள தீர்ப்பு ஆயம் ஆணையிட வேண்டுகிறேன். ஷட்டர்கள், மதகுகள் பழுது பார்க்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே முன்வைத்த கோரிக்கையையும் பொதுப்பணித் துறையினர் செயல்படுத்தவில்லை. எனவே, அவற்றைப் பழுது பார்க்கும் வேலையையும் துரிதப்படுத்த வேண்டும். 

தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளக்கூடாது என்று ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை உள்ளது. எனவே, தூர் வாருதலுக்கும் மணல் எடுப்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் குழப்பத்திற்கு இடம் இன்றித் தீர்ப்பு ஆயம் தெளிவுபடுத்துவதோடு, தூர் வாரும் பணிகளை மேற்பார்வை இட ஒரு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டுகிறேன்.

அந்தக் குழுவில், அப்பகுதியைச் சேர்ந்தவரும், பொதுநலனுக்காகப் பாடுபடுகின்றவருமான, இந்தியக் கம்யூனிÞட் கட்சியின் முன்னணித் தலைவர் நல்லகண்ணு, வாழ்நாள் எல்லாம் தாமிரபரணி விவசாயிகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ள காந்தியவாதி நயினார் குலசேகரன் அவர்களையும், இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளக் கோரியுள்ள விவசாய சங்கத்தின் பிரதிநிதியையும், வழக்கைத் தொடுத்த ஜோயல் அவர்களையும் இடம் பெறச் செய்ய வேண்டுகிறேன் எனக் கேட்டுக் கொண்டார். 

தமிழக அரசின் தரப்பில் ஒருவரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு, திரு நயினார் குலசேகரன், திரு ஆர். நல்லகண்ணு, திரு காந்திமதிநாதன், ம.தி.மு.க. வழக்கறிஞர் தவசிராஜன் ஆகியோரைக் கொண்ட கண்காணிப்புக் குழுவை அறிவித்தார். 

தூர் வாருகின்ற போர்வையில் மற்ற பகுதிகளில் மணல் அள்ளக்கூடாது என்றும், அணைக்கட்டுப் பகுதியில் இருந்து அகலவாக்கில் உடனடியாகப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும், செய்யத் தவறினால், பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அறிவித்தார். 

வழக்கு விசாரணை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இதே நாளில் காவிரிப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம், மீத்தேன், சேல் எரிவாயு எடுப்பது குறித்து பி.ஆர். பாண்டியன் தொடர்ந்த பாதுநல வழக்கில், தீர்ப்பு ஆயத்திற்கு உதவுகின்ற விதத்தில் வாதிட வாய்ப்பு அளிக்கப்பட்ட வைகோ, இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு போக அந்நியச் செலாவணியில் இந்தியாவுக்கு லாபம் அளிக்க சேல் எரிவாயு, மீத்தேன் எரிவாயு மிகவும் பயன்படும். ஆனால், தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி தீரம் அடியோடு நாசமாக்கப்பட்டு விடும் என்பதால், இதுகுறித்துப் பல புதிய ஆதாரங்கள் கிடைத்து இருக்கின்றன. அவற்றைப் பார்த்தாலே தமிழகத்திற்கு எத்தகைய பெரிய ஆபத்து காத்து இருக்கின்றது என்பதை அறியலாம் என வாதிட்டார்.

வழக்கு விசாரணை அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment